குடியுரிமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குடியுரிமை என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும். இவ்வுரிமையில் அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். குடியுரிமை சமூக ஒப்பந்தக் கொள்கையின் அடிப்படையில் சில பொறுப்புகளையும், கடமைகளையும் குடிமக்களிடத்தில் எதிர்பார்க்கிறது. பல நாடுகளில் குடியுரிமை அற்றவர் அந்நாட்டுத் தேசிய இனத்தவராகக் கருதப்படுவது இல்லை என்பதுடன் அவர் ஒரு வெளியாராகவே கணிக்கப்படுகிறார். ஒரு நாட்டின் குடியுரிமை கொண்டிருப்பவர் அந் நாட்டைச் சாராத தேசிய இனத்தவராகவும் இருக்கக்கூடும். எடுத்துக் காட்டாக, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர் அமெரிக்கக் குடிமகனாகக் கருதப்பட்டாலும், தேசிய இன அடிப்படையில் அவர் ஒரு இந்தியத் தேசிய இனத்தவராகக் கணிக்கப்படலாம். தேசிய இனம் என்பது, பிறந்த இடம், பெற்றோர், இனம் ஆகியவற்றில் தங்கியிருக்க, குடியுரிமை என்பது ஒரு சட்டம் சார்ந்த தொடர்பாகவே உள்ளது. குடியுரிமை இழக்கப்படவோ பெற்றுக் கொள்ளப்படவோ கூடியது. ஒரு நாட்டில் பிறத்தல், குறிப்பிட்ட நாட்டுக் குடியுரிமை கொண்ட ஒருவரை திருமணம் செய்தல் போன்றவை சில நாடுகளில் ஒருவருக்குக் குடியுரிமையைப் பெற்றுத்தரக்கூடும்.