கே. கோவிந்தராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. கோவிந்தராஜ்
பிறப்புநவம்பர் 21, 1949
மாத்தளை, இலங்கை
இறப்புபெப்ரவரி 2, 2009(2009-02-02) (அகவை 69)
அறியப்படுவதுமலையக எழுத்தாளர்

கே. கோவிந்தராஜ் (நவம்பர் 21, 1949 - பெப்ரவரி 2, 2009) இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரங்கியலாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளையில் பிறந்த கோவிந்தராஜ், மாத்தளை அங்கும்புற தோட்டப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும், என்சல் கொல்ல, றம்புக்எல, முஸ்லிம் மகா வித்தியாலயங்களிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

எழுத்துலகில்[தொகு]

பாடசாலை நாட்களிலேயே வாசிக்கின்ற பழக்கம் இவரிடம் நிறைய இருந்திருக்கின்றது. தினபதி பத்திரிகை 1967 இல் ஆரம்பித்த தினமொரு சிறுகதைத் திட்டத்தில் இவரது முதல் சிறுகதை திருந்திய உள்ளம் என்ற பெயரில் 1968 இல் வெளிவந்தது.

பின்னர் 1970 இல் வீரகேசரியில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். 1981 வரையிலான ஒரு பத்தாண்டுகள் வீரகேசரிக்குள் பணியாற்றினாலும் எழுத்துலகில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வீரகேசரியின் யாழ்ப்பாணக் கிளையில் இவர் பணியாற்றிய போது யாழ் பல்கலைக்கழகத்தின் மலையக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் இணைந்து இயங்கினார். சிரித்திரன் சஞ்சிகையில் கங்குலன் என்னும் பெயரில் ‘குன்றிலிருந்து’ என்னும் ஒரு மலையகப் பகுதியை செய்து வந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் கொழும்பு வந்த பிறகு தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுடர், காங்கிரஸ், கதம்பம் என்று பல பத்திரிகைகளில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கதம்பம் இதழில் மலைகளின் பின்னால் என்னும் பகுதியையும் தினகரன் வாரமஞ்சரியில் கங்குலன் பக்கம் என்னும் பகுதியையும் செய்தார்.

கோவிந்தராஜின் முதல் நூலாக வெளிவந்தது பசியா வரம் என்னும் அவருடைய சிறுகதைகள் அடங்கிய நூல். 1996 இல் வெளிவந்த இந்த நூலுக்கு மத்திய மாகாண சாகித்திய விருதும், யாழ் இலக்கிய வட்டத்தின் சான்றிதழும் கிடைத்துள்ளன.

தொலைக்காட்சிகளில்[தொகு]

கோஒவிந்தராஜ் எழுதிய மலையோரம் வீசும்காற்று என்னும் தொலைக்காட்சித் தொடர் நாடகம் 12 வாரங்கள் ரூபவாகினியில் தொடராகக் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாப்பிள்ளை வந்தார் என்னும் மூன்று வாரத் தொடர், அரும்பு; மனிதர்கள் நல்லவர்கள் திருப்பம், புதுக்குடும்பம், ஆகிய தொலைக்காட்சி நாடகங்கள் இவரது பெயரைப் புகழடையச் செய்தன.

சக்தி தொலைக்காட்சியில் நிஜத்தின் நிழல் என்னும் தனித்தனி நாடகத் தொடர் 16 வாரங்கள் ஒளிபரப்பானது.

மேடை நாடகங்கள்[தொகு]

வானொலி தொலைக்காட்சிகளை விடுத்து மேடை நாடகங்களையும் இவர் எழுதித் தயாரித்துள்ளார். கவின் கலைமன்றம் இவருடைய நாடகங்களை மேடை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் நாடக விழாவில் இவருடைய ‘தோட்டத்து ராஜாக்கள்’ மூன்றாவது பரிசினையும் (1996) கல்வாத்துக்கத்தி (1998) முதற் பரிசினையும் வெளிச்சம் தெரிகிறது (2002) மூன்றாவது பரிசினையும் பெற்றுக் கொண்டன.

மலை நாட்டு எழுத்தாளர் மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிய கோவிந்தராஜ் கவின் கலைமன்றத்தின் செயலாளராகவும் பணிபுரிந்தவர்.

மறைவு[தொகு]

வீரகேசரியின் ஞாயிறு பதிப்பில் பணியாற்றும் வாய்ப்பினை இரண்டாவது தடவையாக 2008 இறுதியில் பெற்ற இவர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலான சிகிச்சைகள் வெற்றியடையாமல் போக அமரத்துவம் எய்தினார். இவருக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கோவிந்தராஜ்&oldid=3241467" இலிருந்து மீள்விக்கப்பட்டது