கோ. சாரங்கபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்வேள் கோ. சாரங்கபாணி
Thamizhavel G. Sarangapani
பிறப்பு ஏப்ரல் 19, 1903
திருவாரூர், தமிழ்நாடு
இந்தியா
இறப்பு மார்ச்சு 16, 1974(1974-03-16) (அகவை 70)
தொழில் தமிழ் ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர்
வேறு பெயர்கள் கோசா
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்)
Agent தமிழ் முரசு

கோ. சாரங்கபாணி (ஏப்ரல் 19, 1903 - 1974) சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றிய தமிழறிஞர் ஆவார். பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1935 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார்.[1] சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர்களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெருவோம் என்ற வழியில் சாரங்கபாணி செயல்பட்டார்.[2]

தமி­ழர் பிரதி­நிதித்­துவ சபை, தமி­ழர் சீர்­திருத்­தச் சங்­கம் ஆகிய அமைப்பு­களை நிறு­வினார். தமிழ்க் கல்­வித் துறையை அன்­றைய மலா­யா பல்கலைக்­க­ழ­கத்­தில் அமைக்க சேவையாற்றினார். இந்­தி­யர்­களை சிங்­கப்­பூர் குடி­யு­ரி­மைப் பெற ஊக்­கு­வித்தார். கல்­வி­யி­லும் வேலை­யி­லும் இந்­தி­யர்­ முன்­னேற வேண்­டும் என்று உந்­து­தல் அளித்­தார்.[3]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1903- ஆம் ஆண்டு தமிழகத்தின் திருவாரூரில் பிறந்தார். திருவாரூரில் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேசன் பரீட்சையில் தேறினார். 1924- ஆம் ஆண்டில் தமது இருபதாவது வயதில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் "முன்னேற்றம்" என்னும் பத்திரிகையில் துணையாசிரியராக தமது எழுத்துப் பணியைத் துவங்கினார். 1928 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் பெரியாரைச் சந்தித்த பிறகு சீர்திருத்தக் கருத்துகளை தீவிரமாகப் பரப்பத் தொடங்கினார். 1930 ஆம் ஆண்டில் முன்னேற்றம் பத்திரிகையின் ஆசிரியரானார். இப்பத்திரிகையில் பல சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் தொடர்து எழுதினார்.

1934-இல் "தமிழ் முரசு" செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். இப்பத்திரிகை மக்களிடம் அதிக செல்வாக்குப் பெறவே அது 1935- ஆம் ஆண்டு முதல் தினசரியாக விரிவடைந்தது. தமிழ் முரசு பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின் முற்போக்கான இலட்சியங்களையும் சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பையும் சனாதனக் கொள்கைகளையும் எழுதியது.

கோ.சா அவர்கள் 'சீர்திருத்தம்' என்ற மாத இதழையும் 'ரிபார்ம்' (Reform) என்னும் ஆங்கில மாத இதழையும், 'இந்தியன் டெய்லி மெயில்' (Indian Daily Mail) என்ற ஆங்கிலத் தினசரி செய்தி இதழையும் நடத்தினார்.

சீனப் பெண்ணான லிம் பூன் நியோவை திருமணம் செய்து கொண்டார். ராஜாராம், ஜானகிராம், ஜெயராம், பலராம் ஆகிய நான்கு மகன்களும் ராதா, ராஜம் ஆகிய இரண்டு மகள்களும் என இவரது குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் இருந்தனர். கோ.சாரங்கபாணி 1974 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதியன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், 71-ஆவது வயதில் காலமானார்.

தமிழவேள்[தொகு]

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955- ஆம் ஆண்டு கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்குத் "தமிழவேள்" எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார். ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ்த் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988 ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._சாரங்கபாணி&oldid=3817258" இலிருந்து மீள்விக்கப்பட்டது