சந்திரா இரவீந்திரன்
சந்திரா இரவீந்திரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர்.இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். 1981இல் ஒரு கல் விக்கிரமாகிறது என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி) இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறார்.
[தொகு] எழுத்துலக வாழ்வு
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ்ஒலி ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் இரண்டாவது பரிசைப் பெற்றுக் கொண்டது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன. இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர், முன்னரைப் போல எழுதிக் குவிக்காது விட்டாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். இவரது படைப்புக்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்தவையாக அமைந்து பலரது கவனைத்தையும் பெறத் தவறுவதில்லை.
[தொகு] வெளிவந்த நூல்கள்
- நிழல்கள் - (சிறுகதைகளும் குறுநாவலும்)
- நிலவுக்குத் தெரியும் (சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பக வெளியீடு, நவம்பர் 2011, ISBN 978-93-80240-66-4)
[தொகு] வெளி இணைப்புகள்
- நிழல்கள் நூலகம் தளத்தில்
- இணையத்தளம்