சுந்தரப்பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுந்தரபெருமாள் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுந்தரபெருமாள் கோவில் (Sundaraperumal kovil) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம் ஆகும். இது கும்பகோணத்திலிருந்து - தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளதால் முதலில் அடையாளத்துக்காக‌ செளந்தராஜ பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் மருவி சுந்தரபெருமாள் கோவிலாக ஆகியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.[சான்று தேவை] சோழர் காலத்தில் சுந்தர சோழ விண்ணகரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இப்போது மருவி சுந்தர பெருமாள் கோவில் என்று வழங்கப்படுகிறது. இந்த பெயர் மருவி வந்ததற்கு இவ்வூர் கோவிலின் பெயரும் காரணமாக இருக்கலாம். மேலும் சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் 8 கி. மீ தொலைவிலுள்ளது. இது இந்த கருத்தை வலுவூட்டுவதாக உள்ளது.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோவில் புகையிரதநிலையத்தில் எடுத்த படம்

தொழில்[தொகு]

இவ்வூரில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். குறிப்பாக ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, சம்பங்கி, காக்கரட்டான் போன்ற‌ மலர்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. மேலும் நெல் உற்பத்தியும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. இந்த ஊரை சுற்றிலும் காவிரியின் கிளை ஆறுகளான குடமுருட்டி, முடிகொண்டான், திருமலைராஜன், அரசலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாய்வதால் மிகவும் வளமாக காணப்படுகிறது. கோடைகாலத்தில் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்காத அளவுக்கு பசுமையான ஊராக உள்ளது.

முக்கிய விழாக்கள்[தொகு]

  • சித்திரை மாதம் மாரியம்மன் கோயில் பால் குடம்
  • காளியம்மன் கோயில் கஞ்சி வார்தல்

அரசு அலுவலகங்கள்[தொகு]

இந்த ஊரில் அரசு மருத்துவமனை, அரசு நூலகம், இரண்டு தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, தபால் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி, கைத்தறி கூட்டுறவுச் சங்கம், திருமண மண்டபம், கால்நடை மருத்துவமனை, வாகன வசதி, பேருந்து, புகைவண்டி நிலையம் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]