சிற்றம்பலம் கார்டினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினர்
Chittampalam A. Gardiner
இலங்கை செனட் சபை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1899-01-06)6 சனவரி 1899
அச்சுவேலி, இலங்கை
இறப்பு10 திசம்பர் 1960(1960-12-10) (அகவை 61)
வேலைதொழிலதிபர்
இனம்இலங்கைத் தமிழர்

சேர் சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினர் (Chittampalam Abraham Gardiner, 6 சனவரி 1899 - 10 டிசம்பர் 1960) இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், இலங்கை செனட் சபை உறுப்பினரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.

குடும்பம்[தொகு]

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899 இல் பிறந்தவர் சிற்றம்பலம்.[1][2] தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சென்று உயர்கல்வியை சென். யோசப் கல்லூரியிலும் பெற்றார். இலத்தீன் மொழியில் தேர்ச்சி பெற்ற இவர் சென். யோசப் கல்லூரியிலேயே சில காலம் மாணவர்களுக்கு இலத்தீன் மொழி கற்பித்தார். அலோசியசு கார்மெல் காசிச்செட்டி என்பவரின் மகள் ஏஞ்சலீன் காசிச் செட்டி என்பவரைத் திருமணம் புரிந்தார். சிரில் அலோசியசு இவர்களின் வளர்ப்பு மகன் ஆவார்.

திரைப்படத்துறை[தொகு]

கார்டினர் சட்டம் பயின்று பின்னர் சுய தொழிலில் இறங்கினார்.[2] இலங்கையில் திரைப்படத் துறையில் நுழைந்தவர்களில் இவர் ஒரு முன்னோடியாவார். சிலோன் தியேட்டர்சு லிமிட்டெட் என்னும் நிறுவனத்தை 1928 செப்டம்பர் 29 இல் ஆரம்பித்தார். இந்நிறுவனம் தற்போதும் திரைப்படத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஆகும்.[2][3][4] கார்கில்ஸ், மில்லர்ஸ் உட்பட இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் இவர் வைத்திருந்தார்.[2] இலங்கையில் இரண்டாவதாகத் திரையிடப்பட்ட அசோகமாலா (1947) என்ற சிங்களத் திரைப்படத்தை இவரே தயாரித்தார். இப்படம் இந்தியாவில் தயாரானது.

இலங்கையில் வெளியிடப்பட்ட மூன்றாவது சிங்களத் திரைப்படமான கபட்டி ஆரக்சாவ ஐயும் சிலோன் தியேட்டர் நிறு­வனமே தயா­ரித்­தது. இப்படத்தில் சில இலங்கைக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன. சிற்றம்பலம் கார்டினர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. சிலோன் ஸ்டூடியோ என்ற பெயரில் ஒரு கலைக்கூடத்தையும் இவர் இலங்கையில் நிறுவினார்.

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

1947 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இவருக்கு புனித சில்வெஸ்டர் கட்டளை விருதை வழங்கிக் கௌரவித்தது. புனித கிரெகரியின் கட்டளை விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[1] 1947 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்.[2] 1951 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சேர் பட்டம் வழங்கியது.[5]

பன்னாட்டு ரோட்டரி கழகத்தில் உறுப்பினராக இருந்த சிற்றம்பலம் பல அறக்கட்டளை நிதியங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.[2] குதிரைப் பந்தயங்களிலும் இவர் ஈடுபட்டார். குதிரை ஒன்றை சொந்தமாக வைத்திருந்த இவர் 1947 ஆளுநர் கோப்பையை வென்றார்.[2]

சிலோன் தியேட்டர்சு நிறுவனத்திற்குச் சொந்தமான கொழும்பில் உள்ள ரீகல் படமாளிகை வழியாக செல்லும் பார்சன்சு வீதிக்கு இவரது நினைவாக சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை எனப் பெயரிடப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Burnand, Francis Cowley (1952). The Catholic Who's Who - Volume 35. Burns & Oates. பக். 167. http://books.google.co.uk/books?id=jg8NAAAAIAAJ. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 54. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  3. 3.0 3.1 Jayanetti, Lalith (4 அக்டோபர் 2003). "Ceylon Theatres marks 75 years". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2018-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180716213844/http://www.island.lk/2003/10/04/satmag05.html. 
  4. 4.0 4.1 Ranatunga, D. C. (30 நவம்பர் 2003). "Reeling under 75 years". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/031130/plus/6.htm. 
  5. "Fourth Supplement". The London Gazette (39107): 43. 29 சிசம்பர் 1950. https://www.thegazette.co.uk/London/issue/39107/supplement/43. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றம்பலம்_கார்டினர்&oldid=3367464" இலிருந்து மீள்விக்கப்பட்டது