அ. குமாரசாமிப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமாரசாமிப்புலவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


அ. குமாரசுவாமிப் புலவர்

சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்
பிறப்பு குமாரசுவாமி
ஜனவரி 18, 1854
சுன்னாகம், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு மார்ச் 23 , 1922
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பிற்கான
காரணம்
வயிற்றுழைவு நோய்
தேசியம் இலங்கைத் தமிழர்
கல்வி தமிழ் பண்டிதர்
அறியப்படுவது சைவசமய மறுமலர்சிக்கு வித்திட்டவர்
சமயம் சைவம்
வாழ்க்கைத் துணை சின்னாச்சியம்மை
பிள்ளைகள் அம்பலவாணபிள்ளை, முத்துகுமாரசுவாமிபிள்ளை, விசாலாட்சியம்மை

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - 1922, சுன்னாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.

பொருளடக்கம்

[தொகு] பிறப்பு

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப்புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மையரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளை பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்[1].

[தொகு] கல்வி

குமாரசுவாமிக்கு ஐந்து வயதானதும், தந்தையார் குலகுருவான வேதாரணியம் நாமசிவாய தேசிகரை அழைத்து இவருக்கு ஏடு தொடக்குவித்தார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார். முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மற்றும் சுன்னாகம் மு. வைத்தியநாதபிள்ளை ஆவர். இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை வரைவதிலும், சொற்பொழிவு செய்வதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று என்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்[2].

பாரேறு சுன்னைக் குமார சுவாமிப் புலவனுக்கே
ஏரே இடுகுறி யாகிப் புலவரெனும் பெயர்தான்
பாரேறு மற்றைப் புலவருக்குக் காரணப் பண்புறலற்
சீரே இடுகுறி காரண மாகித் திகழ்ந்ததுவே.

[தொகு] நாவலருடன் தொடர்பும் வடமொழிக் கல்வியும்

சுன்னாகம் நூலகவளாகத்தில் அமைந்துள்ள குமாரசாமிப்புலவரின் சிலை

புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாட்டி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு விமர்சையான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பை பெற்றார். நாவலருடைய சைவவேடப் பொலிவழகும், நாவன்மையும், கல்வியறிவு மாட்சியும், தன்னலமற்ற சிந்தையும், அஞ்சா நெஞ்சமும் புலவரின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. இதையடுத்து நாவலர் சைவ சொற்போலிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரகவிராயாரின் வழிதோன்றல்தான் புலவறேன்றறிந்து, அன்புடன் வரவேற்று, புலவரின் தமிழ் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவரவர்கள் நாவலர் மீது கூறிய பின்வரும் சரமகவிகள் நன்கு விளக்கும்..:-[1].

பின்முடுகு வெண்பா

என் கவிதை என் கடிதம் யார்க்கும் இனிதென்று 
நன்குறவே பாராட்டும் நாவலனார் - எங்கேயோ
கங்கைமுடிச் சங்கரன்பொற் கஞ்சமலர்ச் செஞ்சரண்விட்டு
இங்குவர வுங்கருத்தோ என்.

வினாவுத்தர வெண்பா

ஐந்தின்பின் ஆவதென்ன? ஆனனத்தின் பேரென்ன?
முந்து நடுவின் மொழியென்ன? - இந்திரற்கு 
மாறுகொண்டோன் பேரென்ன? வாக்கின் மிகவல்ல 
ஆறுமுக நாவலனே யாம்.

கலித்துறை

கல்விக் களஞ்சியம் கற்றவர்க் கேறு கருணைவள்ளல்
சொல்வித்து வப்பிர சாரகன் பூதி துலங்குமெய்யன் 
நல்லைப் பதியினன் ஆறு முகப்பெரு நாவலனுத் 
தில்லைப் பதியினன் நடராசன் சேவடி சேர்ந்தனனே. 

நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும்,நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார். மேலும் சைவசித்தாந்த அறிவை பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல்க் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார். இச்செய்யுளை கிழே காட்டுதும்.

தூய மயிலணி சுப்ர மணியனைத் தூநமச்சி
வாய குருவை முருகேச பண்டித மாமணியைப்
பாய வடகலை தேர்நாக நாத சபாமணியைக
காய மொழி மனஞ் சேர்த்துதும் நங்கண் மணிகளென்றே.

[தொகு] வேறு புலவரை நாடுதல்

புலவரின் தமிழ் குறவர் முருகேச பண்டிதர் தமிழகம் சென்ற சிறு காலத்தில், கல்விக்கு ஊக்கம் அளித்த நாவலரும் இறந்ததால், புலவர் தனக்குள்ள இலக்கியவிலக்கண சந்தேகங்களை கேட்டுத் தெளியும் பொருட்டு வேறு புலவர்களை நாடவேண்டியதாயிற்று. தமிழ் இலக்கியவிலக்கணம், சைவசித்தாந்தம் முதலியவற்றில் ஏற்ப்பட்டசந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு முறையே அளவெட்டி கனகசபைப் புலவரிடமும், இணுவில் நடராசையரிடமும் வினாவித்தெளிந்தார். புலவர் தனக்கு கம்பராமயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய கம்பராமயண கருப்பொருளுரை என்னும் நூலை அக்காலத்தில் யாழ்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சிட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சிட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் கம்பராமயண கருப்பொருளுரை என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார். அச்சிட்டுகவியை கிழே ஈண்டு தருதும்:.:-[1]..

செம்பதும மலரோடை தங்குயாழ்ப் பாணமாந்
தேசத்தோர் பாக மாகி
திகழ்கின்ற சுன்னாக நகரமயி லணியில் 
தென்கலை பயின்று வாழ்வோன் 
பம்புகவி பாடுறுங் குமாரசுவா மிப்பெயர்கொள்
பண்டிதன் வரையு மோலை 
பாவலர்கள் நாவலர்கள் காவலர்கள் கொண்டாடு 
பாரதிபன் பிரபு திலகன் 
தும்பிபொது வேயழைத் திடவருள் புரிந்திடுந்
தோன்றலுக் கன்பு மிக்கோன்
துரைச்சாமி மூப்பனேன் றுரைபெறு நிருபன்கோன்
தூயமகிழ் வோடு காண்க 
கம்பரா மாயணக் கருட் பொருட் பிரதியைக் 
காண்பதோர் வாஞ்சை யுள்ளேன் 
காவலா ஒருபிரதி ஆவலோ டுதவியெக்
காலமும் வாழி நீயே.

[தொகு] ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் ஆசிரியர் பணி

சைவத் தொண்டும் தமிழ்த் தொண்டும் செவ்வனே ஆற்றிப் பெரும்புகழ் படைத்த ஆறுமுகநாவலர் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழ்வள்ளலாக திகழ்ந்த சி. வை.தாமோதரம்பிள்ளை அவர்கள், 1876 ஆம் ஆண்டு ஆவணி பத்தாம் நாள் அன்று ஏழாலையில் சைவபிரகாச வித்தியாசாலையை நிறுவினார் என்பதை புலவரின் தமிழ் குரவராகிய முருகேச பண்டிதர் கூறிய பின்வரும் வெண்பாவின் மூலம் நாம் அறியலாம்.

தாது வருடம் தனியா வணிபத்தாந்
தேதி புதவாரம் தீபநாள்- ஓதுபுகழ் 
தாமோ தரேந்திரனார் தர்மவித்தி யாசாலை 
நாமாரம் பஞ்செய்த நாள்.

ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் முருகேச பண்டிதரும் புலவரும் முறையே தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பணியமர்த்தப்பட்டனர். 1878 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகேச பண்டிதர் தமிழகம் செல்ல நேரிட்டதால் புலவரவர்களை தலைமை ஆசிரியராக பணியமர்த்தினார் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்கள். புலவரின் புலமையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்கள்,புலவரிடம் தனது பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அரசு பணி நிமித்தம் தமிழகம் பயணமானார். ஆறுமுகநாவலர், முருகேச பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார் மற்றும் வித்துவசிரோன்மணி ச. பொன்னம்பலபிள்ளை போன்ற மூத்த அறிஞர்களால், ஆண்டுதோறும் இப்பாடசாலை மாணவர்களின் திறமை சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளைப் பற்றிய அறிக்கைகள் சென்னைப்பட்டணத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு அனுப்பப்பட்டது. புலவரின் கற்பிக்கும் திறமையால் தமது பாடசாலை வளர்ச்சி அடைவதை, நேரில் பார்த்தும் சோதனையறிக்கைகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி எய்திய தாமோதரம்பிள்ளை அவர்கள் புலவர் மீது மிக்க நன்மதிப்புடையரராக அவருக்கு பல கடிதங்கள் வரைந்துள்ளார். அவற்றுள் சில செய்யுள் வடிவிலும் சில வசனநடையிலும் அமைந்துள்ளன. முந்திய வகையில் ஒன்றைக் கீழே ஈண்டு தருதும்..:-[1].

  சென்னை,
 பிரமாதீச ௵மாசி ௴ 22 ௳ (1880) 
நின்னிரு பங்கண்டு நென்னலென் றன்மன நெக்குருகித்
தன்னிற் கரைந்தது தானென்சொல் கேனேத்துந் தாங்குமொரு 
வன்னெஞ் சுளேனெனு மாற்றம்பொய்யாது மல்வைநன்நாட்
டின்ன மிவருனைப் போற்குமார சாமி யெனக்கன்பரே. 
  இங்ஙனம்,
  அன்பன்,
  சி. வை. தாமோதரம்பிள்ளை


மாணவர்கள்

ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் புலவரிடம் தமிழ் கற்று தெளிந்தவர்களில் , வித்துவான் சிவானந்தையர்(1873 -1916), தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர், தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை, இளவாலை க. சங்கரப்பிள்ளை, தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை, மாவிட்டபுரம் விசுவநாத முதலியார், கையிட்டி பொன்னையர், சுன்னாகம் மாணிக்கதியாகராச பாண்டிதர், ஏழாலை வி. தம்பையாபிள்ளை, கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். இவர்களுக்குள் ஆழ்ந்த கல்வியறிவும் செய்யுள் புனையுமாற்றலும் நூலுரைகள் இயற்றும் திறமையும் பெரிதும் பொருந்தி விளங்கியவர் சிவானந்தையராவர். இவர் தருக்க சங்கிரக மொழிபெயர்ப்பு, புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மாணிக்கதியாகராசப் பண்டிதர் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும், தம்பையாபிள்ளை புராண படனஞ் செய்வதிலும் சிறந்து விளங்கினர்.

[தொகு] இல்வாழ்வு

1884ஆம் ஆண்டு பெற்றோரும், சுற்றத்தவரும் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் புலவரின் வடமொழிக் குறவர், பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம்1892 இல் நடந்தது. புலவரும் சின்னாச்சியம்மையாரும், விசலாட்சியம்மையார்(1893-1925) என்னும் ஒரு மகளையும், அம்பலவாணர்(1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) எனவிரு மகன்களையும் மக்கட்பேறாகப் பெற்றிருந்தனர். புலவரின் மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்துவிளங்கி, யாழ்ப்பணத்தில் பல கல்லுரிகளில் கல்வி கற்பித்த்னர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரகவும் சிறிது காலம்(1930-1932)பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.[3]..

[தொகு] யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம்

யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் சிங்கைப் பரராசசேகரனும், சிங்கை செகராசசேகரனும் யாழ்ப்பாணத்தில் தமிழ்சங்கம் நிறுவி தமிழை வளர்த்தும், தமிழ்க் கல்வியைப் பரப்பியும் வந்தனர். பின்னர் நூலங்களும் கல்விக்கூடங்களாக திகழ்ந்த கோவில்களும் கத்தோலிக்க அடிப்படைவாதிகளான போத்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இதனால் போத்துக்கேயர் காலத்தில் தமிழ்க் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்திருந்தது. பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட்டில் தமிழ்க் கல்வி மிண்டும் வளர்ச்சியடைய வழிவகுத்தவர்கள் பண்டிதராசர், வரத பண்டிதர், கூழங்கைத் தம்பிரான், மாதகல் சிற்றம்பலப்புலவர், நல்லூர் சின்னத்தம்பிப்புலவர், இருபாலை நெல்லைநாத முதலியார், மாதகல் மயில்வாகனப் புலவர், இருபாலை சேனாதிராச முதலியார்,முத்துக்குமாரகவிராயர், உடுப்பிட்டி குமாரசுவாமி முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், அம்பலவாணப் பண்டிதர், உடுப்பிட்டி கு. கதிரவேற்ப்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, முருகேசப் பண்டிதர், ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர், குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, புன்னாலைக் கட்டுவன் கணேசையர் மற்றும் தென்கோவை கந்தையா பண்டிதர் முதலியோராவர். இவர்களில் தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் ஆறுமுகநாவலரும் மற்றும் சி வை தாமோதரம்பிள்ளையும் ஆவர்கள். தமிழ் அகராதியின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் இருபாலை சேனாதிராச முதலியாரும்,உடுப்பிட்டி கு கதிரவேற்ப்பிள்ளையும் ஆவர். கிறிஸ்த்து மதத்தவரின் சைவ நிந்தனைகளையும் , சைவரை மதம் மாற்றும் நடவடிக்கைகளையும் மறுத்து முதலில் செய்யுள் வடிவில் கண்டனம் வரைந்தவர் முத்துக்குமாரகவிராயராவர்.குமாரசுவாமிப் புலவர் இலக்கண ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் இயற்றுவதில் முன்னோடியாக விளங்கினார். ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தமிழில் கலைக்களஞ்சிய அகராதியை முதலில் தொகுத்து எழுதியவராவர். மேலும் தமிழ் புலவர்களில் வரலாற்றை முதலில் தொகுத்து எழுதியவர்களும் ஈழநாட்டவரான சைமன் காசிச்செட்டியும் மற்றும் அனோல்ட் சதாசிவம்பிள்ளையும் ஆவர். ஈழநாட்டில் மேல்க்கூறிய புலவர்களின் தமிழ்த் தொண்டினால் ஒல்லாந்தர் காலத்தில் தொடங்கிய தமிழ்க் கல்வியின் மறுமலர்ச்சி, ஆங்கிலேயர் காலத்தில் மாட்சி நிலை எய்தியது, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் உச்ச நிலையை அடைந்திருந்தது. தமிழ் பேசும் உலகேல்லாம் போற்றும் புலவர்கள் பெருவாரியாக யாழ்பாணத்தில் வாழ்ந்த இக்காலத்தில் திரு த. கைலாசபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் சங்கத்தை 1900 ஆம் ஆண்டு நிறுவினார். இச்சங்கத்தில், கொக்குவில் சி சபாரத்தின முதலியார் செயலாளராகவும், புலவரவர்கள் தலைமைப் பரீட்சகராகவும் மற்றும் சிறப்பு ஆலோசகராகவும், ஆ முத்துத்தம்பிப்பிள்ளை, வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு சரவணமுத்துப் புலவர் மற்றும் நல்லூர் வே கனகசபாபதி ஐயர் முதலியோர் உறுப்பினராகவும் இடம்பெற்றனர். 1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 04-04-1913இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து ஆறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் பாடசாலையில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் ஆழ்ந்தறிவை மெச்சிப் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.:-[1]..

[தொகு] வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை

திரு சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்கள் புதுக்கோட்டையில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், புலவர் கற்பித்த ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவரவர்கள் வேலையில்லாது இருந்தகாலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்ப்பிள்ளை அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்புரைக்கும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். நலிவுறிருந்த தமிழ்க் கல்வியும், சைவமும் இடேறும் பொருட்டு ஆறுமுக நாவலர் பெருமானால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியர் திரு மா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்தமையால்,01-10-1902 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார்.இங்கு புலவரவர்கள் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார். இக்காலத்தில் நாள்தோறும் கற்பித்து முடித்து வீடுசெல்லும் போது, மாணவர்கள் புடைசூழ், அவர்களின் சந்தேகங்களை தீர்த்த வண்ணம் புலவர் போவதைக் கண்ணுற்றவர்கள் புலவரவர்களை 'நடமாடும் கலைக் களஞ்சியம்' என்று அழைத்து வந்தனர்.:-[4]..

[தொகு] பிற்கால மாணவர்கள்

1898ஆம் ஆண்டுக்கு பின் புலவரிடத்தில் கல்வி கேட்டுத் தெளிந்தவர்கள் பல நூறு ஆகும். இவர்களில் பலர் வண்ணார்பண்ணை சைவ பிரகாச வித்தியாசாலையில் புலவரிடத்தில் கற்றவர்கள், சிலர் புலவருடைய வீட்டுக்கு சென்று கற்றவர்களாவர். இவர்களுக்குள் முக்கியமானவர்கள், இளவாலை க. சங்கரப்பிள்ளை, கொக்குவில் சீ. முருகேசயர், கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், வண்ணர்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர், புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர், தென் கோவை ச. கந்தையைப் பண்டிதர், உடுவில் வ.மு. இரத்தினேசுர ஐயர், உடுவில் மு. ஜகநாதையர்,காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர், இருபாலை சி. வேதாரணிய தேசிகர்,இருபாலை சி. தியாகராசபிள்ளை, தாவடி மு.பொன்னையாபிள்ளை, நாயன்மாகட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை, நீர்வேலி வி மயில்வாகனப்பிள்ளை, தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை, வேதாரணியம் தி அருணாசல தேசிகர்,சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை, நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார், மட்டுவிற் பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை, மட்டக்கிளப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோராவர். இவர்களுக்குள் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் புலவரைப் போல் ஆழ்ந்த இலக்கண அறிவு கொண்டிருந்தமையால் பிற்காலத்தில் தொல்காப்பியக்கடல் என் அழைக்கப்பட்டவர் மற்றும் புலவரின் மறைவுக்குப் பின் புலவரின் வரலாற்றை எழுதியவரும் இவரே. மேலும் இருபாலை சேனாதிராசா முதலியாரின் வழித்தோன்றலாகிய தென்கோவை கந்தையாப் பண்டிதர், கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர்களிருவரும் பிற்காலத்தில் ஈழ நாட்டின் சிறந்த தமிழறிஞர்களாக விளங்கியவர்களாவர். தென்கோவை கந்தையாப் பண்டிதர் தாம் இயற்றிய நூல்கள் தோறும் புலவருக்கு செய்யுளால் குறவர் வணக்கம் கூறுவது வழக்கம்,அவற்றில் ஒன்றைத் கீழே தருதும்..:-[1]..

பொய்தவிரு நெஞ்சமுளான் புலவரெலாங் கொண்டாடும் புலமை யாளன் 
வய்யநிகழ் புகழாளன் வண்டமிழும் பிறமொழியும் மரபி னாய்ந்தோன் 
கைதவமி லாதடியேற் கருங்கலைகள் பலதெரிந்த கருணை யாளன் 
செய்திகழும் வளச்சுன்னைக் குமாரசுவா மிப்புலவன் திருத்தாள் போற்றி.

[தொகு] மதுரைத் தமிழ்ச் சங்கம்

முன்னைய காலத்தே மதுரையில் நிலவிய முச்சங்கங்கள் போல் ஒரு சங்கத்தை 1901ஆம் ஆண்டு திரு பொ.பாண்டித்துரைத் தேவர் அவர்கள் அந்நகரில் நிறுவினார்கள். இச்சங்கத்தில் தமிழகப் புலவர்கள் பெருவாரியாக அங்கம்வகித்தனர். புலவரின் திறமைகளைக் கேள்வியுற்ற தேவரவர்கள் புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு17-10-1902 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தின் பரிட்சைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909ஆம் ஆண்டு புலவரவர்கள் தமிழகம் சென்ற போது தேவரவர்களால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டர். மீண்டும் 1914ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசரசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டர். புலவர் இறந்தபோது அவரது இருபத்தொரு ஆண்டுத் தமிழ் தொண்டை பாராட்டி இச்சங்கத்தில் இல் ஒரு திர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தல் பதிப்பித்து வெளியிடப்பட்டது.:-[5]..

[தொகு] இறுதி நாட்கள்

10-03-1922இல் புலவரவர்களை சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்தத் தொடங்கின. மருத்துவத்தால் நோய் தணியாது,23-03-1922 இல் அதிகாலை மூன்றரை மணியளவில் புலவரவர்கள் உயிர் துறந்தார்கள். புலவர் நோயுற்ற காலத்தே அங்கு இருந்து பணிவிடை புரிந்த, அவரது மாணவனாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்.

செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித் தேயமேலாம் சென்றிலகும் சீர்த்தி ஒன்றே 
இந்தநில மிசையிருப்ப இணையி லாத எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும்,
அந்தமிலாக் கவிகள்பல எழுதி வைத்த அம்புயநேர் திருக்கரமும், அந்தோ! அந்தோ!
இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய யாமிதனைப் பார்த்திருத்தல் என்ன! என்ன!

[தொகு] புலவரின் செய்யுள் நூல்கள்

புலவரவர்கள் தொடக்ககாலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணிமாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின. புலவரவர்கள் எழுதிய பதிகங்கள் ஐந்தாகும்,

அவை

(1) வதுளை கதிரேசன் பதிகம் (1884)

(2)வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884)

(3) மாவைப் பதிகம் (1892)

(4) துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)

(5)அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897) என்பன ஆகும்.

பதிகம் என்பது கடவுளையும் கடவுள் எழுந்தருளியிருக்கும் கோவில் மற்றும் கோவிலின் அமைவிடம் முதலியவற்றின் சிறப்புப் பெருமைகளை உரைக்கும் பத்து அல்லது பதினோரு பாடல்களைக் கொண்ட பழமையான தமிழ் செய்யுள் நூல் வகையாகும்.புலவரின் பதிகங்களில் உள்ள ஆசிரியபாக்கள் எல்லாம் ஒழுகிய ஓசையும், விழுமிய பொருளும், சந்தம் பயக்கும் அனுபிரசரங்களும் மலிந்து படிப்போருள்ளத்தில் இன்பம் பயப்பன மட்டும் அல்லாது பதிகங்கள் எல்லாவற்றிலும் புராணகதைகள் செறிந்து உள்ளன. புராணங்கள் எவ்வாறு இறைவனின் திருவடிவம், நிறம் மற்றும் படைக்கலம் முதலியனவற்றைக் கூறுகிறதோ, அவ்வாறே புலவரும் தனது செய்யுளில் வருணிக்கின்றார். மாவைப்பதிகம் சொல்லழகும், பொருளழகும் ஒருங்கு வாய்க்கப்பெற்று விளங்குகிறது. அதிலிருந்து பாவொன்றை இங்கு தருதும்.


சீர்மேவு நவரத்ன கோலமிகு சிங்கார 
செம்பொனின் மகுட முடியும் 
திவ்விய குணங்களோ ராறுமாய் விறுற்ற 
செய்யமுக மூவி ரண்டும்
ஏர்மேவு நீபமலர் மாலையொடு செச்சைமலர் 
இனமாலை புரளு மார்பும் 
எழின்மேவு மகமேரு கிரிபோல் நிலவுற்ற
இணையிலாப் புயமீ ராறும்
கார்மேவு கடலிலேழு மலரிபோல் மயிலில்வரு 
கனகமய மேனி யோடு 
கவின்மேவும் ஆண்டலைக் கொடியுவேற் படையுமாய்க்
காட்சிதந் தருள்புரி குவாய் 
பார்மேவு பல்லுயிர்க் குயிராகி நிறைகின்ற 
பாரமேசுர வடிவமே!
பாவலா! தேவர்தங் காவலா! மாவையம்
பதியில்வதி கந்த வேளே!

புலவர் தனது ஆழமான வடமொழி அறிவு புலப்படும் வகையில், முருக பெருமானை பாடிய அருணகிரிநாதர் பல திருப்புகழ்ப் பாக்களில் வடமொழிச் சொற்களை பயன்படுத்தியது போல் தாமும் மாவைப் பதிகத்தின் மூன்றாவது செய்யுளில் வடமொழி சொற்களை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாவது செய்யுளில் உள்ள இவ்வடமொழி அடிகளை இங்கு காட்டுதும்


- - - - சரா சரா காரமே! யானசத் தியத்த 
சச்சிதா நந்தமுதலே
தற்பரா சிற்பரா கற்பனா தீதனே ----


புலவர் இயற்றிய ஊஞ்சல்கள்

(1)வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)

(2)துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889)

(3)கீரிமலை நகுலேசர் ஊஞ்சல்(1896)

(4) ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)

(5)கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)

(6)கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல்(1905)

(7)விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல்(1912)

(8)தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல்(1915)

(9)பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல்(1916)

(10)அராலி முத்துமாரியம்மான் ஊஞ்சல்(1921)

என்பன ஆகும். ஊஞ்சல்கள் எல்லாம் செவ்விய இசையுடன் கற்போருக்கு இன்பம் பயக்கும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளன. கீரிமலை நகுலேசர் ஊஞ்சலில் இருந்து காப்புச் செய்யுளை கீழே காட்டுதும்.

சீர்கொண்ட யாழ்பாண தேசந் தன்னிற் 
சிறப்பமருங் கீரிமலைச் சாரல் வாய்த்து 
நீர்கூண்டல் சாகரசங் கமமே யான 
நின்மலப்புண் ணியதீர்த்தக் கரையின் மேவும் 
பேர்கொண்ட நகுலேசப் பெருமான் மீது 
பெட்புறுசெந் தமிழ்கவிதை ஊஞ்சல் பாடக் 
கார்கொண்ட யானைமுகம் உடைய முன்னேன்
கமலமலர் அடியிணைகள் காப்ப தாமே.


புலவர் இயற்றிய அட்டகம்

(1)அத்தியடி விநாயகர் அட்டகம்(1897)

ஆகும்

வழக்கமாக அட்டகங்களில் எட்டு ஒரேவகைச் செய்யுள்கள் காணப்படும். ஆனால் புலவரின் அட்டகத்தில் பத்துச் செய்யுள்களும் வெண்பா, விருத்தப்பா, கட்டளைக் கலித்துறை, அகவற்பா முதலிய பலவகை செய்யுள்களில் உள்ளன. இதில் பிள்ளையாரை நம்பித் தொழுபவருக்கு கிடைக்கும் நற்பயன்களை எடுத்துரைக்கும் செய்யுள் ஒன்றைக் கீழே ஈண்டு தருதும்

சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும் 
பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி 
அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப்
படிமேல் வணங்கு பவர்க்கு

புலவரின் சிறு செய்யுள் நூல்கள்

(1)வதுளைக் கதிரேசன் சிந்து(1884)

(2)மாவையிரட்டை மணிமாலை (1896)

(3) நகுலேசர் சதகம் (தசகம்)(1896)

என்பன ஆகும்.

சிந்து என்பது ஒரெதுகை உள்ள இரண்டு அல்லது மூன்று அளவொத்த அடிகளை கொண்டு அமைக்கபட்ட இசையியல் பாவாகும். வதுளையில் எழுந்தருளியிருக்கும் முருகபெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இச்சிந்து புலவரால் இயற்றப்பட்டதாகும். இதிலிருந்து ஒரு பாடல் பின்வருமாறு.

ஆறெழுத் துடநீரும் அக்கமணி யுந்தா 
அந்தநமன் எந்தன்முன் அணுகா வர ந்தா 
மாறுபுரி தீவினைகள் மாறுவர ந்தா 
வதுளையம் பதியினிதம் வாழ்குமர வேளே. 

இரட்டைமணிமாலை என்பது இரு வகை பாக்களை அந்தாதி வடிவில் பிணைத்து புனையப்படும் அரிய தமிழ்ச் செய்யுள் வகையாகும். நாயன்மார்களில் மிகப் பழமையானவரான காரைக்கால் அம்மையார் புனைந்த திருவிரட்டைமணிமாலை இவ்வகையில் முதலில் இயற்றப்பட்டதாகும். மாவிட்டபுர முருகன் மீது புலவர் பாடிய மாவையிரட்டை மணிமாலையில் இருந்து ஒரு பாடலை கீழே காட்டுதும்.

நல்குரவு நீங்கும் நலிபிணியுந் தானீங்கும் 
வெல்பகையும் நீங்கி விளிந்தோடும்- சொல்வளங்கொள் 
தண்டலைசேர் மாவைத் தலத்தமருஞ் சண்முகனைக்
கண்டுதுதி செய்தக் கடை. 

தசகம் என்பது முதலில் வெண்பாவினாலும் பின் பலவின பாக்களினாலும் பாடப்படும் பத்து பாக்களைக் கொண்ட செய்யுள் நூலாகும். புலவரவர்கள் கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் மீது பாடிய நகுலேசர் தசகத்தில், முதலிலும் முடிவிலும் வெண்பாவினாலும், இடையில் கட்டளைக் கலித்துறை,கட்டளை கலிப்பா மற்றும் விருத்தம் முதலிய செய்யுள்களை பயன்படுத்தி இயற்றியுள்ளார். இதிலிருந்து பா ஒன்றை கீழே காட்டுதும்.

அன்று நகுலமுனி ஆதியர்க்குச் செய்கருணை 
இன்று மறப்பினருள் எங்ஙனோ - வந்ரோலின்
வாசா வுமைநேசா வாரிமலை கீரிமலை
வாசா நகுலேசா மற்று.

புலவர் இயற்றிய கும்மி

மிலேச்சமதவிகற்பகக் கும்மி(1888)

ஆகும்.


கோவில்களைப் பாடும் செய்யுள் வகைகளைத் தவிர கும்மி என்னும் செய்யுள் வகையும் புலவரவர்களால் பயன்படுத்தப்பட்டது. வெண்டளையான் அமைந்த ஒரேதுகையுடைய எழுசீர்க் கழிநெடிலடிகள் இரண்டு உள்ளவாறு செய்யுள் புனைவது கும்மி எனப்படும். சுன்னகாம் சங்கர பண்டிதர் இயற்றிய மிலேச்சமதவிகற்பம் என்னும் நூலை மிலேச்சமதவிகற்பகக் கும்மி என்று கும்மி வடிவில் புலவரால் நூற்று இருபத்து இரண்டு செய்யுள்களில் பாடப்பட்டது. இதில் யூதமதம், யேசுமதம், இசுலாம்மதம் ஆகிய மதங்களின் வரலாறைக் கூறி, அக்காலத்தில் இம்மதத்தவரின் பிறமத நிந்தனைகளையும் அடிப்படைவாத போக்கையும் கண்டித்து கூறுவதாக இக்கும்மி பாடபட்டுள்ளது. புலவரின் பாட்டனாராகிய முத்துகுமாரகவிராயர் இயற்றிய ஞானக் கும்மியும் ஒத்த கருத்தை வலியுறுத்தும் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. மிலேச்சமதவிகற்பகக் கும்மி பாடல் ஒன்றை கீழே தருதும்.

ஆக்கிய பின்னர் மதங்க ளிருநூறு
அவைகளு வொவ்வொன்று மற்றை மதத்தினர் 
மோக்சம் பெறார்நர கேழுஞ் சென்று 
முழ்ங்குத் தனித்தனி ஞானப் பெண்ணே


மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்

புலவரவர்கள் எல்லாவகை தமிழ் செய்யுள்களையும் கசடறப் பாடுவதில் சிறந்து விளங்கியதற்கு மேல் கூறிய செய்யுள்கள் சாட்சியாகும். மேலும் பல தனி நிலைச்செய்யுள்களையும் பிறர் நூல்களுக்கு பல சிறப்புப்பாயிரச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். மேல் கூறியது போல் வடமொழியில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த புலவரவர்கள், கம்பர், புகழேந்தி மற்றும் அரசகேசரி முதலியோர் வடமொழிப் பிரபந்தங்களை தமிழில் செய்யுள் நூல்களாக வடிவமைத்தது போல் தாமும் திறம்படச் செய்துள்ளார். அவை பின்வருமாறு.

(1)ஏகவிருத்தபாரதம் முதலியன(1896)

(2)மேகதூதக் காரிகை(1896)

(3)சாணக்கிய நீதிவெண்பா(1914)

(4)இராமோதந்தம்(1921)

ஏகவிருத்த பாரத இராமாயண பாகவதம், இராவணன் சிவதோத்திரம், வினோத சித்திர வினாவுத் தரக்கவிகள் முதலியன வடமொழிச் சுலோகங்களை தமிழ் செய்யுள்கள் வடிவில் புலவர் மொழிபெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள பாரதம், இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களை புலவர், ஏகவிருத்த பாரத இராமாயண பாகவதம் என்ற பெயரில் மூன்று விருத்தபாகளில் சுருக்கிப் பாடியமை புலவரின் இருமொழிப் புலமையை நன்கு பறைசாற்றுகிறது. இதன் காப்புச் செய்யுள்ளைக் கீழே தருதும்.

பாரதஞ்சீ ராமகதை பாகவதக் காதை
ஆரியத் தொல்கவியோ ரன்றுரைத்தார் - நேரவல்
மூன்று மொழிபெயர்த்து மூன்று கவி யாலுரைக்க
யான் துதிப்பே னைங்கரனை யின்று. 

இராவணன் வடமொழியில் பாடிய இராவணன் சிவதோத்திரதை, மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு புலவரவர்கள் மொழிபெயர்த்து பத்து விருத்தபாக்களில் தமிழில் பாடியுள்ளார். இதில் ஒன்றைக் கீழே காட்டுதும்.

கங்கை மாநதி சடையேனுங் காடாகமீ தசைந்து 
தங்க வைத்திடுங் கடவுளே தகதகென றெரியும் 
அங்கி நேத்திர சந்திரசேகர வடியேற்(கு)
இங்கு வேண்டுமாற் கணந்தொறு நினைநினைந்திருக்கை.

சில வடமொழிச் சுலோகங்களை தமிழில் மொழிபெயர்த்து, வெண்பா, கட்டளை கலிப்பா, விருத்தம் முதலிய செய்யுள் வகைகளில் புலவரவர்கள் முப்பத்தொரு பாக்களை வினோத சித்திர வினாவுத் தரக்கவிகள் என்ற பெயரின் கீழ் பாடியுள்ளார். இதில் வரும் செய்யுள் ஒன்றை கீழே தருதும்.

நாரணனார் மார்புரையும் நாயகியார் வன்மைதனக் (கு)
கோரெழுத்துப் பேரென்ன வோது தெய்வப்- பேரென்னை
புள்ளுணர்த்து நாமமென்ன பொல்லாத ராவணனாற்
கொள்ளப்பட்ட டாளெவளோ கூறு 

உத்தரம் =சீதாதேவி 

போசமன்னனின் அவையில் வடமொழிப் புலவனாய் திகழ்ந்த காளிதாசன் பல புதுமைச்சிறப்புகளுடன் இயற்றிய மேகசந்தேசம் ( தமிழில் முகில் விடு தூது ) என்னும் நூலின் நூற்றிருபதைந்து சுலோகங்களையும், தமிழில் புலவரவர்கள் நூற்றிநாற்பத்தைந்து கட்டளைக் கலித்துறைப்பாக்களாக மேகதூதகாரிகை என்ற பெயரில் பாடியுள்ளார். இதில் போசமன்னனதும் காளிதாசரினதும் வரலாற்றை கூறும் பொருட்டு போசப்பிரபந்தம் என்னும் நூலில் இருந்தும் சில சுலோகங்களை புலவர் மொழிபெயர்த்து செய்யுள்களாக மேகதூதகாரிகையின் முகவுரையில் சேர்த்துள்ளார். இவற்றுள் சில பின்வருமாறு.

மேகதூதகாரிகையின் காப்புச் செய்யுள் கீழ் வருமாறு.

திருமேவு போசன் சபையிற் கவிஞர் சிகாமணியாய் 
வருமேக வீரன் கவிகாளி தாசன் வகுத்துரைத்த 
ஒருமேக தூதந் தமிழ்க்கவி யாக்க வுதவியெலாந்
தருமேக தந்த விநாயகர் பாத சரோருகமே. 

குரங்கு ஒன்று குளக்கரையில் நின்ற நாவல் மரக் கிளையில் தாவிச் சென்றபோது, கனிகள் சில குளத்தில் விழும்போது குளுகுக் குளுகுக்குளு என்று ஓசைஎழுப்பியத்தை கவனித்த போசராசன், காளிதாசரிடம் சென்று இதைச் சொல்ல, அவர் இந்நிகழ்வு முழுவதையும் ஒரு சுலோகத்தில் பாடினார். போசபிரபந்ததில் வரும் இச்சுலோகத்தை தமிழில் புலவரவர்கள் பின்வருமாறு பாடியுள்ளார்.

பக்குவமாய் முற்றிப் பழுத்துளநா வற்கனிதான்
அக்கொம்பர் மந்தி அசைத்திடப் - புக்கு 
மெழுகுக் குறைபோல விழுந் தொனிதான் 
குளுகுக் குளுகுக்குளு.

குபேரனின் சோலைக் காவலனான இயக்கன் ஒருவன் குபேரனின் சாபத்தால் இல்லாளை விட்டுப் பிரிந்து சித்திர கூட மலையில் வாழும் காலத்தே, பிரிவுத் துயரால் வாடும் அவன் கார்கால முகிலை மனையாளிடத்தே தூதுவிட துணிந்தபோது, தனது நிலைபற்றியும், மனைவி பற்றியும் முகிலிடத்தே உரைப்பதாக அகப்பொருளைத் தழுவி காளிதாசரினால் பாடப்பட்ட மேகசந்தேசத்தில் இருந்து, புலவரால் மொழிபெய்ர்க்கபட்ட செய்யுள் ஒன்றை கீழே காட்டுதும். இச்செய்யுள் முகிலிடத்தே தூது வேண்டுவதாக அமைந்துள்ளது.

சந்தாப வெந்தழல் உற்றார்க் கினிமை தருமுகிலே
மந்தார மேவும் பொழிலள கேசன் மனக்கொதிப்பால் 
வந்தே னுரைக்கு முரையைப் பிரிந்த மனையவட்குச் 
சந்தாகிச் சென்றங் குரைத்துத் துயரந் தணிக்குவையே.

வடநாட்டில் பேரரசனாக விளங்கிய சந்திரகுப்த மௌரியர் பேரரசு நிறுவ, வழிகாட்டியாகவும் முதல் அமைச்சராகவும் விளங்கிய சாணக்கியர், வடமொழியில் இயற்றிய சாணக்கிய சதகம் என்னும் அறநூலை தமிழில் நூறு வெண்பாக்களில் மொழிபெயர்த்து சாணக்கிய நீதிவெண்பா என்ற பெயரில் புலவர் வெளியிட்டார். எல்லாரும் இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் அமைந்த வெண்பாக்களிருந்து ஒன்றைக் கீழே காட்டுதும். மக்களுக்கு எவை எல்லாம் அழகு தருவன என்பதை இச்செய்யுள் சொல்லும்.

தாங்குருவங் கெட்டார்க்குத் தக்ககல்வி யேயழகு
மாங்குயிலுக் கின்னிசையே மற்றழகு - தீங்ககன்று
ஞானமுனி வோர்க்கழகு நற்பொறையே நல்லுறுதி 
யானகற்பே பெண்டிர்க் கழகு 

இராமோதந்தம் என்ற வடமொழி நூலை புலவரவர்கள் அதோ பெயரில் தமிழில் எல்லாரும் படித்து மகிழும் வண்ணம், நூற்றியிருபதெட்டு விருத்தப்பாக்களில் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவே புலவரின் கடைசி நூலாகும். இதனை மதுரை தமிழ் சங்கம் 1922ஆம் ஆண்டு வெளியிட்டது. இச்செய்யுள் நூலில் முடிவில் வரும் வாழிவிருத்தத்தில் புலவரவர்கள் தமது குறிக்கோளை வாழி செந்தமிழ் இலக்கிய விலக்கண வரம்பு என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஒரு செய்யுளை கீழே காட்டுதும்.

வெய்ய ராவணற் கொன்றிட விரைவினில் யாமும் 
வையங் காத்திடுந் தசரதன் மைந்தனாய் வருவேம் 
பொய்ய னாமவன் றன்னொடும் போர்புரி காலைத் 
துய்ய வானவ ரெமக்கருந் துனைசெயும் பொருட்டு

[தொகு] புலவரின் வசன அல்லது உரைநடை நூல்கள்

தமிழில் வசன அல்லது உரைநடை நூல்கள் தொல்மையிலிருந்து விளங்கிவருகின்றன. இதற்கு உதாரணமாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தைக் கூறலாம். இந்நூலில் செய்யுள்களுக்கு இடையில் விரவிவரும் உரைநடையால், சிலப்பதிகாரத்துக்கு 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்றும் ஒரு பெயர் உண்டு. முழுமையான உரைநடை நூல்கள் தமிழில் தோன்ற வழிவகுத்தவர் மேலைநாட்டவரான வீரமாமுனிவராவர். இவ்வகை இலக்கியத்தை வீரமாமுனிவரின் காலத்துக்கு பின் ஆறுமுக நாவலரே வளர்ச்சியுறும் வகையில் கையாண்டவராவர். இன்று கல்வி நூல்கள், செய்தித்தாள்கள், மின்நூடகங்கள் மற்றும் பலவாகிய நூல்வகைகளும் உரைநடையை பயன்படுத்த, வழிவகுத்தவர்கள் ஆறுமுக நாவலர் காலத்தே வாழ்ந்த ஈழத் தமிழ் வல்லுனர்களே. புலவரவர்களும் இவ்வகை இலக்கியத்தை முனைப்போடு கையாண்டு பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றைக் கீழே எடுத்துக் கூறுதும்.

(1) திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890) இப்புராணம் திருகோணமலைக்கு அருகில் உள்ள கரைசையம் என்னும் மகாவலி ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார்.

(2) சூடாமணி நிகண்டு முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1896) சூடாமணி நிகண்டு என்னும் நூல்ளுள் காணப்படும் தமிழ் சொற்களுக்கு பின்கலநிகண்டு மற்றும் பல இலக்கண நூல்களின் உதவியோடும், வடமொழிச் சொற்களுக்கு இலிங்கபட்டியம், அபிதநிகம், மகாவியாக்கியானம் போன்ற நூல்கள் உதவியோடு புலவர் தனது பொருள் விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தெளிவற்றுக் கிடந்த பல சொற்களுக்கு பொருள் விளக்கம் கூறுவதன் மூலம் தமிழ்க் குரவரும், அதனைக் கற்போரும் பயனடையக்கூடியதாகயுள்ளது.

(3)இலக்கணசந்திரிகை (1897) தமிழில் அகராதி எழுதிய உடுப்பிட்டி கு கதிர்வேற்ப்பிள்ளை விரும்பியவாறு எழுதப்பட்ட சொல்லியல் ஆய்வு நூலாகும். இதில் பவணந்தி முனிவர் நன்னூலில் கூறிய நெறியை பின்பற்றாது திரிபுனால் விகாரம் அடைந்து இலக்கியங்களில் விளங்கும் சொற்களுக்கு விதியுரைக்குகிறார் புலவரவர்கள். மேலும் தமிழில் வடிவம் மாறி வரும் வடமொழிச் சொற்கள் பற்றியும் இதில் ஆராயப்படுகிறது.

(4)கண்ணகி கதை(1900) இச்சிறுநூல் சிலப்பதிகாரத்தின் உரைநடை சுருக்கமாகும். கற்றவரும் மற்றவரும் வாசித்து மகிழும் வண்ணம் எளிய நடையில் புலவரால் எழுதப்பட்டது.

(5) சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900) இதில் முதற்றொகுதியைப் போல் இரண்டாம் தொகுதிச் சொற்களுக்கு பொருள் தருகிறார் புலவர்.

(6)யாப்பருங்கலப் பொழிப்புரை(1900) யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தை நூற்பா அகவல் எனப்படும் சூத்திர யாப்பிலமைத்துச் செய்த ஒரு பழைய நூலாகும். யாப்பருங்கலக் காரிகைக்கு மூலநூல் இதுவே. கற்போருக்கு பயனுள்ளவாறு புலவரர்கள் இப்பொழிப்புரையை வெளியிட்டார்.

(7) சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900) இதில் முற்கூறியது போல் முதலைந்து தொகுதிகளிலும் உள்ள அருஞ் சொற்களுக்கு புலவரால் விளக்கமளிக்கப்படுகிறது.

(8) இரகுவம்சக் கருப்பொருள் (1900) வடமொழியில் காளிதாசர் பாடிய இரகுவம்சத்தை, தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்ப்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது.

(9)வெண்பா பாட்டியல் பொழிப்புரை(1900) இதுவும் புலவரால் பொழிப்புரை எழுதப்பட்ட ஒரு நூலாகும். இதில் வெண்பாவில் உள்ள இலக்கண விதிமுறைகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது.

(10)கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901) தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு செய்யுட்களை கொண்டது. நூறு வெண்பாக்களும் பிறகேளிகையாக, அதாவது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருள் உள்ளவாறு புனையப்பட்டுள்ளன. எல்லாச் செய்யுட்களும் இரண்டாவது அடியில் இரண்டு அல்லது மூன்று கருத்துக்களை உள்ள இச்செய்யுட்களுக்கு புலவரால் சிறப்பான அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது.

(11)நீதிநெறி விளக்கப் புத்துரை (1901) திருக்குறள் முதலிய நீதி நூல்களை தழுவி குமரகுருபர சுவாமியால் வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூலுக்கு எத்தனையோ நுட்பமான திருத்தங்களும், மேற்கோள்களும், பிறவும்,சுருக்கமும், விளக்கமும் உள்ளவாறு புத்துரை ஒன்றை புலவரவர்கள் வழங்கியுள்ளார்கள்.

(12)மறைசையந்தாதி அரும்பதவுரை (1901) நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வேதாரணியேசுரர் (திருமறைக்காடுறையும் சிவன் ) மிது பாடிய இவ்வந்தாதிக்கு புலவர் சிறந்ததோர் அரும்பதவுரை எழுதியுள்ளார்.

(13)தண்டியலங்கார புத்துரை(1903) இந்நூல் காளிதாசரால் வடமொழியில் இயற்றபட்ட காவியதர்சம் என்னும் நூலைத் தழுவி தமிழில் தண்டிப்புலவரால் தண்டியலங்காரம் எனும் பெயரில் இயற்றப்பட்டது. இது செய்யுள்களை மேலும் சிறப்பாக்க கையாளப்படவேண்டிய விதிமுறைகளை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பகுதிகளில் கூறுகிறது. இதற்கு பலர் உரை எழுதியிருந்த போதும், அவற்றில் வழுக்கள் மிகுதியாக இருந்தமையால் அவற்றைத் திருத்தி புதியதொரு உரையை புலவர் வழங்கியுள்ளார்.

(14) திருவாதவூரர் புராணப் புத்துரை (1904) மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை கூறும் இந்நூல் கடவுள் மாமுனிவரால் எழுதப்பட்டது. முன்பு இதனை திருத்தி பதிப்பித்த புலவரவர்கள்,1904 ஆம் ஆண்டு இதற்கு ஒரு சிறந்த புத்துரையை எழுதிவெளியிட்டார்.

(15)யாப்பருங்கலகாரிகைப் புத்துரை(1908) முன்னர் பொழிப்புரையுடன் வெளியிட்ட இந்நூலுக்கு 1908 ஆம் ஆண்டு புதியதோர் உரையை புலவரவர்கள் வரைந்துள்ளார்.

(16)முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909) புலவரவர்கள் தனது மூதாதையரான முத்துக்குமாரகவிராயர் இயற்றிய பல நூறு செய்யுள்கள் காலத்தால் அழிவுற்ற நிலையில் உறவினர் மற்றும் கவிராயரிடம் கற்றவரிடமும் வினவியும் தேடியுமறிந்த இருபத்தைந்து செய்யுள்களை இந்நூலில் பதிப்பித்துள்ளார். கவிராயர் பிரகேளிகை, நாமாந்தரிதை, சங்கியாதை, வியிற்கிராந்தை, மடக்கலங்க்காரம் முதலிய யாப்பணிகளை நூதனமாக நல்லிசைச் செய்யுளுள் அமைத்துப்பாடியுள்ளார். இச்செய்யுள்களை கற்றவரும் மற்றவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் புலவரவர்கள் இவற்றுக்கு குறிப்புரை எழுதுயுள்ளார்.

(17) அகப்பொருள் விளக்க புத்துரை (1912) 1912ஆம் ஆண்டு இறையனார் அகப்பொருளுக்கு, புலவரவர்கள் திரு த.தி.கனகசுந்தரம்பிள்ளையுடன் இணைந்து புதியதோர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

(18)வினைப்பகுபதவிளக்கம்(1913) புலவருடைய இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் இதுவே தலைசிறந்தது. இந்நூலிற் கையாளப்பட்ட இலக்கணவாராய்ச்சி முறை தமிழ் மொழிக்கு புதுவதொன்றாகும். இது நன்னூலிலுள்ள 'நடவாமடிசீ' என்னுஞ் சூத்திரத்தைப் பீடிகையாகக்கொண்டு இருபத்துமூன்று பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகின்றது. இந்நூல் புலவரது திட்ப நுட்பமான அறிவின் மாட்சியையும், பழந்தமிழ் நூலாட்சியையும் நன்கு புலப்படுத்தும். இந்நூல் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு இயற்றப் பெற்றது.

(19)இலக்கியச் சொல்லகராதி(1915) இது சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைச் சான்றோரிலக்கியங்களிலும் வருகின்ற அருஞ் சொற்களாகிய இலக்கியச் சொற்களைத் தொகுத்து புலவரால் இயற்றப்பட்டது. மற்றைய அகராதிகளில் வழுவுற எழுதப்பட்ட சொற்களும், சொற்பொருள்களும் இதன்கண் திருத்தமுற எழுதப்பட்டுள்ளன. பிற அகராதிகளில் வராத அனேகம் புதுச்சொற்கள் இதிற் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்டைக்கால இலக்கியங்களைப் பயில்வாருக்குப் பெரிதும் பயன்படும்.

(20) தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916) இந்நூலின்கண் தமிழ்மொழிக்கண்ணுள்ள இலக்கியவிலக்கணங்களைக் கலக்கமறக் கற்றுணர்ந்த மெய்யறிவும், செய்யுள் நூல்கள் செய்யும் பெருவலியுமுடைய புலவர்களுடைய சரித்திரச் சுருக்கமும், அவர்கள் பாடிய அருங்கவிகளும், அவற்றின் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. புலவரவர்கள் இந்நூலின் வசனங்கள் சுருக்கமும், தொடைநயமும் பொருந்த அழகுற எழுதி சேதுபதி மன்னவருக்கு அர்ப்பணித்துள்ளார்.மேலும் இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்விப் பாடநூலாக விளங்கியது. இந்நூலைப் பெற்ற வண. தா. கிங்ச்பேரி தேசிகர் புலவருக்கு வரைந்த கடிதமொன்றிற் புலவரை பின்வரும் வெண்பாவால் புகழ்ந்துள்ளார்.

சீரார் தமிழ்ப்புலவர் செம்மைச் சரித்திரத்தைப் 
பாரார் படிக்கப் பகர்ந்திட்டான் - நேராரும் 
இல்லக் குமார சுவாமி இருமொழியும் 
வல்லான்சுன் னாகத்தான் மற்று.


(21)இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918) இது புலவரவர்கள், திரு கனகசுந்தரம்பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய நூல்லாகும். இராமாயணச் செய்யுள்களில் பதிக்கும்போது சொற்குற்றங்கள் பெருகிவருவதை கண்ட இவர்கள், பழைய ஏட்டுச்சுவடிகளை தமிழகத்தில் தேடிக் கண்டெடுத்து, அவற்றின் துணையுடன் திருத்தமாக அரும்பதவுரையுடன் பாலகாண்டத்தை வெளியிட்டனர். புலவரின் உடல்நலக் குறைவாலும், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னையில் வசிக்க நேரிட்டதாலும் திட்டமிட்டபடி மிகுதி இராமாயணம் வெளியிடப்படவில்லை.

(22)ஏரேழுபது பொழிப்புரை (1920) கம்பரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு புலவர் பொழிப்புரை வழங்கியுள்ளார்.

(23)இதோபதேசம்(1920) இது விட்டுணூசர்மர் என்பவரால் வடமொழியில் சுதர்சனர் என்னும் அரசனின் மைந்தருக்கு அரசியல் நெறி போதிக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலாகும். இதனை புலவரின் வடமொழிப் குரவர் நாகநாத பண்டிதர் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். அவற்றை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார்.

(24)கல்வளையந்தாதி பதவுரை(1921) நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கல்வளையந்தாதிக்கு புலவர் பதவுரை எழுதியுள்ளார்.

(25)சிசுபாலசரிதம்(1921) சிசுபாலவதம், மகாபாரதம்,பாகவதம் ஆகிய வடமொழி நூல்கள் கூறும் சேதினாட்டரசன் சிசுபாலன் வரலாற்றைப் புலவரவர்கள், மொழிபெயர்த்து மிகச் சிறந்த உரைநடையமைப்பில் தமிழில் தந்துள்ளார்.

(26)இரகுவமிச சரிதாமிர்தம் (1922) முதலில் வடமொழியில் காளிதாசராலும், பின்னர் தமிழில் அரசகேசரியாலும் பாடப்பட்ட இந்நூலை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். இரகுவமிசம் திலீபன் முதல் இலவகுசர் வரையான இரகுகுல அரசரின் வரலாற்றை கூறுகிறது.

[தொகு] புலவர் பதிப்பித்த நூல்கள்

அச்சுப்பொறி தமிழருக்கு அறிமுகமான தொடக்க காலத்தில் விவிலிய நூலை தமிழில் பதிப்பித்து மத போதனைக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டது. பல முறை படியெடுக்கப்பட்ட ஓலைநூல்க் கட்டுக்களாக காலத்தால் அழிவுறும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களை தேடியெடுத்து, மிண்டும் மிண்டும் படியேடுப்பதால் உருவாகியிருக்கும் சொற்குற்றங்களை நீக்கி, அவை அழிவுறா வண்ணம் முதலில் அவற்றை அச்சிட்டு நூற்பதிப்புக்களாக வெளியிட்ட பெருமை யாழ்ப்பாணத் தமிழ் அறிஞ்ர்களான ஆறுமுக நாவலரையும், சி வை தமோதரம்பிள்ளையவர்களையும் சாரும். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடிகளாக திகழ்ந்த இவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் புலவரும் சில நூல்களை பதிப்பித்துள்ளார்கள். அவற்றை கீழே கூறுதும். புலவரவர்கள் பதிப்பித்த நூல்களில் சொல் மற்றும் பொருள் வழுவாமையும், எளிதில் விளங்கக் கூடிய தன்மையும் பொதுவாகக் காணப்படும் சிறப்புத் இயல்புகள் ஆகும்.

(1)இதோபதேசம் (1886) இது புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதரால் வடமொழியிலிருந்து தமிழுக்கு செய்யுள் வடிவில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இதனை பண்டிதரவர்கள் புலவருக்கு கல்வி கூறும் பொருட்டுச் செய்திருந்தார்.

(2)நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895) அராலி விசுவநாத சாத்திரிகளால் இயற்றப்பட்ட இந்நூல், புலவரால் பல மேற்கோள்களோடு பதிப்பிக்கப்பட்டது.

(3)யாப்பருங்கலக்காரிகை பழையவுரை (1900) இதில் நிலவிய சொற்குற்றங்களை நீக்கிப் புலவரால் 1900 ஆம் ஆண்டு பதிப்பிடப்பட்டது.

(4)ஆசாரக்கோவை(1900) புலவரால் பதிக்கப்பட்ட இந்நூல் பெருவாயில் முள்ளியரால், ஆசாரமுரைக்கும் வகையில் இயற்றப்பட்டதாகும்.

(5)நான்மணிக்கடிகை (1900) சங்ககாலப் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்நூலை புலவர் பழைய ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து மிகத் திருத்தமாக பதிப்பித்தார். இந்நீதிநூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவராவர். இதனை சங்ககாலநூல் என்று சிலரும், இது சங்கமருவியகால நூல் (களப்பிரர் காலம் ) என்று வேறு சிலரும் கூறி வருகின்றனர்.

(6)ஆத்திசூடி வெண்பா (1901) இராமபாரதி இயற்றிய இந்நூலை, புலவர் 1901 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

(7)சிவசேத்திர விளக்கம் (1901) திருவண்ணாமலை அண்ணாமலைத்தேசிகர் இயற்றிய இந்நூலை புலவர் ஆராய்ந்து, மூன்று சிறப்புப்பாயிரப் பாக்கள் வழங்கிப் பதிப்பித்தார்.

(8)உரிச்சொனிகண்டு (1902) தமிழில் வரும் உரிச் சொற்களுக்கு பொருள் வரையறுத்துக் கூறும் இந்நூலை புலவர் திறனாய்வு செய்து பதிப்பித்தார்.

(9)திருவாதவூரர் புராணமுலம் (1902) கடவுள் மாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிற பதிப்புகளில் மிகுதியாகக் காணப்பட்ட சொல்லியல் வழுக்களை நுண்ணறிவால் களைந்தது மிகத் திருத்தமாக புலவர் இதனை பதிப்பித்தார்.

(10)பழமொழி விளக்கம் (1903) பழமொழிகளின் கதைகளைத் தழுவி இயற்றப்பட்ட இந்நூல் 1903 ஆம் ஆண்டு புலவரால் பதிப்பிக்கப்பட்டது.

மேலும் சதாசாரக்கவித்திரட்டு (1901), சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911) முதலிய நூல்கள் புலவர் வேறு பல நூல்களில் காணப்படும் செய்யுள்களை தொகுத்துப் பதிப்பித்த நூல்களாகும்.

[தொகு] கண்டனங்களும், கட்டுரைகளும், சொற்பொழிவுகளும்

தமிழில் கண்டனங்கள் கடைச் சங்ககாலத்தில் வாழ்ந்த தலைமைப் புலவராகிய நாகீரர் காலத்திலிருந்து இன்றுவரை விளங்கிவருகின்றது. புலவரவர்கள் செய்யுள்கள்,கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் முதலியவற்றைக் கையாண்டு தமது கண்டனங்களை வழங்கியுள்ளார். இவை இரு வகைப்படும். கிறிஸ்த்து மதத்தவர் மேலைநாட்டு ஆட்சியாளரின் துணையுடன் தங்கள் மதத்தை தமிழரிடையே பரப்பும் பொருட்டு சைவத்தை இழிந்து வந்ததை எதிர்த்து தொடக்ககாலத்தில் புலவர் கண்டனங்கள் பல வழங்கியுள்ளார். இவ்வகைக் கண்டனங்கள் ஈழநாட்டில் முதலில் முத்துகுமாரக் கவிராயரால் செய்யுள் வடிவில் கூறப்பட்டவையாகும். பின்னர் ஆறுமுக நாவலர், சங்கர பண்டிதர் முதலியோர் செய்தித்தாள்கள் மூலம் பல இவ்வகைக் கண்டனங்களை வெளியிட்டனர். புலவரும் கிறிஸ்த்து மதத்தவரின் சைவநிந்தனையை மறுத்து வரைந்த கட்டுரைகள் பின்வருமாறு.

இலங்கை நேசன் என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்.

(1)கிறீஸ்து தேவனா ? (1878)

(2)பன்னகவரி (1881)

உதயபானு என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்.

(1)நற்புத்தி (1880)

(2) அஞ்ஞானி என்னுஞ் சொன்மறுப்பு (1881)

(3)கிறீஸ்து சிருட்டிகர் (1881)

(4)பாதுகாவலன் பத்திராதிபருக்கு (1881)

(5)காரைக்கால் சத்திய வேத ஆசாரப் பிரியருக்கு (1881)

(6)வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882)

(7)நாகரீகசார விநாசம்(1882)

சைவநெறிக் காவலராக விளங்கிய ஆறுமுக நாவலர் இறந்தபோது, கிறீஸ்து மதச்சபைகள் தங்கள் மதத்தை பரப்ப நல்ல தருணம் எனக் கருதிப் பல சைவமதக் கண்டனங்களை வெளியிட்ட போது அவற்றை மறுத்து மேல்க்கூறிய தலைப்புக்களில் புலவரவர்கள் கண்டனங்களை வெளியிட்டார். 1889 ஆம் ஆண்டுக்கு பின் கிறீஸ்து மதம் பரப்பும் நடவடிக்கை ஓரளவு தணிவுற்றதால் புலவரும் கண்டனம் எழுதுவதை கைவிட்டார்.

இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரையேழுதுபவர்கள் மற்றும் அவற்றைப் பதிப்பிப்போர் செய்யும் பொருள் மற்று சொற் குற்றங்களை தனது நுண்ணறிவால் கண்டறிந்து, அவற்றைத் திருத்தும் பொருட்டு கண்டனங்கள் வரைவதில் புலவரவர்கள் அக்காலத்தில் தலைசிறந்தவராக விளங்கினார். இதனை கண்டு வியந்த நல்லூர் சரவணமுத்துப் புலவர் யாப்பருங்கலக் காரிகைப் பதிப்புக்கு வழங்கிய சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

எம்மை விஞ்சிடுவோர் எவருமிங் கிலையெனாத்
தம்மைத் தாமே தனிவியந் தெழுதும்
போலி நாவலர் புரைபட இயற்றிய 
நூலுரைப் பிழைகளை நுண்ணிதி னாய்ந்தோன்

புலவர் இலக்கணயிலக்கிய கண்டனங்களின் அவசியத்தைப் பற்றிய தனது கருத்தை தமிழ்ப் புலவர் சரித்திர முகவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

பிழைகளைக் காணும் அறிஞர்கள் செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் அவைகளைப் பிரகடனஞ் செய்தல் நன்று. பிழை கூறல் அவமானஞ் செய்தலன்று. அது சம்மானமாய் நமக்கும் பயன்படும். கற்போர் பிறர்க்கும் பயன்படும். திருத்தமும் பலவாகும்.

புலவர் தனது காலத்தே பல பல கண்டனங்களை வரைந்துள்ளார், ஆனால் மிகுந்த பரபரப்பையும், அறிஞர்களின் வரவேற்பையும் பெற்ற மூன்று கண்டனங்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் கீழே தருதும்.

(1)கந்தபுராண வியாக்கியானம் (1876)

புலவர் இளமைக்காலத்தில் வரைந்த இக்கண்டனம் நகைச்சுவை ததும்பும் வகையில் உள்ளது. கந்தபுராணம் முதலியவற்றைப் பிரசங்கஞ் செய்யும் உரையாசிரியர்கள் செய்யும் பிழைகளைக் கண்டித்துக் கூறும் இக்கண்டனத்தை வாசித்த ஆறுமுக நாவலர் அதன் உரைநடையின் சிறப்பையும், தருக்கரீதியாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டு களித்ததோடமையாது அதற்குச் சார்பாக ஒரு கடிதம் வரைந்து இலங்கை நேசனில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புலவரின் கண்டன திறமையை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் அறிந்தனர்.

(2)இலக்கண வினா(1880)

இப்பெயருடைய கண்டனம், யோன் சங்கரப்பிள்ளை என்பவர் புதிய முறையில் இலக்கணச் சல்லாபம் என்னும் நூலைத் தமிழ் மரபு கவனியாது எழுதியமையால் புலவரால் வரையப்பட்டு உதயபானுவில் வெளிவந்தது. இது அக்காலத்தில் அறிஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

(3)சிவக சிந்தாமணிப் பிழைகள் (1901)

புலவர், உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த சிவக சிந்தாமணிப் பதிப்பிலுள்ள பிழைகளை திரட்டி மேல் கூறிய பெயரில் வெளியிட்டார். முன்னைய நாட்களில் சாமிநாதையரின் மாணவகராகிய சண்முகம்பிள்ளை, புலவரின் தமிழ்க் குரவராகிய முருகேசப் பண்டிதரை ஈழநாட்டாரும் சாதாரண இலக்கிய விலக்கணக் கல்வியறிவில்லாத அற்பரும் என இழிந்து கண்டனம் எழுதியதால், சாமிநாதையர் புலவரின் கண்டனத்தை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கருதினார். இதனால் புலவருக்கும் சாமிநாதையருக்கும் இடையே நிலவிய நட்பில் பன்னிரு ஆண்டு கால இடைநிறுத்தம் ஏற்பட்டது.

புலவரவர்கள் கண்டனக் கட்டுரைகள் தவிர சில நூறு இலக்கணவிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மற்றும் சைவான்மீகக் கட்டுரைகளையும், உதயபானு, இலங்கைநேசன், திராவிடகோகிலம், செந்தமிழ், சிறிலோகரஞ்சனி முதலிய பத்திரிகைகளுக்கும் பிற வெளியீடுகளுக்கும் வழங்கி உள்ளார். இக்கட்டுரைகள் யாவும் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் உள்ளனவாக திகழ்ந்தன. இவற்றுள் தலைசிறந்தவை சிலவற்றின் தலைப்புகளை கீழே பட்டியல் இடுதும்.

(1) சு . சரவணமுத்துப் புலவர் (1880) உதயபானு, யாழ்ப்பாணம்

(2) விடுகவிக்கு விடுகவி (1880) உதயபானு, யாழ்ப்பாணம்

(3) இலக்கண விநோதர் (1881)உதயபானு, யாழ்ப்பாணம்

(4)கிரிமலைச் சிவன்கோவில் (1883) உதயபானு, யாழ்ப்பாணம்

(5) சம்பந்த சுவாமிகள் புராணம் (1883)உதயபானு, யாழ்ப்பாணம்

(6) வரலாறு (1883) விஞ்ஞானவர்த்தினி,சி.பி. சங்கம்

(7) விளக்கு வழக்கின் விலக்கு(1883)இந்துமதாபிமானி, சென்னை

(8)என்மனார் என்னுஞ் சொன்முடிபு (1888) சிரிலோகரஞ்சினி, சென்னை

(9)முதல்வன் என்னும் பதம் (1891)இந்துசாதனம், யாழ்ப்பாணம்

(10)பிங்கலநிகண்டு (1902) அறிவு விளக்கம், திருவனந்தபுரம்.

(11)தமிழாராய்ச்சி (1900) அறிவு விளக்கம், திருவனந்தபுரம்.

(12)காப்பியம் (1902) ஞானசாகரம், சென்னை.

(13)இலக்கியவாராய்ச்சி (1902) ஞானசாகரம், சென்னை.

(14) கந்தபுராண வரலாறு (1902) ஞானசாகரம், சென்னை.

(15) மடக்கலங்க்காரம் (1902)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்.

(16)உகரவீற்றுவினைப்பகுதி(1904) செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(17)முத்துக்குமாரகவிராயர் முத்தகத்திரயம் (1907)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(18)இலங்கைத் தமிழரசர்(1914) செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(19)இலக்கணவரம்பு(1919)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(20)அவையல்கிளவி(1919)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(21)ஏதுப்போலி(1920) செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(22)உவமப்போலி (1920)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(23)பக்கப்போலி (1920)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்

(24)மனிதரைப்பாடுதல் (1911)ஆத்மபோதினி, யாழ்ப்பாணம்

(25)இலைப்போலிகலம்(1911)வைசியமித்திரன், தேவகோட்டை

மேலும் அக்காலத்தில் கோவில்கள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் புலவரவர்கள், ஆன்மீகம் மற்றும் இலக்கணவிலக்கியம் சார்ந்த தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

Noolaham.gif
தளத்தில்
அ. குமாரசாமிப் புலவர் எழுதிய
நூல்கள் உள்ளன.

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 குமாரசுவாமி புலவர் வரலாறு - கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, 1952.
  2. குமாரசுவாமிப் புலவர் சரிதம் - சி. கணேசையர், 1935.
  3. குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர் ., 1935. .
  4. குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர் ., 1935. .
  5. குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர் ., 1935. .
"http://ta.wikipedia.org/w/index.php?title=அ._குமாரசாமிப்_புலவர்&oldid=1120662" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்