சவ்வாது மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போளூரிலிருந்து ஜவ்வாது மலையின் காட்சி


கிழக்கு தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்துவருவது சவ்வாது மலைத் (ஜவ்வாது) தொடர்கள் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும்.

இம்மலை இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் என காண்போரை பரவசப்படுத்தி வருகிறது. இம்மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும், மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும் மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலை வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ஏரி படகு சவாரி, பாரா கிளைடிங் என மனதை கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இம்மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டலநதி, மிருகண்டாநதி போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகாதோப்பு அணையும் மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் கட்டப்பட்டு அவையும் சுற்றுலா தளமாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. சவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு குழாமும், பீமன் நீர்வீழ்ச்சியும் இயற்கையின் கொடைகளாகும். இம்மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைனுபாப்பு அப்சர்வேட்டரி அமைந்துள்ளது. இங்கு வானியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மையம் இந்திய வானியற்பியல் மையத்தால் (Indian Institute of Astro Physics) நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இம்மையத்திலிருந்து வானைக் காண பொதுமக்களுக்கும் அனுமதி (பிரதி சனிக்கிழமை தோறும்) அளிக்கப்படுகிறது.

சவ்வாதுமலைத்தொடர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் காட்பாடி வரையிலும் பரவியுள்ளது. போளுர் வட்டம் தென்மாதிமங்கலம் அருகே உள்ள பர்வத மலை சிவன் கோயிலும் படவேடு அருகில் உள்ள கோட்டை வரதர் ஆலயமும் இம்மலைத்தொடரில் அமைந்த சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். போளுர், செங்கம், வேலூர் , திருப்பத்தூர் வட்டங்களைச்சார்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இம்மலைத் தொடரில்அமைந்துள்ளன. இம்மலைவாழ் மக்கள் பெரும்பகுதியினர் மலையாளி என்ற பழங்குடி இனத்தவராவார்கள். இவர்களது முக்கியத் தொழில் வேளாண்மையாகும், இங்கு சாமை, வரகு, தேன் போன்றவை முக்கிய உற்பத்தி பொருட்களாகும். இம்மலையில் மிகச்சிறப்பு வாய்ந்தது சந்தன மரங்களாகும். தற்போது பெரும்பாலான சந்தன மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வனத்துறையின் பாதுகாப்பில் சில மரங்களே காணப்படுகின்றன.

இம்மலையில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடைவிழா ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும். இவ்விழாவின் போது இம்மலைவாழ் மக்களின் படைப்புகள், காட்டுப்பொருட்கள், மலர்கள், காய் கனிகள் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் என விழா சிறப்புற நடைபெறும். இம்மலைக்கு செல்ல திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் இருந்தும், வேலூரில் இருந்தும், திருப்பத்துரில் இருந்தும் பேருந்து இயக்கப்படுகிறது. யானைகள் மற்றும் வன விலங்குகள் ஆபத்து இருப்பதால் இரவு பயணம் தவிர்க்கப்படுகிறது.


அமைவிடம்: 12°35′N 78°50′E / 12.583, 78.833

"http://ta.wikipedia.org/w/index.php?title=சவ்வாது_மலை&oldid=1575332" இருந்து மீள்விக்கப்பட்டது