குடிமைப்பட்ட கால இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குடியேற்றவாத இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குடிமைப்பட்ட கால இந்தியா அல்லது காலனிய இந்தியா (Colonial India) என்று வணிகம் மற்றும் ஆளுமை மூலமாக ஐரோப்பிய குடியேற்றவாத ஆதிக்கத்தில் இருந்த இந்திய துணைக்கண்டத்தின் பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் காலடி வைத்த முதல் ஐரோப்பிய அதிகாரமாக 327–326 ஆண்டுகளில் படையெடுத்த அலெக்சாந்தரின் இராணுவத்தைக் கூறலாம். வடமேற்கில் அலெக்சாந்தர் நிறுவிய சிற்றரரசுகள் அவர் வெளியேறிய சிறிது காலத்திலேயே நசித்தன. தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களுடன் ரோமானியர்கள் கடல்வழியே வணிகத் தொடர்பு கொண்டிருந்தபோதும் தங்கள் குடியேற்றங்களை இங்கு அமைக்கும் அல்லது நிலப்பகுதியை கைப்பற்றும் வேட்கையின்றி இருந்தனர். இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இருந்த நறுமணப்பொருள் வணிகம் உலக பொருளாதாரத்தின் அச்சாக அமைந்திருந்தது; இந்த வணிகமே ஐரோப்பியர்களின் கடல்வழித் தேடல்களுக்கு உந்துசக்தியாக இருந்தது.[1][2]

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாஸ்கோ ட காமா முதல் ஐரோப்பியராக ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோழிக்கோட்டை அடைந்தார்.அவர் அந்த நகரத்தில் வணிகம் புரிய சாமூத்திரி ராசாவிடம் உரிமை பெற்றார். வணிகப் போட்டியால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வந்திறங்கி தமது வணிக நிறுவனங்களை நிறுவின. டச்சு,இங்கிலாந்து, பிரான்சு, டேனிசு நாட்டினர் பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தங்கள் வணிக மையங்களை நிறுவியிருந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசு பிரிவுகளால் உடைந்ததாலும் மராத்தா பேரரசு மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர் வலு இழந்தமையாலும் இந்தியாவில் ஓர் நிலைகுலைந்த சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் வலுவற்ற இந்திய குறுமன்னர்களும் அவர்களுக்கிடையே நிலவிய பிணக்குகளும் ஐரோப்பியர்களுக்கு "நட்பு பாராட்டி" சலுகைகளைப் பெறவும் நில உரிமைகள் கைப்பற்றவும் எளிதாக அமைந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் பிரித்தானியர்களும் பிரான்சியர்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தங்கள் "நட்பான" மன்னர்கள் மூலமும் நேரடியாகவும் சண்டைகளில் ஈடுபட்டனர்.1799இல் திப்பு சுல்தானின் தோல்வி பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு தடையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் தங்கள் ஆதிக்கத்தை தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலேயே பிரித்தானியர்கள் முழுமையான இந்தியாவிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.பிரித்தானிய இந்தியா பிரித்தானிய இராச்சியத்தின் மிகக்கூடுதலான மக்கள்தொகை மற்றும் மதிப்பு மிக்க மாநிலப்பகுதிகளைக் கொண்டிருந்த காரணத்தால் பிரித்தானிய மணிமகுடத்தில் ஓர் வைரம் என்று அழைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Corn & Glasserman 1999: Prologue
  2. Robin Donkin (August 2003). Between East and West: The Moluccas and the Traffic in Spices Up to the Arrival of Europeans. Diane Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87169-248-1. https://archive.org/details/bub_gb_B4IFMnssyqgC. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]