கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அண்மித்து மேற்கு வங்காளம் முதல் தமிழ் நாடு வரை பரவியுள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரைப் போல் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ளது.
இதன் உயரமான சிகரம் (கொடுமுடி) 1501 மீ உயரமுடைய மகேந்திரகிரியாகும். இது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.
மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இம்மலைத்தொடர் பரவியுள்ளது, இதன் பெரும்பகுதி ஒரிசா & ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரனாது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரைவிட பழமை வாய்ந்தது.
தென் இந்தியாவின் பெரிய ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஊடாக செல்கின்றன. இவ்வாறுகளால் இம் மலைத்தொடரானது அரிக்கப்பட்டு தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளது.
ஆந்திராவின் நல்ல மலை, ஆனந்தகிரி ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, சவ்வாது மலை ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை.
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.