கொடிவேரி அணைக்கட்டு

ஆள்கூறுகள்: 11°28′23″N 77°17′47″E / 11.47306°N 77.29639°E / 11.47306; 77.29639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடிவேரி அணை
நாடுஇந்தியா
அமைவிடம்பெரியகொடிவேரி, கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று11°28′23″N 77°17′47″E / 11.47306°N 77.29639°E / 11.47306; 77.29639
நோக்கம்நீர்ப்பாசனம்
நிலைபயன்பாட்டில் உள்ளது
உரிமையாளர்(கள்)தமிழக அரசு

கொடிவேரி அணைக்கட்டு (Kodiveri Dam) பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள[1] பெரியகொடிவேரியில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில்; சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

1125ஆம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால்[2][3][4] கட்டப்பட்டது. கொடிவேரியில் பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலிருந்து 10 கி.மீ வடக்கே உள்ள கல்கடம்பூரில் (கம்பத்ராயன் மலையில்) இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் (போய இன மக்களின் ஒரு துணை பிரிவு)[5] சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர்.[6]

சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற்பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடி யும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம். இந்த முறை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.[6]

மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், ‘‘பண்ணாரி அம்மனும் நஞ்சுண்டேஷ்வரரும் நான் அவ்விடம் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ அங்கே வர மாட்டோம்’’ என்று சொல்கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது.[6]

சொற்பிறப்பியல்[தொகு]

முதல் கருத்து[தொகு]

கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்பெயர் மருவி கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது.[6]

இரண்டாம் கருத்து[தொகு]

'கொடிவரி' என்னும் சொல் மருவி கொடிவேரி என்று அழைக்கப்படுகிறது. 'கொடிவரி' என்றால் வரிப்புலி என்ற பொருள்படும். இந்த அணை அமைந்த காட்டுப்பகுதியைச் சுற்றி புலிகள் பல வாழ்ந்ததால் இந்தப்பெயரால் அழைக்கப்படுகிறது[சான்று தேவை].சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் வரும் பாடலில் கொடுவரி பற்றி கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.


"கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி"

பொருள்: கொங்குநாட்டின் ரத்தம் தோய்ந்த போர்க்களத்தில் போரிட்ட சோழர், புலி கொடியையும் (கொடுவரி); பாண்டியர், மீன் கொடியையும் (கயற்கொடி) போரில் தோல்வியுற்று விட்டுவிட்டு சென்றனர்.

கட்டுமான தொழில்நுட்பம்[6][தொகு]

கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.

ஆற்றிற்கு இணையாக வெட்டப்பட்ட கால்வாய்கள்[தொகு]

அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன.

உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி (Helsinki Rules),

  • ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது.
  • குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும்.
  • ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது.

ஆனால், அன்றைக்கே தமிழ் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.

தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று; அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும்.

அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.

மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங்கராயன் அணைக்கட்டு.

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்று சேர்கிறது.

மணல்போக்கி தொழில்நுட்பம்[தொகு]

அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.

இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு தூர்த்து வைத்திருக்கிறார்கள். இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது.

தகவல்கள்[தொகு]

தமிழ் திரைப்படங்கள் இங்கு பல காட்சிகளை படமெடுத்துள்ளனர். தமிழ் மொழித் திரைப்படமான சின்னத் தம்பியின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன. இங்கு எமரால்டு விருந்தினர் விடுதி, சத்தியமங்கலம் சாலையில் உள்ளது. பவள மலை கோவிலில் திருமணங்கள் நடைபெறுகின்றன. பி. கே. ஆர் மகளிர் கல்லூரி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொடிவேரி அணைக்கட்டில் குளித்துவிட்டு சாப்பிட அங்கு மீன் உணவு சமைத்துத் தருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கொடிவேரி அணைக்கட்டு
  2. "Kodiveri Dam built by Semba Vettuvan Jayangondasola-Kongalvan". Archaeological Survey of India. https://books.google.co.in/books?id=QQluAAAAMAAJ&q=kongalvan&dq=kongalvan&hl=en&sa=X&ved=0CCAQ6AEwAWoVChMImLiUkuLsxwIVUhqOCh3aUAF2. 
  3. "கொடிவேரி அணையை கட்டி நீர்ப் பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்". தினமணி. http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/06/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA/article2843598.ece. பார்த்த நாள்: June 1, 2015. 
  4. "கொடிவேரி அணையை கட்டி நீர்ப்பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்.". தினகரன் இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 23, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923214838/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=460063&cat=504. பார்த்த நாள்: June 1, 2015. 
  5. விக்கிபீடியாவின் பக்கம்[தொடர்பிழந்த இணைப்பு]போயர்.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "தன்னைத்தானே தூர்வாரிக் கொண்ட அதிசய அணைகள்!". தி இந்து. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8034022.ece?ref=relatedNews. பார்த்த நாள்: December 27, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிவேரி_அணைக்கட்டு&oldid=3893677" இலிருந்து மீள்விக்கப்பட்டது