சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சங்கம் என்னும் சொல் புலவர் குழுவைக் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் காணப்படவில்லை. [1] பரிபாடலில் சங்கம் என்னும் சொல் ஒரே ஒரு இடத்தில் பயிலப்பட்டுள்ளது. அதுவும் வரம்பில்லாத ஒரு எண்ணைக் குறிக்கிறது. ஆயின் பண்டைத் தமிழகத்தில் புலவர் குழு இல்லையா என்னும் வினா எழும். இருந்தது என்பதே அதற்கான விடை. ‘புணர்கூட்டு’ என்னும் பெயரால் அது குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது. இதனையும் சங்கம் என்னும் சொல் தோன்றிய காலத்தையும், அமைபின் பாங்கையும் உணரக்கூடிய வகையில் கிட்டியுள்ள சான்றுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

பொருளடக்கம்

புணர்கூட்டு [தொகு]

  1. நெடுஞ்செழியன் தன் அவையில் மாங்குடி மருதனாரைத் தலைவராகக் கொண்டு புலவர்கள் பாடியதைக் குறிப்பிடுகிறான் “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்” பாடல் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் [2]
  2. இந்த மாங்குடி மருதனார் இந்த நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது அவனது முன்னோர்களாகிய பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி போலவும், நிலந்தரு திருவின் நெடியோன் போலவும் இனிது வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன் என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் நல்லாசிரியர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான் எனவும் குறிப்பிடுகிறார்.[3]
  3. மாங்குடி மருதனாரின் மகன் மருதன் இளநாகனார் மதுரையில் புலவர்கள் கூடிச் ‘செதுமொழி’ (செம்மொழி)யைப் புதுமொழியாகப் படைத்ததைக் குறிப்பிடுகிறார். [4]
  4. சேர அரசன் பாலைபாடிய பெருங்கடுங்கோ கூடல் எனப்பட்ட மதுரையில் புலவர்கள் புலன் நாவால் புதிய சொற்களை வழங்கும் வேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று பொருள் தேடச் சென்ற தலைவன் தலைவிக்கு வாக்குத் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.[5]
  5. மதுரையில் நெடியோன் புலவர்களைப் ‘புணர்கூட்டு’ என்னும் அமைப்பின் கீழ் ஒன்று திரட்டி தமிழைப் பாடவைத்தான். அது போன்றதொரு ஒருங்கிணைப்பைப் புகாரில் கரிகாலன் உருவாக்கிப் புலவர்கள் தமிழைத் திறனாய்வு செய்து வளர்க்கும் பணியை மேற்கொண்டான்.[6]
  6. காவிரிப்பூம் பட்டினத்தில் மொழி வளர ஒன்றுகூடிய புலவர்களுக்குச் சோழன் கரிகாற் பெருவளத்தான் சோறு வழங்கிய செய்தி பாராட்டப்படுகிறது [7]
  7. சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பகைநாடுகளிலிருந்து தான் கொண்டுவந்த ‘கொண்டி’ச் செல்வத்தைக்கொண்டு ‘தண்டமிழைச் செறியச் செய்தான் என்று கபிலர் குறிப்பிடுகிறார் [8]

புலவர் குழுவைக் குறிக்கும் சங்கம் என்னும் சொல் [தொகு]

  1. சங்கம் பற்றிய இறையனார் களவியல் – நக்கீரர் உரைக்குறிப்பு (சங்கம் மருவிய காலம்)
  2. அப்பர் திருப்பத்தூர் சிவனை வழிபடும்போது நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்காண் – திருநாவுக்கரசர் தேவாரம் திருப்புத்துர் பதிகம் 3 எனப் பாடுகிறார். (7ஆம் நூற்றாண்டு)
  3. ஆண்டாள் தன் திருப்பாவையில் “சங்கம் இருப்பார்போல் வந்து உன்னைச் சேவித்தோம்” (22) எனப் பாடுகிறார். (8ஆம் நூற்றாண்டு)
  4. சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை (15ஆம் நூற்றாண்டு)

முதலானவை சங்கம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

பௌத்த சங்கம் [தொகு]

1. புகார் நகரத்தில் சமைய உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் சங்கம் இருந்ததாக உணரமுடிகிறது. “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” [9]
சமையத்தைக் குறிக்கும் இந்தச் ‘சங்கம்’ என்னும் சொல்லைத் தமிழ்ச்சங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட காலம் பௌத்த சமையம் தமிழகத்தில் வேரூன்றிய மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

சங்கம் என்னும் அல்பெயர் எண் (வரம்பில்லாத எண்ணைக் குறிக்கும் குறியீடு) [தொகு]

சங்கம் என்னும் சொல் பரிபாடல் நூலில் வரும் ஒரே ஒரு ஆட்சியைத் தவிர, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் இல்லை.
பரிபாடலில் வரும் அந்த ஒரே ஒரு சொல்லாட்சியும் சங்கம் என்னும் எண்ணிக்கையைக் குறிக்கிறதே தவிர, புலவர் கூட்டமைப்பைக் குறிக்கவில்லை.
  • தொன்முறை பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட்டது. பின்னர்த் தோன்றிய ஊழிக்காலங்கள் 6. இவற்றின் கால அளவை அறுதியிட முடியாது.
  1. விசும்பின் ஊழி - நெய்தல் ஆண்டு,
  2. வளி ஊழி – குவளை ஆண்டு,
  3. தீ ஊழி – ஆம்பல் ஆண்டு,
  4. பெயல் ஊழி – சங்கம் ஆண்டு,
  5. பனி ஊழி – கமலம் ஆண்டு,
  6. வெள்ள ஊழி – வெள்ளம் ஆண்டு நிலவின.[10]

தொல்காப்பியர் குறிப்பிடும் அல்பெயர் எண் [தொகு]

இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது.
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. [11]
இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர்.
சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் எங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.

ச எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
எல்லா உயிரும் க, த, ந, ப, ம ஆகிய 5 எழுத்தோடும் மொழிமுதல் ஆகும்.
‘சகரக் கிளவியும் அதனோரற்றே, அ,ஐ,ஔ அலங்கடையே’ [12]

எனவே சங்கம் என்பது தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படாத தமிழ்ச்சொல்.

எண்ணுவோம் [தொகு]

புணர்கூட்டு = சங்கம்
புணர்கூட்டு என்னும் சொல்லின் ஒப்புமை விளக்கச் சொல்லே சங்கம்.
புணர்தல் என்பது கூடுதல்.
கூட்டு என்பது கூம்பு போல் கூடுவது.
சங்கின் உருவம் கூடிக் கூம்பிய உருளைதானே?
சங்கைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ‘புரிவளை’தானே?

அடிக்குறிப்பு [தொகு]

  1. Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967. 
  2. புறம் 72
  3. “களந்தோறும் கள் அரிப்ப, மரந்தோறும் மை வீழ்ப்ப, நிணவூன் சூட்டு உருக்கு அமைய, நெய் கனிந்து வறை அர்ப்ப, குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின், பரந்து தோன்றா வியன் நகரால், பல்சாலை முதுகுடுமியின், நல்வேள்வித் துறை போகிய, தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல – இனிது உறைமதி பெரும” – மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 753 முதல்.
  4. “மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர!” (மாங்குடி) மருதன் இளநாகனர் - கலித்தொகை 68
  5. “நிலன் நாவில் திரிதரூஉம் நீன்மாடக் கூடலார் புலன்நாவிற் பிறந்தசொல் புதிது உண்ணும்பொழுது அன்றோ --- சுடரிழாய் --- வருதும் என்று உரைத்ததை” – பாலைபாடிய பெருங்கடுங்கோ -கலித்தொகை 35
  6. பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடி – பட்டினப்பாலை 169-171
  7. “புகழ் நிலைய மொழிவளர --- சோறு வாக்கிய பெருங்கஞ்சி” – பட்டினப்பாலை – 42-44
  8. “கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து” (செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் - பதிற்றுப்பத்து 63
  9. (மணிமேகலை 7-113&114).
  10. பரிபாடல் 2
  11. ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).
  12. தொல்காப்பியம் 1-2-28, 29
"http://ta.wikipedia.org/w/index.php?title=சங்கம்&oldid=1420837" இருந்து மீள்விக்கப்பட்டது