சுன்னி இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சன்னி இசுலாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுன்னி இஸ்லாம் (Sunni Islam) என்பது இஸ்லாமியப் பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும்.[1]இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.

வரலாறு

இசுலாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி, அதன் பொருட்டு இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராக கொண்டு ஒரு இஸ்லாமியப் பேரரசை நிறுவினார். அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் என்பவர், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்கு பிறகு மற்றொரு மாமனாரான உமர் என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு
  முகம்மது நபியின் கீழ் பேரரசு, 622-632
  ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661
  உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750

634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான அலீ என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன் உதுமான் என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்கு பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், முகம்மது நபி அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சூன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சூன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.

நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்.

உலகின் மிக பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் காலத்தது

சூன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லா கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.

சட்ட தொகுப்புகள்.

இச்சட்ட தொகுப்புகளை இயற்றியவர்கள் எட்டாம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட சமகாலத்தில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களாகும். இவர்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்லாம் பரவலாக வியாப்பித்திருந்ததாலும், நேரடியாக சமய சட்டங்களைப் பெறுவதில் அக்காலத்தைய தூர பிரதேச மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாலும் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்த மார்க்கம் கற்றறிந்த அறிஞர்கள் திருக்குர்ஆன் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டல்களிலிருந்தும் சட்டங்களை தொகுத்து வழங்கும் தன்னலம் கருதாத சேவைகளை செய்தனர். இவ்வாறான சட்ட தொகுப்பாளர்கள் நால்வர் இன்றும் அனைத்து முஸ்லிம்களாலும் மதிக்க கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய சட்டத்தொகுப்புகளாவன; ஹனபி, ஷாபி, மாலிக்கி மற்றும் ஹம்பலி என்பனவைகளாகும். இச்சட்டத் தொகுப்புகள் அரபியில் மத்ஃகப்(المذاهب) என அழைக்கப்டுகின்றன.

ஹனபி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு 702-ல் இராக்கில் பிறந்த "இமாம் அபூ ஹனிபா" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை."[2]. அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் (குர்ஆனுக்கும்) நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லை விட்டு விடுங்கள்![3]

இந்த மத்ஹப் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், துருக்கி, இராக், ரஷ்யா, மத்திய ஆசிய மற்றும் பால்கன் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.

ஷாபி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு "முகம்மது இப்னு இத்ரிஸ் அஸ்-ஷாபி" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், ரஸூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.[4] ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ, அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை” என்று முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுள்ளனர்.[5]

இது இந்தோணேசியா, கீழை எகிப்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சோமாலியா, ஜோர்டன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாட்டில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது. மேலும் இந்த மத்ஹப் திருமறையில் உள்ள ஷரியத் முறையை மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கிறது.

மாலிக்கி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு "மாலிக் இப்னு அனஸ்" என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் முகம்மது நபி (சல்) அவர்களின் இறுதி காலத்தில் அவர்களோடு இருந்த தோழர்கள் அறிவித்தவைகளைக் கொண்டு "முவத்தா" என்ற நூலை தொகுத்தார். இத்தொகுப்பு இஸ்லாத்தின் மிக பழமையான ஒன்றாகும். இதில் இருந்தே இவர் மாலிக்கி மத்ஃகபை தொகுத்தார். இவ்வாறு தொகுத்த தமது சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

"நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான், எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்."[6]

இந்த மத்ஹப் கீழை எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை தவிர மற்ற அனைத்து ஆபிரிக்க நாடுகளில் உள்ள முஸ்லிம்களாலும் பின்பற்றப்படுகிறது.

ஹம்பலி மத்ஹப்
இச்சட்டத்தொகுப்பு "அஹம்மது இப்னு ஹம்பல்" என்பவரால் தொகுக்கப்பட்டது. தாம் தொகுத்த சட்டம் பற்றி இவர்கள் கூறியுள்ளதாவது.

"என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்!"[7] இது அரேபிய தீபகற்பத்தில் உள்ள அநேக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் பின்பற்றப்படுகின்றது.


மேற்கண்டவாறு சூன்னி இஸ்லாம் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபியின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இவைகளுக்கிடையே வணக்க வழிபாட்டு முறைகளின் கிளை விடயங்களில் மட்டுமே மிக அரிதான வித்தியாசங்கள் உள்ளன.

மக்கள்தொகை

மக்கள்தொகையை பொறுத்தவரை சூன்னி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட பெரும்பான்மையாக உள்ளது. இது மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85% யை கொண்டுள்ளது. மேலும் ஈரான், இராக், லெபனான், கட்டார், பஹ்ரைன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர் வாழ் நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. இஸ்லாமிய சமயப் பிரிவுகள்
  2. அல்இன்திகா பக்கம் 145;####ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 6 பக்கம் 293;#### ரஸ்முல் முப்தீ. பக்கம் 29, 32.
  3. ஈகாழுல் ஹிமம், பக்கம் 50.
  4. தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3, பக்கம் 15;///#### ஈகாழுல் ஹிமம் பக்கம் 100
  5. ஈகாழுல் ஹிமம் பக்கம் 68
  6. ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2, பக்கம் 42; /####உஸுலுல் அஹ்காம், பாகம் 6, பக்கம் 149;//####ஈகாழுல் ஹிமம் , பக்கம் 72.
  7. ஈகாழுல் ஹிமாம், பக்கம் 113.

உசாத்துணைகள்

  • Sunna – Definitions from Dictionary.com
  • Josef W. Meri, Medieval Islamic Civilization: An Encyclopedia, 1 edition, (Routledge: 2005), p. 5
  • Hisham M. Ramadan, Understanding Islamic Law: From Classical to Contemporary, (AltaMira Press: 2006), p. 26
  • Bülent Þenay. "Ash'ariyyah Theology, Ashariyyah". 'BELIEVE Religious Information Source'. Retrieved on 2006-04-01.
  • "Maturidiyyah". 'Philtar'. Retrieved on 2006-04-01.
  • Reported by ibn al-Jawzi in Manaaqib Imam Ahmad, pg. 155-156.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்னி_இசுலாம்&oldid=3675546" இலிருந்து மீள்விக்கப்பட்டது