குமட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து பாடல்களைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். இதில் சேர வேந்தன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை இவர் புகழ்ந்து பாடியுள்ளார். கண்ணனார் பாடிய இந்தப் பாடல்களுக்காக இந்தச் சேர வேந்தன் புலவருக்கு உம்பற்காடு என்னும் பகுதியிலுருந்த 500 ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான் என்று இப்பாடலுக்குப் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட பதிகம் கூறுகிறது.

குமட்டூர் என்னும் ஊர் எங்கு இருந்தது எனப் புலப்படவில்லை. என்றாலும் இரண்டு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் குமட்டூர் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஒன்று ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள கல்வெட்டு. மற்றொன்று புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு அசோகன் காலத்துப் பிராமி எனப்படும் தாமிழி எழுத்தில் உள்ளது.

இந்தக் கல்வெட்டில் “யோமி நாட்டுக் குமட்டூர்[தொடர்பிழந்த இணைப்பு]” என்னும் குறிப்பு உள்ளது. இங்குள்ள சமணர் படுக்கைகளில் ஒன்று யோமிநாட்டுக் குமட்டூர் யிதனுக்குச் சித்துப்போக்கில் யிளையார் செய்த அதிட்டானம் என்னும் குறிப்பு உள்ளது.

இந்த இரண்டு கல்வெட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்த அறிஞர்கள் இந்தக் குமட்டூர் ஓய்மானாட்டுக் குமட்டூர் என முடிவுசெய்கின்றனர். சித்தன்னவாசல் கல்வெட்டின் காலம் கி.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு. குண்டூர் கல்வெட்டு 11-ஆம் நூற்றாண்டு. குண்டூர் சங்ககால ஓய்மானாட்டின் ஒரு பகுதி. புலவர் குமட்டூர்க் கண்ணனார் இந்தக் குண்டூரைச் சேர்ந்தவர். கள்ளில் ஆத்திரையனார் ஊரான கள்ளில் ஆந்திராவில் உள்ள கள்ளூர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமட்டூர்&oldid=3799545" இலிருந்து மீள்விக்கப்பட்டது