கயிலை மலை
| கைலை மலை | |
|---|---|
| உயரம் | 6,638 மீட்டர்கள் |
| அமைவிடம் | திபேத் (இமயமலை தொடர்) |
| தொடர் | இமயமலை |
| ஆள்கூறுகள் | |
கைலை மலை அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர் ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும் சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார். இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன் கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கையாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
கைலாச யாத்திரை [தொகு]
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
மலையேற்றம் [தொகு]
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனித தலமாக கருதபடுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.