சுரங்கத் தீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூசிலாந்தில் உள்ள டெனிசுட்டனில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு சுரங்கத் தீ

சுரங்கத் தீ என்பது, பொதுவாக நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில், நிலக்கரிப் படிவுகள் நிலத்துக்கு அடியில் கனன்றுகொண்டு இருப்பதைக் குறிக்கும். இத்தகைய தீக்கள், பொருளாதார, சமூக, சூழலியல் தாக்கங்களைக் கொண்டுள்ளன. இவை பொதுவாக மின்னல், காய்ந்த புற்கள் எரிதல், காட்டுத்தீ போன்றவற்றால் ஏற்படுகின்றன. புவியின் மேற்பரப்பில் எரிந்த தீ அணைந்த பின்னரும், சுரங்கத்தினுள் தீ தொடர்ந்தும் கனறு கொண்டு இருப்பதனால் இது மிகவும் தீங்கானது. ஆண்டுக் கணக்கில் கூட சுரங்கத் தீ எரிந்து கொண்டிருக்கக்கூடும். இவை மீண்டும் அண்மையில் உள்ள காடுகளை எரியூட்டிக் காட்டுத்தீயை ஏற்படுத்தலாம். இத் தீ, சுரங்க வழியூடாகவும், நிலவியல் அமைப்புக்களில் காணப்படும் வெடிப்புக்களூடாகவும் பரவுகின்றது.

சுரங்கத் தீயினால் நச்சுப் புகைகள் வெளியேறுவதனால் மனித உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும், சூழலுக்கும் தீங்காக அமைகின்றது. அத்துடன், காந்த புல், பற்றை, காடு என்பவற்றை எரியூட்டிக் காட்டுத்தீயை ஏற்படுத்துவதனாலும், மேற்பரப்பில் உள்ள சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் முதலிய கட்டமைப்பு வசதிகள் கீழிறங்குவதனாலும் பெரும் தீங்கு விளைகின்றது. இது இயற்கையாக அல்லது மனித நடவடிக்கைகளினால் உருவாலாம். எப்படி உருவானாலும், பல சமயங்களில் சுரங்கத்தீ பல பத்தாண்டுகளாகவோ அல்லது சில சமயங்களில் நூற்றாண்டுகளாகவோ தொடர்ந்து எரியக்கூடியது. எரிபொருள் முற்றாக எரிந்து முடியும் வரை, அல்லது தீ நிரந்தரமான நிலத்தடி நீர் மட்டத்தை அடையும்வரை, அல்லது மனிதர் தலையிட்டு அணைக்கும் வரை சுரங்கத்தீ தொடர்ந்து எரியும். இவை நிலத்தின் கீழ் எரிவதால் அணைப்பதற்குக் கடினமானது என்பதுடன், பெருமளவு செலவும் பிடிக்கும். மழையாலும் அணைக்க முடிவதில்லை.

உலகம் முழுவதிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுரங்கத் தீக்கள் இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன. அதிக நிலக்கரி வளம் கொண்ட சீனா போன்ற நாடுகளில் இப் பிரச்சினை மிகவும் கூடுதலாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரங்கத்_தீ&oldid=1828839" இலிருந்து மீள்விக்கப்பட்டது