கிரீஸ் நிதி நெருக்கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரீஸ் தற்பொழுது கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அமெரிக்காவின் நிதிச் சந்தைகளில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு கிரீசில் நிதி நெருக்கடி வெளிச்சத்துக்கு வந்தது. 2010 ஆம் ஆண்டில் கிரீஸ் பொருளாதார நிலைமை திவாலாகும் அளவுக்குச் சென்றது. அப்பொழுது பன்னாட்டு நிதியம் முதலிய நிதி அமைப்புகள் பெரிய அளவில் கிரீசுக்குக் கடன் வழங்கின. 2012 ஆம் ஆண்டும் கடன் அளித்தன. இப்பொழுது நெருக்கடிகள் ஏற்பட்டதும் கிரீசுக்கு நிதிக்கடன் வழங்கிய நிறுவனங்களான பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நடுவண் வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகியன கடன் மீட்புத் திட்டம் என்னும் பெயரில் சில நிபந்தனைகளை வலியுறுத்தின.

கடன் மீட்புத் திட்டம்[தொகு]

கிரீசுக்கு கடன் உதவிகள் செய்த பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நடுவண் வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகியன கிரீசுக்கு சில நிபந்தனைகளை விதித்தன. கிரீசு அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் அரசின் வரவு செலவுத் திட்டங்களைக் குறைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தின. அரசின் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்தல் வேண்டும்; வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும். வணிகம், தொழில் பெருக வழி வகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இந்தச் சூழ்நிலையில் கிரீசில் மக்கள் வாக்கெடுப்பு 2015 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் தேதியில் நடந்தது. நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என மக்கள் தீர்ப்பு வழங்கினர். மேற்குறிப்பிடப்பட்ட நிதி நிறுவனங்களின் நிதி உதவி கிடைக்காமல் போனால் கிரீசின் வங்கிகள் முடங்கிப் போகும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 'யுரோ' வை பொது நாணயமாகக் கொண்டிருக்கும் கிரீஸ் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலக வாய்ப்புகள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பாதிப்பு[தொகு]

கிரீசில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல்கள் இந்தியாவில் பெரிதாகப் பாதிப்புகள் ஏற்படுத்தாது; இருப்பினும் இந்தியாவின் ஏற்றுமதிகள் குறையலாம் என்றும் இந்தியப் பணமான ரூபாயின் மதிப்பு குறையலாம் என்றும் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். கிரீஸ் நாட்டு மக்கள் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்காமல் 'கூடாது' என்று தீர்ப்பு வழங்கியது நல்லது என்று பால் குரக்மன் (Paul Krugman)என்னும் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் கருத்து சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்[தொகு]

http://www.thehindu.com/news/international/greece-says-no-in-bailout-referendum-what-happens-next/article7392551.ece

http://economictimes.indiatimes.com/news/international/business/a-primer-on-the-greek-crisis-and-its-possible-impact-on-india/articleshow/47957997.cms பரணிடப்பட்டது 2015-07-11 at the வந்தவழி இயந்திரம்

http://www.huffingtonpost.com/2015/07/06/paul-krugman-greek-referendum-vote-no-austerity_n_7735662.html?ir=India&adsSiteOverride=in

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீஸ்_நிதி_நெருக்கடி&oldid=3366112" இலிருந்து மீள்விக்கப்பட்டது