சி. பி. முத்தம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். தனது 85 வது வயதில் 14/10/09 அன்று காலமானார். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்.


கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் முத்தம்மா. மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்பின்படிப்பை முடித்தார். 32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

பெண்ணுரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு[தொகு]

ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த வெளியுறவுத்துறையில் பணிபுரிய விரும்பி அரசுபணித் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார் முத்தம்மா. வெளியுறவுத் துறையில் பணிபுரியும் அளவு கடந்த ஆர்வத்தோடு பணியில் சேர்ந்த முத்தம்மா ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு ஆளாக நேர்ந்தது.

வெளியுறவுத் துறையின் பணி விதிகளில் பிரிவு 8(2) திருமணம் செய்து கொள்வதற்குமுன் இத்துறையில் பணிபுரியும் பெண் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று சொல்கிறது. திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத்துறையில் அவளது திறமையான பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால் அப்பெண்மணி ராஜினாமா செய்ய வேண்டுமென நிர்பந்திக்கும் என்று அந்தப் பிரிவு சொல்கிறது. இதே துறையின் ஆள்சேர்ப்பு, பணிமுதிர்வு மற்றும் பதவி உயர்வு குறித்தான விதி எண் 18 திருமணமான எந்தப் பெண்ணும் இப்பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்கிறது.

இந்த இரண்டு விதிகம் பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகிய பிரிவுகக்கு எதிராக இருக்கிறதென்றும், பெண் என்பதாலேயே பணியிலமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கெதிரானதென்றும் இந்தக் காரணங்களாலேயே தனது பதவி உயர்வு தடைபட்டிருக்கிறதென்றும் எனவே இந்த பால்பாகுபாடுகளைக் களைய நீதிமன்றம் உதவ வேண்டும் எனவும் கோரி சி.பி.முத்தம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், "அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 15 அரசுப் பணியில் இருக்கும் பெண்கக்கெதிரான பாலியல் பாகுபாட்டை வலியுறுத்துகின்றன.

அரசியலமைப்புச் சட்டம், மத, இன, சாதி, பால் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் காரணமாக எவரொருவர்க்கும் பாகுபாடு காட்டக் கூடாதென வலியுறுத்தினாலும், அதன் பதினான்காம் பிரிவு சமத்துவக் கொள்கையை அறிவுறுத்தினாலும், பல சந்தர்ப்பங்களில் மனுதாரர் ஒரு பெண் என்ற அடிப்படையில் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு சிரமமடைந்துள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழுவின் உறுப்பினர்கம் பெண்கக்கெதிரான பாகுபாடு காட்டியுள்ளனர். இந்த கருத்துக்களின் ஒரு சில பகுதிகளாவது உண்மையாக இருந்தால் நிர்வாகத்தின் சிந்தனையிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதிக்கு முரணாண ஆண் ஆதிக்கம், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் கோலோச்சுகிறது என்பது புலனாகிறது. இத்தகைய பாலியல் அநீதிகள் இழைக்கப்பட்டால் அது ஒடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)ம் விதி பெண்கக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகின்றது. ஒரு பெண் திருமணத்திற்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டுமென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியமாகும். தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியை சரிவர செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறிபோகும் என்றால் அந்த விதி மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமணமான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோர முடியும் என்றால் திருமணமான பெண்ணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்தாக்கம் கொண்ட ஆணாதிக்க கலாச்சாரத்தின் தொடர்ச்சியல்லவா இத்தகைய நடவடிக்கைகள்? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்துவம் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை என்பதை அல்லவா இது காட்டுகிறது.

என்று எடுத்துரைத்த நீதிபதி மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென சொல்லி பதவி உயர்வு அளித்த வெளியுறவுத் துறை அவரை ஹேகில் இந்தியத் தூதராக நியமித்தது.

வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இத்தீர்ப்பு ஆணாதிக்கக் கருத்துகள் கொண்ட விதிகள் திருத்தியெழுத வாய்ப்பாக அமைந்தது.

நூல்கள்[தொகு]

  • Slain By The System
  • The Essential Kodava Cookbook

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சி._பி._முத்தம்மா&oldid=1681688" இருந்து மீள்விக்கப்பட்டது