கொட்டாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொட்டாவி
ஜோசப் துக்ரியூக்சு (நெட்டிமுறித்து கொட்டாவி விடுதல்); தன்வரைவு அண். 1783
உயிரினங்கள்முதுகெலும்பிகள்
மனித உடல் தொகுதிநரம்பு மண்டலம்
உடல்வளம்தாக்கமின்றி நலம் விளைவிப்பது
செயற்பாடுஇயங்குவகை (தன்னியல்பானது)
தூண்டுதல்அயர்வு
சலிப்பு
இறுக்கம்
தூக்க உணர்வு
பிறரிடம் இருந்தான தொற்றுவகை நரம்பன் மறிவினை
செய்முறைமுழுத்தாடையைத் (வாயைத்) திறந்து மூச்சை உள்ளிழுத்து கண்ணிமை மூடி காது முரசை நீட்டுவித்து, மூச்சை மீண்டும் வெளிவிடுதல்
கால அளவு8 நொடிகள்

கொட்டாவி (yawn) என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் அல்லது நெட்டி முறித்தல் என்பர்.

கொட்டாவி விடுதல் பெரும்பாலும் தூக்கத்துக்கு முன்னும் பின்னுமோ கடுமையான வேலைக்குப் பின்னோ, பிறரிடம் இருந்து தொற்றியோ ஏற்படுகிறது.[1] இது வழக்கமாக அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகியவற்றோடு இணைந்த நிகழ்வாகும். மாந்தரில் அடிக்கடி மற்றவரிடம் இருந்தும் கொட்டாவி தொற்றிக்கொண்டு வருகிறது. எனவே, கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. அதாவது, வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்த உடனோ, கொட்டாவியைப் பற்றிப் படிக்கும் போதோ கொட்டாவி விடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்கும் போதோ கூட ஒருவருக்கு கொட்டாவி ஏற்படக்கூடும்.[2] இது ஒருவகை நேரிய பின்னூட்டத்துக்கான எடுத்துகாட்டாகும்.[3] இந்த தொற்றிக்கொள்ளும் வகைக் கொட்டாவி சிம்பன்சி, நாய்கள், பூனைகள், பறவைகள், ஊர்வன ஆகிய உயிரினங்களிலும் அவற்றுக்கிடையிலும் கூட அமைதல் நோக்கப்பட்டுள்ளது.[4][5] தோராயமாக 20 உளவியல் காரணங்களை அறிஞர்கள் கொட்டாவி விடுதலுக்குக் கூறினாலும் இதற்கான முதன்மையன பணி பற்றிய பொதுக் கருத்தேற்பு இதுவரை எட்டப்படவில்லை.[1]

கொட்டாவியின்போது நடுச்செவியில் உள்ள செவிப்பறை இழுப்புத் தசை சுருங்குகிறது; இது தலைக்குள் கொட்டலோசையை எழுப்புகிறது. மாந்தரிலும் விலங்குக்களிலும் கொட்டாவிக்குப் பிறகு தன்னியல்பாக கைகள் கழுத்து தோள்கள், முதுகு போன்ற உடற்பகுதிகளின் நெட்டிமுறித்தலும் தொடர்கிறது.

கொட்டாவியின் சரியான கரணியங்கள் அறுதியாக அறியப்படவில்லை. உயிர்வளிக் குறைவினால் இது ஏற்படுகிறது என்ற கூற்றும் அறிவியலில் முற்றாக நிறுவப்படவில்லை.[6] பொதுவாக மூச்சு விடுவதைக் காட்டிலும் கொட்டாவி விடுகையில் உயிர்வளி குறைவாகவே உட்கொள்ளப் படுவதாகவும் சிலர் கருதுகின்றனர்.[6] இது பதற்றத்தினால் கூட விளையும் என்றும் ஒருவரின் விழிப்புணர்ச்சியைக் கூட்ட வல்லது என்றும் அதனாலேயே வானிலிருந்து மிதவைக்குடையுடன் குதிக்கும் முன்னர் கொட்டாவி ஏற்படுகிறது என்றும் சிலர் கருதுகின்றனர்.[7]

கருதுகோள்கள்[தொகு]

பெண்னின் கருப்பையில் 30 வாரக் குழுந்தை கொட்டாவி விடும் காணொளி[8]

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. ஆனால் அறுதியாக நிறுவப்படவில்லை.

  1. கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
  2. நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
  3. மூளை குளிர்வடைகிறது.[9]
  4. கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
  5. குருதியில் கரிமவளி-உயிர்வளி நிலைப்பாடு மாறுபடுதல்.
  6. ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
  7. அயர்வு
  8. அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
  9. மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்
  10. உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் அடிக்கடி வரும் கொட்டாவியானது, சூடாகிப்போன மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக உள்ளது.
  11. நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கதிகமான கரியமில வாயு, கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய பிராணவாயுவை (ஆக்சிஜன்) நுரையீரல் உள்வாங்குகிறது.

[10]

தொற்றிக் கொள்ளும் தன்மை[தொகு]

கொட்டாவி எனும் தன்னேர்ச்சி வினை தொற்றிக்கொள்ளக்கூடியது என்று கருதுகின்றனர். அதாவது, ஒருவரது கொட்டாவி "பரிவு விளைவால்" மற்றொரு நபரில் கொட்டாவியை ஏற்படுத்தக்கூடும்.[6][11] “குமர் தனியாப் போனாலும் கொட்டாவி தனியாப் போகாது” என்ற பழமொழி இவ்விளைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றொரு நபர் கொட்டாவி விடுகையில் அவரது முகத்தை (அதிலும் குறிப்பாகக் கண்களைக்) காணுதல், கொட்டாவியைப் பற்றிப் படித்தல் அல்லது எண்ணிப்பார்த்தல் ஆகியவை கூட ஒருவருக்குக் கொட்டாவி வரச்செய்துவிடுமாம்![6] [12] [13] இத்தொற்றுவினையின் முழுமையான வழி அறியப்படாவிட்டாலும், இது இறுதியில் ஆடி நரம்புக் கலங்களால் (mirror neurons) ஏற்படுவதாக நம்புகின்றனர். இக்கலங்கள் சில முதுகெலும்பிகளின் மூளையின் முற்புறணியில் (frontal cortex) அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் அதே இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளிடமிருந்து பெறும் குறிப்புகளின் விளைவாக தமது மூளையிலும் ஒத்த பகுதிகளைத் தூண்டிவிடும் தன்மையைக் கொண்டவை.[14] இத்தகு ஆடி நரம்புக்கலங்களே மனிதக் கற்கையின் அடிப்படையான பின்பற்றிப் பழகுதலின் பின்னால் இயங்குகின்றன. கொட்டாவியும் இதே வினையின் மற்றொரு வெளிப்பாடாக இருக்கலாம்.

2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளில் இவ்வகையான தொற்றுதல் ஏற்படுவது குறைவு என அறியப்பட்டுள்ளது. இதனால் கொட்டாவி பரிவு விளைவால் தொற்றிக் கொள்கிறது என்ற கருத்து வலுப்பெறுகிறது.[15]

படிவளர்ச்சி நோக்கில் கொட்டாவி ஒரு மந்தை உணர்வாக இருக்கலாம்.[16][17] ஓநாய்கள் ஒன்றாக ஊளையிடுவதைப்போல, கொட்டாவியும் கூடி வாழும் விலங்குகள் ஒரே மனநிலைக்கு வருவதற்காக இயங்குவதாக ஒரு கருத்து உண்டு. அலுப்பைப் பிற விலங்குகளுக்கு அறிவிப்பதன் வாயிலாக தூங்கும் நேரங்கள் ஒன்றாக அமைய ஏதுவாகிறது. இது பல முதனிகளில் காணப்படுவது. தீங்கு நேரும் வாய்ப்பை அறிவித்தல் குழுக் கட்டுப்பாட்டை காக்க உதவுகிறது. இது தொடர்பில் சிம்பன்சிகளிலும்[18] தட்டைவால் குரங்குகள் மீதும்[19] ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு தன்னினத்தைச் சேர்ந்த பிற விலங்குகள் கொட்டாவி விடும் காட்சியை நிகழ்படத்தில் காண்பித்ததில் தாமும் கொட்டாவி விடத் துவங்கின.

கோர்டான் காலுப்பு என்பவர் கொட்டாவி மூளையைக் குளிர்விப்பதாகக் கருதுகிறார். அதே வேளையில் கொன்றுண்ணிகள் மற்றும் போட்டிக் குழுக்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும் வகையில் எழுந்த உய்வு உத்தி இது எனவும் கருதுகிறார்.[20]

அண்மையில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கொட்டாவி மனிதர்களிடமிருந்து நாய்களுக்கும் தொற்றவல்லது என அறியப்பட்டுள்ளது! அந்த ஆய்வின்போது 29 நாய்களில் 21 நாய்கள் அவை முன்னர் அறிந்திராத நபர்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்துத் தாமும் கொட்டாவி விடத்துவங்கின. வெறுமனே வாயைத் திறப்பதைப் பார்த்தால் இவ்விளைவு ஏற்படவில்லை![21]

விலங்குகளில் கொட்டாவி[தொகு]

பெரிதாக வாயைத் திறந்து கொட்டாவி விடும் அரிமா

நாய், குதிரை பார்த்து மாந்தன் கொட்டாவி விடுகிறான்
இது எனக்கு எவ்வாறு அனைத்து விலங்குகளும் ஒரே கட்டமைப்போடு விளங்குகின்றன என்பதை உணர வைத்தது.

சார்லஸ் டார்வின், Notebook M (1838), [http://darwin-online.org.uk/content/frameset?pageseq=79&itemID=CUL-DAR125.-

           &viewtype=side 65]

விலங்குகளில் கொட்டாவி எச்சரிக்கைக் குறிகையாகப் பயன்படுகிறது. எடுத்துகாட்டக, சார்லெசு டார்வின், The Expression of the Emotions in Man and Animals எனும் தனது நூலில் பாபூன்கள் தம் எதிரிகளை அச்சுறுத்த தம் கோரைப் பற்களைக் காட்டிக் கொட்டாவி விடுவதாகக் கூறுகிறார்.[22] இதேபோல, சயாமியப் போராளி மீன்கள் அதே இனத்தைச் சேர்ந்த எதிர்பாலினத்தையோ அல்லது தன்னைப் போன்ற கண்ணாடி உருவத்தையோ காணும்போது கொட்டாவி விடுகிறது. கொட்டவிக்குப் பின்ன்னர் கடுந்தாக்குதலில் ஈடுபடுகிறது.[23] கினியா பன்றிகள் தம் வெட்டுபற்கலைக் காட்டி த்ன் ஓங்கலான அதிகாரத்தைக் காட்டவோ சினத்தைக் காட்டவோ கொட்டாவி விடுகின்றன. இத்துட்ன் மேலும் அவை பற்களை நறநறவெனக் கடிக்கின்றன.உறுமல் விடுகின்றன. நறுமனக் குறியையும் இடுகின்றன. அதேலி பெங்குவின்கள் இணைவிழைச்சு சடங்காகக் கொட்டாவி விடுவதைப் பயன்படுத்துகின்றன. பெங்குவின் இணைகள் முகத்தை எட்ட வைத்துகொண்டு, அப்போது ஆண் பெங்குவின் வாயைப் பிளந்து வான்நோக்கி காட்டியபடி பரவச நடிப்பை/பாவனையைக் காட்டுகிறது. அரசப் பெங்குவின்களிலும் இந்த பண்பு காணப்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த இருவகைப் பெங்குவின்களும் வாழிடத்தைப் பகிராவிட்டாலும், ஏன் இந்த நட்த்தையைப் பின்பற்றுகின்றனவென அறிய முயன்றுவருகின்றனர். பாம்புகளும் தம் தடைகளைச் சரிசெய்யவும் உணவுக்குப் பின்னும் மூச்சுயிர்ப்புக் காரணங்களால் கொட்டவி விடுகின்றன. கொட்டவியின்போது முதுகெலும்பிகளின் மூச்சுக்குழல் விரிவடைதல் நோக்கப்பட்டுள்ளது. நாய்கள் ஓரளவு பூனைகள் கூட அடிக்கடி மக்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்து கொட்டாவி விடுகின்றன.[4][24] உறுதியின்மையை உணரும்போதும் கூட அவை கொட்டாவிவிடுகின்றன.[25] மாந்தன் கொட்டாவி விடுவதைப் பார்த்து நாய்கள் தொற்றுவகை கொட்டாவி விடுகின்றன. நாய்கள் மாந்த்த் தொடர்பாடலை நன்கு தமக்கு தகவமைத்துக் கொள்கின்றன. இந்தப் பழக்கம் அவை கால்நடையாக்கக் காலகட்டத்தில் மாந்தரோடு வேட்டையில் நெருங்கிப் பழகியமையால் படிமலர்ச்சி வழியாக ஏற்பட்டிருக்கலாம்.[26] உயிரகத் தட்டுபாட்டின்போது மீன்களும் கொட்டாவி விடுகின்றன.[27]

பண்பாட்டில் கொட்டாவி[தொகு]

ஒரு போர்வீரன் தன் கொட்டாவியைக் காதலியிடம் மறைத்தல். ஆசுகார் புளூம் வரைந்த ஓவியம், தலைப்பு: Ermüdende Konversation அல்லது "அலுப்பான உரையாடல்".

சில பண்பாடுகள் கொட்டாவி விடுதலுக்கு ஆன்மீகச் சிறப்புப் பொருளை நல்குகின்றன. திறந்த வாய் நல்ல பொருள்சாராதவற்றை வெளியேற்றுவதாக (ஆன்மா (உயிர்) வெளியேறுவதாகவோ) கெட்டவை உள்நுழைவதாகவோ (கெட்ட ஆவிகள் உள்நுழைவதாகவோ பேய்கள் உள்நுழைவவதாகவோ) கொள்கின்றன. எனவே, கொட்டாவி விடுதல் இந்த இடர்களை விளைவிப்பதாக்க் கருதப்படுகிறது.[28] பேயோட்டிகள் கொட்டாவி வழியாக மாந்த விருந்தோம்பியிடம் இருந்து பேயோட்டும்போது பேய் அல்லது கெட்ட ஆவி வெளியேறுவதாக நம்புகின்றனர்.[29] பொது உடக்நல அக்கறையால் கொட்டாவி பற்றிய மூடநம்பிக்கைகள் உருவாகியிருக்கலாம். பாலிதோர் வர்ஜில் (அண்c. 1470–1555), தனது De Rerum Inventoribus எனும் நூலில், கொட்டாவியின்போது அச்சமூட்டும் ஆவி இருப்பதால் வாயிடம் சிலுவக்குறி கையால் வரைவது வழக்கமாகிவிட்டது; இதனால் தான் மாந்தர் சிலுவைக்குறியால் வேலியிட்டுக் காத்துக்கொள்வது இன்றுவரை வழக்கில் உள்ளது என எழுதுகிறார்.[30]

கோட்டாவி அலுப்பின் குறியாகக் கருதப்படுகிறது. மற்றவர் முன்னே விடும் கொட்டாவி அவருக்கும் தொற்றிக்கொள்கிறது. பிரான்சிசு ஆக்கின்சு 1663 இல், "கொட்டாவியின்போது ஊளை விடாதே, உன்னால் முடிந்தவரை கொட்டாவியே விடாதே, குறிப்பாக, அதுவும் நீ பேசும்போது" எனக் கூறியுள்ளார்.[31] ஜர்ஜ் வாழ்சிங்டன், "நீ இருமும்போதும் தும்மும்போதும்வெட்கப்படும்போதும் கொட்டாவி விடும்போது தனியாக உரத்த ஓசைவராமல் செய்; கொட்டாவியின்போது பேசாதே, முகவாயைக் கையாலோ கைக்குட்டையாலோ மூடித் திரும்பிக்கொள்" எனக் கூறியுள்ளார்.[32] இந்த வழக்கமான நம்பிக்கைகள் இன்றும் நிலவுகின்றன. மேசன் கூலி என்பாரின் முழக்கம் "முரணெதிர்ப்பை விடக் கொட்டாவி கூடுதலாக நிலைகுலையச் செய்கிறது" என்பதாகும். வழக்குமன்றத்தில் உரத்துக் கொட்டாவி விட்டால் மன்ற அவமதிப்பாக்க் கருதி தண்டனைகள் தரப்படும்.[33]

தமிழ் இலக்கியத்தில்[தொகு]

கொட்டாவி விடுவதைத் தமிழில் ஆவலித்தல், அங்கா, ஆவிதல் என்றும் வழங்கியுள்ளனர்.[34] சீவக சிந்தாமணி, திருவாசகம், ஆசாரக்கோவை முதலிய பல நூற்களில் கொட்டாவியைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.[35] பிங்கல நிகண்டு இதை ஒரு மெய்க்குற்றம் என்கிறது.[35]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Anderson, James R.; Meno, Pauline (2003). "Psychological Influences on Yawning in Children". Current Psychology Letters 2 (11). http://cpl.revues.org/index390.html. 
  2. Camazine, Deneubourg, Franks, Sneyd, Theraulaz, Bonabeau, Self-Organization in Biological Systems, Princeton University Press, 2003. ISBN 0-691-11624-5 --ISBN 0-691-01211-3 (pbk.) p. 18
  3. Camazine, Deneubourg, Franks, Sneyd, Theraulaz, Bonabeau, Self-Organization in Biological Systems, Princeton University Press, 2003. ISBN 0-691-11624-5, ISBN 0-691-01211-3 (pbk.) p. 18.
  4. 4.0 4.1 Shepherd, Alex J.; Senju, Atsushi; Joly-Mascheroni, Ramiro M. (2008). "Dogs catch human yawns". Biology Letters 4 (5): 446–8. doi:10.1098/rsbl.2008.0333. பப்மெட்:18682357. Lay summary – BBC News (August 5, 2008). 
  5. Madsen, Elanie E.; Persson, Tomas; Sayehli, Susan; Lenninger, Sara; Sonesson, Göran (2013). "Chimpanzees Show a Developmental Increase in Susceptibility to Contagious Yawning: A Test of the Effect of Ontogeny and Emotional Closeness on Yawn Contagion". PLoS ONE 8 (10): e76266. doi:10.1371/journal.pone.0076266. பப்மெட்:24146848. Bibcode: 2013PLoSO...876266M. Lay summary – LA Times (October 16, 2013). 
  6. 6.0 6.1 6.2 6.3 Provine RR (2005). "Yawning". American Scientist 93 (6): 532. doi:10.1511/2005.6.532. http://www.americanscientist.org/issues/feature/yawning. பார்த்த நாள்: 2008-11-23. 
  7. New Scientist
  8. Study on fetal yawning. Plosone.org. doi:10.1371/journal.pone.0050569.g001. 
  9. Gordon G. Gallup.Good Morning America – The Science of Yawning (July 30, 2007)[TV-Series].USA:ABC.
  10. "கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன?: நீண்டகால மர்மம் விலகியது". Archived from the original on 2015-09-01. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
  11. The website by Émilie attempts to prove this.
  12. Provine RR (1986). "Yawning as a stereotyped action pattern and releasing stimulus". Ethology 72: 109–122. 
  13. "The Quest to Design the Perfect Yawn : NPR".
  14. V.S. Ramachandran, "Mirror Neurons and imitation learning as the driving force behind "the great leap forward" in human evolution". பார்க்கப்பட்ட நாள் 2006-11-16.
  15. Senju A, Maeda M, Kikuchi Y, Hasegawa T, Tojo Y, Osanai H (2). "Absence of contagious yawning in children with autism spectrum disorder". Biol Lett 3: 706. doi:10.1098/rsbl.2007.0337. பப்மெட்:17698452. 
  16. Schürmann et al. (2005). "Yearning to yawn: the neural basis of contagious yawning.". NeuroImage 24 (4): 1260–1264. doi:10.1016/j.neuroimage.2004.10.022. பப்மெட்:15670705. 
  17. Platek et al. (2005). "Contagious Yawning and The Brain.". Cognitive Brain Research 23 (2-3): 448–52. doi:10.1016/j.cogbrainres.2004.11.011. பப்மெட்:15820652. )
  18. Anderson JR, Myowa-Yamakoshi M & Matsuzawa T (2004). "Contagious yawning in chimpanzees.". Proceedings of the Royal Society of London B: Biological Sciences 271: S468–S470. doi:10.1098/rsbl.2004.0224. பப்மெட்:15801606. 
  19. Paukner A & Anderson JR (2006). "Video-induced yawning in stumptail macaques (Macaca arctoides)". Biology Letters 2 (1): 36–38. doi:10.1098/rsbl.2005.0411. பப்மெட்:17148320. 
  20. Gordon G. Gallup.Good Morning America – The Science of Yawning (July 30, 2007)[TV-Series].USA:ABC.
  21. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7541633.stm Retrieved August 7th 2008
  22. Chadwick-Jones, John K. (1998). Developing a social psychology of monkeys and apes. Taylor and Francis. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86377-820-8. https://books.google.com/?id=SDiB_dDG8vYC&pg=PA48&dq=baboon+yawn&q=. 
  23. Baenninger R (1987). "Some comparative aspects of yawning in Betta splendens, Homo sapiens, Pantera leo, and Papio sphinx". Journal of Comparative Psychology 101 (4): 349–354. doi:10.1037/0735-7036.101.4.349. https://archive.org/details/sim_journal-of-comparative-psychology_1987-12_101_4/page/349. 
  24. "Why Do Cats Yawn". CatHealth. பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.
  25. Rugaas, Turid (2005). "Yawning". On Talking Terms With Dogs: Calming Signals. Wenatchee: Dogwise. பக். 25–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-929242-36-8. https://books.google.com/books?id=tB7tONlHCVQC&pg=PA25. 
  26. [1]
  27. Fuller, Mark. "Capturing Fish Yawns". DPG (Dive Photo Guide). பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
  28. Walusinski, O. (2004). "Yawning Comparative study of knowledge and beliefs". Bmj.com. p. 328:963.2.
  29. Cruz, Gilbert (16 Mar 2009). "The Story of a Modern-Day Exorcist". Time. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
  30. Iona Opie and Moira Tatem, A Dictionary of Superstitions (Oxford: Oxford University Press, 1992), 454.
  31. Hawkins, Francis Youth's Behavior, or, Decency in Conversation amongst Men (1663) quoted in Mencken, H.L.. A New Dictionary of Quotations on Historical Principles from Ancient and Modern Sources New York: Vintage, 1942[page needed]
  32. Washington, George; Conway, Moncure Daniel (1890). George Washington's Rules of civility: traced to their sources and restored. University of California. பக். 59. https://books.google.com/books?id=_bZEAAAAIAAJ&pg=PA59&dq=If+You+Cough,+Sneeze,+Sigh,+or+Yawn,+do+it+not+Loud+but+Privately;+and+Speak+not+in+your+Yawning,+but+put+Your+handkercheif+or+Hand+before+your+face+and+turn+aside#v=onepage&q&f=false. 
  33. Liu, Caitlin (April 20, 2005). "Sleepy Juror Gets Rude Awakening". Los Angeles Times. http://articles.latimes.com/2005/apr/20/local/me-yawn20. 
  34. Fabricius, Johann Philipp (1972). J. P. Fabricius's Tamil and English dictionary. rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF&table=fabricius. 
  35. 35.0 35.1 சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF&matchtype=exact&display=utf8. 

மேலும் படிக்க[தொகு]

  • Provine, Robert R. Curious Behavior: Yawning, Laughing, Hiccupping, and Beyond (Harvard University Press; 2012) 246 pages; examines the evolutionary context for humans.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yawning
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டாவி&oldid=3551569" இலிருந்து மீள்விக்கப்பட்டது