சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் இனமொழிப் பரம்பலைக் காட்டும் நிலப்படம்.

சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர் என்னும் தொடர் சீனத் தலைநிலத்திலும், தாய்வானிலும் வாழும் ஹான் சீனர் அல்லாத பிற இனத்தவரைக் குறிக்கும். மக்கள் சீனக் குடியரசு அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாச் சிறுபான்மையினரதும் மொத்தத் தொகை 123.33 மில்லியன்கள் ஆகும். இது சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் மொத்த மக்கள்தொகையின் 9.44% ஆகும். இவ்வாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையினரை விட மக்கள் சீனக் குடியரசில் மேலும் சில ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுவினர் உள்ளனர். யூத, துவான், ஒயிராத், இலி துருக்கி போன்ற இனத்தவர் இக் குழுவினருள் அடங்குவர். இவர்களைவிடச் சீனக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் வேறு குழுக்களாக உள்ளனர்.


பொதுவாக, தாய்வான் நாட்டு முதுகுடிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனவழிச் சிறுபான்மையினர் அனைவரும் சீனத் தலைநிலத்திலேயே உள்ளனர். தாய்வானில் இயங்கும் சீனக் குடியரசு, 13 தாய்வானிய முதுகுடிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. மக்கள் சீனக் குடியரசு மேற்படி 13 முதுகுடிகளையும் காவோஷான் என்னும் ஒரே குழுவாக வகைப்படுத்தியுள்ளது. ஹாங்காங், மக்காவு ஆகிய ஆட்சிப் பகுதிகள் மேற்படி இன வகைப்பாட்டு முறையைப் பயன்படுத்துவது இல்லை. அத்துடன் மக்கள் சீனக் குடியரசின் வகைப்பாட்டில் இவ்விரு ஆட்சிப் பகுதிகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

இனக் குழுக்கள்[தொகு]

மியாவோ இனக்குழுவின் ஒரு சிறு குழுவான லாங்-ஹார்ன் பழங்குடியினர். இவர்கள் சீனாவின் குயிசூ மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வாழ்கின்றனர்.

பெரும்பாலான இனக்குழுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக உள்ளன எனினும், சில குழுக்கள் ஹான் பெரும்பான்மைக் குழுவுக்கு மிகவும் ஒத்தவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான ஹுயி சீனர், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்பது தவிர வேறு வகையில் ஹான் சீனரிடமிருந்து அவர்களைப் பிரித்து அறிவது கடினம். மக்கள் சீனக் குடியரசின் வகைப்பாட்டில் அடங்கும் சில குழுக்கள் அவற்றுள் வேறுபட்ட பல குழுக்களை அடக்கியுள்ளதையும் காணமுடியும். மியாவோ சிறுபான்மையினருள் அடங்கும் பல்வேறு குழுக்கள் ஹுமொங்-மியென் மொழிகள், தாய்-கடாய் மொழிகள், சீன மொழிகள் போன்றவற்றின் பல்வேறு கிளைமொழிகளைப் பேசுபவர்களாக இருப்பதும், பல்வேறுபட்ட பண்பாட்டு வழக்குகளைக் கைக்கொள்பவர்களாக இருப்பதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட சில இனக்குழுக்கள் முற்றிலும் வேறுபட்ட பெரிய இனக்குழுக்களுடன் சேர்த்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஹைனான் மாகாணத்தின் உத்சுல்கள், ஹுயி சிறுபான்மைக் குழுவின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, சுவாங்கிங் இனம் ஹான் பெரும்பான்மையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.


ஹான் சீனர், சீனாவின் மக்கள்தொகையின் மிகக்கூடிய வீதத்தினராக இருந்தாலும், அவர்களுடைய மக்கள்தொகைப் பரம்பல் மிகவும் சீரற்றதாகக் காணப்படுகின்றது. மேற்குச் சீனாவின் பெரும்பகுதியில் ஹான் சீனர் சிறுபான்மையினராகவே உள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]