சிலந்திதேள் வகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிலந்திதேள் வகுப்பு (அல்) அராக்னிடா
Arachnida
எர்ணசுட்டு எக்கல்லின் Kunstformen der Natur, 1904 என்னும் நூலில் சிலந்திதேள் (அராக்னிடா, Arachnida" )
எர்ணசுட்டு எக்கல்லின் Kunstformen der Natur, 1904 என்னும் நூலில் சிலந்திதேள் (அராக்னிடா, Arachnida" )
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: கணுக்கொடுக்கிகள் (Chelicerata)
வகுப்பு சிலந்திதேள் வகுப்பு
(அராக்னிடா, Arachnida)

Cuvier, 1812
இன்றுள்ள வரிசைகள்

உண்ணி வரிசை (Acarina)
கூழைத் தேள் வரிசை (Amblypygi)
சிலந்தி வரிசை (Araneae)
நெட்டெண்காலி வரிசை (Opiliones)
உணரிக் குறுந்தேள் வரிசை (Palpigradi)
போலித்தேள் வரிசை (Pseudoscorpion)
முகமூடி எண்காலி வரிசை (Ricinulei)
பிளவுச்சிலந்தி வரிசை (Schizomida)
தேள் வரிசை (Scorpiones)
ஒளிப்பகை எண்காலி வரிசை (Solifugae)
உணரித்தேள் வரிசை (Uropygi)

சிலந்திதேள் வகுப்பு அல்லது அராக்னிடா (Arachnida) என்பது முதுகெலும்பில்லா விலங்கு வகையில், காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்த, கணுக்கொடுக்கிகள் (Chelicerata) துணைத் தொகுதியில் உள்ள, இறக்கைகளும், உணர்விழைகளும் இல்லாத, "எண்கால் பூச்சி"கள் எனப்படும் உயிரினங்கள். காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் நிகழ்வு இவற்றின் மூச்சுக்குழல்கள் வழியாகவோ அல்லது மூச்சுப்பைகள் வழியாகவோ நடக்கும். சிலந்திதேள் வகுப்பில் பல்வேறு சிலந்திகளும், தேள்களும், உண்ணிகளும் (mites, ticks), பல்வேறு வகைப்பட்ட எண்காலிகளும் அடங்கும். அறிவியல் வகைப்பாட்டில் அராக்னிட் ( arachnid) அல்லது அராக்னிடா (Arachnida) என்று அழைக்கபடுகின்றது. கிரேக்க மொழியில் அராக்னி (άράχνη, arachne) என்றால் சிலந்தி என்று பொருள்[1].இதன் வழி பிரான்சிய மொழியில் arachnide என்றாகி, ஆங்கிலத்தில் அராக்னிடா (Arachnida) என்றும் இடாய்ச்சு மொழியில் Spinnentiere என்றும் வழங்குகின்றது.

அராக்னிடுகள் அல்லது சிலந்திதேள் வகுப்பிகள் பெரும்பாலும் நிலத்தில் அல்லது தரைமீது வாழ்வன என்றாலும், பல வகைகள் நன்னீரிலும், கடல்நீர்லிலும் (உவர்நீரிலும்) வாழ்கின்றன. சிலந்திதேன் வகுப்பு, மொத்தம் 100,000 உக்கும் மேலான இனங்கள் கொண்டுள்ள, பெரும் வகுப்பு.

நாற்புள்ளி சிலந்தி(Araneus quadratus). படத்தில் உள்ளது பெண் சிலந்தி. இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்கின்றன. ஆண்சிலந்திகளைவிட பெண் சிலந்திகள் உருவில் பெரியன

பொதுவாக சிலந்திதேள் வகுப்பிலுள்ளவை நான்கு இணையான கால்கள் (எட்டு கால்கள்) கொண்டவை, இதனால் இவை ஆறுகால்கள் கொண்ட (மூன்று இணையான கால்கள் கொண்ட) பூச்சிகளில் இருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியவை. சிலந்திதேள் வகுப்பிகள் எட்டு கால்கள் கொண்டவை என்றாலும் அவை பொதுவாக 6 இணையான கை-கால் போன்று உடம்பில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் இணைப்புறுப்புகளாக மொத்தம் 12, கொண்டவை. இவற்றுள் 8 கால்கள் போக, மீதம் உள்ள 4 இணைப்புறுப்புகள் இரையைப் பற்றவும், தற்காப்புக்காகவும், சுற்றுச்சூழலை உணரவும் தேவைப்படும் கொடுக்கு, உணர்விழை போன்றவையாக (ஆனால் உணர்விழை அல்ல) வளர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் முதல் இரண்டும் கணுக்கொடுக்காகவும் (chelicerae, செலிசெரே), அடுத்த இரண்டும் உணரிகளாகவும் (பெடிபால்ப்புகள்[2] pedipals, உணரும் முன்கைகளாக) உள்ளன. செலிசெரே எனப்படும் முன்கொடுக்கு அல்லது கணுக்கொடுக்கு, இரையைப் பற்றவும், தன் பகையினத்திடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. உணரிகள் எனப்படும் இரண்டும், இரையைப் பற்றவும், நகர்ந்து செல்லவும், இனப்பெருக்க உறுப்பாகவும் செயல்படுகின்றன. ஒளிப்பகை எனப்படும் எண்காலிகளில் முன்னிருக்கும் இரண்டு உணரிகளும் காலகள் போல் தென்படுவதால், பத்து கால்களை உடைய ஓரினம் போல் காட்சியளிக்கும்.

உணரிகள் என்னும் இணைப்புறுப்பு இருந்த போதும், இவை ஆறுகால் பூச்சிகளில் இருக்கும் உணர்விழைகள் அல்ல. சிலந்திதேள் அல்லது அராக்னிடுகளின் சிறப்பான வேறுபாடு இவற்றிற்கு உணர்விழைகளும் இறக்கைகளும் கிடையாது என்பதே. இவற்றின் புற உடல் இருபகுதி உடலமைப்பு கொண்டது. இந்த இருபகுதி உடலமைப்பு என்பதை இரு டாக்மாட்டா (tagmta) என்று கூறுவது வழக்கம்.[3]. இந்த இரு உடற்பகுதிகளும் ஒருங்கிணைந்து ஒட்டிய வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், நெஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் தலை-நெஞ்சகம் அலலது செபாலோ-தோராக்சு (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை வயிறு (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். இந்த தலை-நெஞ்சகம் அல்லது புரொசோமா என்பது, தலையும் (செஃவலான், cephalon), நெஞ்சகமும் (thorax) சேர்ந்தபகுதி. வயிறு எனப்படும் ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) முன்வயிறு, பின்வயிறு என்று பல உள்ளினங்களில் பிரிக்கப்படும். என்றாலும் உண்ணி (அக்காரி, Acari) போன்ற வகைகளில் இவ்விரு வயிற்றுப்பகுதிகளும் ஒன்றாக இணைந்தும் இருக்கும் [4]


குறிப்புகள் [தொகு]

  1. "arachnid". Oxford English Dictionary (2nd edition). (1989). 
  2. பெடி (pedi) என்றால் கால், பால்ப் (Palp) என்றால் (தொட்டு) உணர்தல்
  3. டாக்மா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு "ஒன்றை ஒழுங்கமைக்கப்பட்டது", "something arranged" என்று பொருள். டாக்மா (tagma) என்னும் சொல் ஒருமை வடிமம். டாக்மாட்டா என்பது டாக்மா என்பதன் பன்மைச் சொல்வடிவம். உசாத்துணை: Oxford English Dictionary, Second Edition, 1989
  4. Ruppert, E., Fox, R., & Barnes, R. (2007) Invertebrate Zoology: A functional evolutionary approach. 7th Edition. Thomson Learning ISBN 0-03-025982-7
"http://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்திதேள்_வகுப்பு&oldid=1351956" இருந்து மீள்விக்கப்பட்டது