சுமித்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமித்திரா அல்லது சுமித்திரை இராமாயணக் கதையில் வரும் தசரத மன்னனின் இரண்டாம் மனைவி ஆவார். பிள்ளைப் பேறு கிட்டாதிருந்த தசரதன், பிள்ளைப் பேறு வேண்டி வேள்வி இயற்றினான். அதில் கிடைத்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பகிர்ந்தபோது சுமித்திரைக்கு இரண்டு பங்குகள் கிடைத்ததனால் அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன.[1] இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் இவரது மகன்கள் ஆவார். இவ்விருவரும் இரட்டையர்கள்.

இராமாயணக் கதையில் தசரதனின் மூத்த மனைவி கோசலையைப் போன்றோ அல்லது இளைய மனைவி கைகேயியைப் போன்றோ சுமித்திரைக்கு முக்கியமான இடம் இல்லை. எனினும், தன்னலம் அற்ற ஒரு பெண்ணாக அவள் இராமாயணத்தில் உருவகப் படுத்தப்பட்டுள்ளாள். மூத்தோனாகிய இராமனுக்கு முடிசூட்ட இருந்த நிலையில், தனது மகனுக்கு அரசுரிமை கோரிப் போர்க்கொடி தூக்கிய கைகேயியைப் போலன்றித் தனது மக்கள், மூத்தோர்களான இராமன், பரதன் ஆகியோருடைய சேவையிலேயே திருப்தியடைய வேண்டும் என அவள் விரும்பினாள்.

தசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 5. திரு அவதாரப் படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்திரை&oldid=3909401" இலிருந்து மீள்விக்கப்பட்டது