சங்கம் (முச்சங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்கம்-முச்சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தது பற்றிய செய்தியை இறையனார் அகப்பொருள் நூலுக்கு நக்கீரனார் எழுதிய உரை குறிப்பிடுகிறது[1]. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நக்கீரனார் தரும் செய்திகளை இங்குள்ள பட்டியலில் காணலாம். சங்கம் என்னும் சொல் ஆய்வுக்குரியது.[2]

பிற்காலத்தில் தோன்றி தமிழ்ச்சங்கங்களும் உண்டு.

செய்தி மதிப்பீடு[தொகு]

  • புலவர் பட்டியலில் கடவுள் பெயர்களும் உள்ளன.
  • புலவர், அரசர், ஆண்டு எண்ணிக்கைகள் கலைநோக்குடன் தரப்பட்டுள்ளன.
  • புராண நூல்கள் இலக்கண நூல்களாகக் காட்டப்பட்டுள்ளன.
  • கவியரங்கேறிய பாண்டியர் மூன்றுபேர் என்று இந்த உரை குறிப்பிடுகிறது. சங்க காலப் புலவர் பட்டியலில் ஐந்து பாண்டிய மன்னர்களோடு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி முதலானோரையும் காணமுடிகிறது.
  • பட்டியலில் புலவர் எண்ணிக்கை 449 என்று உள்ளது. நம் தொகுப்பில் 473 புலவர்களைக் காணலாம். 473 புலவர்களில் 473 - 449 = 29 பேர்களில் இடைச்சங்கத்தைச் சேர்ந்தவர் என்று வரையறுத்துக் காட்டப் போதிய சான்று இல்லை.
  • "மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடாது ஒழிக என் நிலவரை" என்று நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் பாடலில் (புறநானூறு 72) பாண்டியன் அவையில் புலவர் ஒருவர் தலைமையில் பல புலவர்கள் கூடிப் பாடினர் என்னும் செய்தி வருகிறது.
  • சங்கம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் அவையம் என்னும் பொருளில் யாண்டும் இல்லை. சங்கம் என்ற சொல் இல்லை எனினும், அவை, மன்றம், புணர்கூட்டு, தமிழ் நிறை என்றவாறு பல சொற்களும் தொடர்களும் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. ஆனாலும், இவ்வமைப்பு கூடல் என்ற பெயரிலேயே அமையப்பெற்றதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர்.[3][4][5]
  • சங்கப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பரிபாடல் ஒன்றில் மட்டும் சங்கம் என்னும் சொல் வருகிறது. அங்கேயும் அது அல்பெயர் எண்ணைக் குறிப்பதாக உள்ளது.

பட்டியல்[தொகு]

குறிப்பு தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம்
சங்கம் இருந்த இடம் கடல் கொண்ட தென்மதுரை கபாடபுரம் தற்கால மதுரை
சங்கம் நிலவிய ஆண்டுகள் 4440 (37 பெருக்கல் 120) 3700 (37 பெருக்கல் 100) 1850 (37 பெருக்கல் 50)
சங்கத்தில் இருந்த புலவர்கள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள். குன்றெறிந்த முருகவேள், முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன், இத் தொடக்கத்தார் அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் இத் தொடக்கத்தார்.
புலவர்களின் எண்ணிக்கை 4449 3700 449
பாடிய புலவர்களின் எண்ணிக்கை 549 59 49
பாடப்பட்ட நூல்கள் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை இத்தொடக்கத்தன. கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் இத்தொடக்கத்தன நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை இத் தொடக்கத்தன.
சங்கம் பேணிய அரசர்கள் காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை 89 59 49
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை 7 5 3
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் அகத்தியம் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் அகத்தியம், தொல்காப்பியம்

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. "இறையனார் களவியல் உரையில் காணப்படும் முச்சங்கங்கள் பற்றிய செய்தி". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Devi, Leela (1986). History of Kerala. Vidyarthi Mithram Press & Book Depot. பக். 73. 
  3. Raghavan, Srinivasa (1974). Chronology of Ancient Bharat. 
  4. Pillai, V.J. Tamby (1911). Dravidian kingdoms and list of Pandiyan coins. Asian Educational Services. பக். 15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கம்_(முச்சங்கம்)&oldid=3746247" இலிருந்து மீள்விக்கப்பட்டது