குல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குல்லை மலர் வெண்மையானது. கோடைக்காலத்தில் பூக்கும். ஆண்களும் பெண்களும் இதனைத் தனியாகக் கட்டியும் வேறு சில மலர்களோடு சேர்த்துக் கட்டிடியும் அணிந்துகொள்வர். [1] இந்த மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் இவை.

குல்லை வெண்ணிற மலர்
விறலியரின் பற்கள் பனைநுங்கு போல வெண்மையாக இருந்தனவாம். அந்தப் பற்களைப் போல குல்லைப் பூக்கள் முல்லைநிலத்தில் பூத்துக்கிடந்தனவாம். [2]
வையை ஆற்றில் வந்த மலர்களில் ஒன்று குல்லை. [3]
கோடையில் பூக்கும்
வெயிலின் கொடுமையால் குல்லைப்பூ கரிந்துபோயிற்றாம். ‘கோடெரி’ என்னும்பூ நைந்துபோயிற்றாம். [4]
மகளிர் கூந்தலில் சூடும் பூ
முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்று குன்றுதோறாடல். குன்றத்தில் முருகனுக்காகக் குரவைக்கூத்து ஆடும் மகளிர் குல்லைப்பூவை வைத்துக் கூந்தலை முடித்திருந்தனராம். [5]
ஆண்கள் மாலையில் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பூ
தினைப்புனம் காக்கச் சென்ற ஒருத்தி கிளிகள் தினைக்கதிர்களைக் கிள்ளிச்செல்வதை ஓட்டவில்லையாம். அவள் தன்னைக் கவர்ந்தவனைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தாளாம். அவன் குல்லை, குளவி, கூதளம், குவளை, இல்லம் என்னும் மலர்களால் தொடுத்த மாலை அணிந்திருந்தானாம். [6]
ஏறு தழுவும் பொதுவர் சூடிக்கொண்ட பூக்களில் ஒன்று குல்லை. (பிற: கொன்றை, காயா, வெட்சி, பிடவம், தளவம், குருந்து, கோடல், பாங்கர்) [7]
வடுகர் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.
சங்ககால வடுகர் குல்லைப்பூக் கண்ணியை தலையில் சூடிக்கொள்வார்களாம். அவர்களோடு போரிட்டு வென்ற ‘கட்டி’ என்னும் அரசன் நாட்டுக்கு அப்பால் தமிழ் அல்லாத மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனராம். [8]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. குல்லை மலரைப் புனத்துளசி என்கின்றனர். இது சூடும் பூ அன்மையானும், வெணமை நிறம் அன்மையானும் புனத்துளசியாகக் கொள்ள முடியவில்லை.
  2. சிறுபானாற்றுப்படை 29
  3. பரிபாடல் 12-79
  4. பொருநராற்றுப்படை 234
  5. திருமுருகாற்றுப்படை 201
  6. நற்றிணை 376-5
  7. கலித்தொகை 103-3
  8. குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேஎம் - குறுந்தொகை 11-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்லை&oldid=1088723" இலிருந்து மீள்விக்கப்பட்டது