கிரிகோரி குட்வின் பிங்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரகரி குட்வின் பின்கஸ்
பிறப்பு(1903-04-09)ஏப்ரல் 9, 1903
வுட்பைன், நியூ ஜெர்சி, அமெரிக்கா
இறப்புஆகத்து 22, 1967(1967-08-22) (அகவை 64)
பாஸ்டன், அமெரிக்கா
வாழிடம்நார்த்பரோ, மசாசுசேட்ஸ், அமெரிக்கா
குடியுரிமைஅமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு உயிரியலுக்கான வொர்சஸ்டர் அறக்கட்டளை
கல்வி கற்ற இடங்கள்கார்னெல் பல்கலைக்கழகம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரை

கிரிகோரி குட்வின் பிங்கஸ் (Dr. Gregory Pincus, ஏப்ரல் 9, 1903 - ஆகஸ்ட் 22, 1967) வாய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடிப்பதில் தலையாய பங்கு கொண்ட அமெரிக்க உயிரியலறிஞர். மக்கள் தொகைப் பெருக்கம் மேன்மேலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம் என்ற முறையில் கருத்தடை மாத்திரையின் இன்றியமையாமை மிகப் பெரிதாகும். இதனால் அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளில் பாலுணர்வு மனப்போக்குகளில் ஒரு புரட்சி ஏற்பட்டது. வேண்டாத கருத்தங்கலைத் தடுக்க முடியாது என்ற அச்சம், திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பாலுறவு கொள்வதிலிருந்து பெண்களைத் தடுத்து நிறுத்துதல், ஆகியவற்றில் கருத்தடை மாத்திரை பெரும்பங்கு கொண்டது. இதனால் கருத் தரிப்ப்பதான அச்சமின்றி பாலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு வாய்ப்பை இம்மாத்திரை ஏற்படுத்தியது. இதனால் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு மனப்போக்கு, நடத்தைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன.

பிறப்பும் பணிகளும்[தொகு]

கிரிகோரி பிங்கஸ், நியூஜெர்சி மாநிலத்தில் குட்வின் என்னும் ஊரில் 1903 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் ரஷ்ய யூதர்கள் ஆவார். இவர் கர்னல் பல்கலைக் கழகத்தில் 1927 ஆம் ஆண்டில் டாக்டட் பட்டம் பெற்றார். அதன் பின் ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் உட்பட பல நிறுவனங்களில் ஆராய்ச்சிகள் செய்தார். பல ஆண்டுகள் கிளார்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டில் ஒர்சஸ்டர் பரிசோதனை உயிரியல் நிறுவனத்தை நிறுவுவதற்கு உதவி புரிந்தார். அதன் ஆய்வுக்கூடங்களின் இயக்குநராகவும் நெடுங்காலம் பணியாற்றினார்.

வரலாறு[தொகு]

கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னாலும் பாதுகாப்பான நம்பகமான கருத்தடை முறைகள் அறியப்பட்டிருந்தன. அன்று பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் கருத்தடைக்காக பரிந்துரை செய்த சாதனம் சவ்வுத்திரை(Diaphragm) ஆகும். இது உண்மையில் பாதுகாப்பான நம்பகமான சாதனமாயினும் பெண்கள் நடைமுறையில் இதனைப் பயன்படுத்தத் தயங்கினார்கள்.

வாய்வழி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரையைக் கண்டுபிடிக்க பலர் முயன்றுள்ள போதிலும், இத்தகைய மாத்திரைகளில் எத்தகைய வேதிப் பொருளை இடுவது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. கருத்தடை மாத்திரைக்கான முக்கிய கண்டுபிடிப்பு 1937 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.ஏ. டபிள்யூ மேக்பீஸ், ஜி.எல் வெய்ன்ஸ்டீன், எம்.எச். ஃப்ரீட்மன் ஆகிய மூவரும் பெண்பால் இயக்குநீர் (ஹார்மோன்) களில் ஒன்றான புரோஜஸ்டிரோன் (Progesterone) என்ற பொருளை உட்செலுத்தினால்,ஆய்வுக்கூட விலங்குகளில் கருத்தரிப்பது தடைபடுகிறது என்பதைச் செயல் விளக்கம் செய்து காட்டினார்கள். எனினும் தோலடியூடான ஊசி போடுதல் (Hypodermic injection) ஓர் ஏற்புடைய கருத்தடை முறையாகக் கருதப்படாத காரணத்தாலும் அந்தக் கால கட்டத்தில் புரோஜஸ்டிரோன் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தமையாலும் அந்த முறைக்கு கருத்தடை ஆதரவாளர்கள் வரவேற்பளிக்கவில்லை.எனவே கருத்தடை மாத்திரை உருவாக்கும் முயற்சி 1950 வரை மேற்கொள்ளப்படவிலலை.

மாசசூசெட்ஸ் நிலத்தில் ஷிரூஸ்பரியிலிருந்த ஒர்சஸ்டர் பரிசோதனை உயிரியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநராக பிங்கஸ் பணியாற்றி வந்தார். அவர் வளர்சிதை மாற்றத்திலும் (Steroid metabolism), பாலூட்டிகளின் இனப்பெருக்க உடலியலிலும் ஒரு வல்லுநராக விளங்கினார்.எனவே, குடும்பக் கட்டுப்பாட்டை நெடுங்காலமாக வலியுறுத்தி வந்த மார்கரெட் சாங்கர் (Margaret Sanger) என்பவரின் வலியுறுத்தலின் பேரில் 1950 -இல் கிரிகோரி பிங்கஸ் அந்த முயற்சியைத் தொடங்கினார். ஒர்செஸ்டர் நிறுவன ஆராய்ச்சியாளர் டாக்டர் டின்-சூயே-சாங், மகளிர் மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜான் ராக் ஆகியோர்களின் உதவியுடன் பரிசோதனைகளில் ஈடுபட்டார். பெண்கள் வாய்வழியாக புரோஜஸ்டிரோனை உட்கொண்டால் கருத்தறிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார். ஆயினும் இது 85% காலத்திற்கு மட்டும் கருத்தரிப்பதைக் கட்டுப்படுத்தியது. மேலும் அவ்வாறு கட்டுப்படுத்த மிகவும் அதிகமான அளவு மருந்து (doses) தேவைப்பட்டது.

முயற்சியைக் கைவிடாத பிங்கஸ், புரோஜஸ்டிரோனை ஒத்ததாக இருக்கும் வகையில் தயாரித்துள்ள வேதிப் பொருள்களின் மாதிரிகளை தமக்கு அனுப்பி வைக்கும்படி பல்வேறு வேதியியற்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை 1953 ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டார். தமக்கு வந்த அனைத்தையும் பிங்கஸ் பரிசோதனை செய்து பார்த்தார். அவற்றுள் 'ஜி.டி.சீயர்லே அண்டு கோ' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'நோரித்தினோடிரல்' (Norethynodrel) என்ற பொருள் சிறப்பான செயல் விளைவு கொண்டிருப்பதை அறிந்தார். நோரித்தினோடிரல் என்ற பொருளை 1951 -ல் சீயர்லே ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிவந்த டாக்டர் ஃபிராங் பி. கோல்ட்டோன் என்ற வேதியல் அறிஞர் செயற்கை முறையில் தயாரித்து, அதற்கு தமது பெயரில் புத்தாக்க உரிமையும் பெற்றிருந்தார். ஆனால் கருத்தடை மருந்தை வாய்வழியாகச் செலுத்த அவரோ அவரது மேற்பார்வையாளர்களோ முயலவில்லை. அச்சமயத்தில் அத்தகைய மருந்தை தாங்கள் கண்டுபிடித்திருப்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. பிங்கஸ் தனது ஆராய்ச்சிக் குழுவினருடன் மேலும் பரிசோதனைகள் செய்து நோரித்தினோடிரலுடன் மெஸ்டிரானோல் (Mestranol) என்ற மற்றொரு பொருளைச் சிறிதளவு சேர்த்தால் அதிகப்பயன் விளைவு ஏற்படும் என்பதைக் கண்டார். இந்த இணைப்புப் பொருள்தான் "ஈனோவிட்" என்ற கருத்தடை மாத்திரையாக உருப்பெற்று, ஜி.டி. சீயர்லே நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. 1955 முதல் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு 'ஈனோவிட்' என்னும் பெயரில் இதனை விற்பனை செய்ய உணவு மற்றும் மருந்து நிருவாகத்துறை (Food and Drug Administration) ஒப்புதலளித்தது.

இறுதிக் காலம்[தொகு]

வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும் முயற்சிகளையும் செலவழித்த ஒரே விஞ்ஞானி என்ற பெருமை பெற்றார். கிரிகோரி பிங்கஸ் 250 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். "கருவளத்தை வெற்றி கொள்ளுதல்' (Conquest of fertility) என்ற நூலையும் எழுதினார். இது 1965 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிங்கஸ் தமது வாழ்நாளில் ஏராளமான அறிவியல் விருதுகளைப்பெற்றார். ஆனால் அவருக்கோ கருத்தடை மாத்திரையை உருவாக்கியதில் பங்கு கொண்ட எவருக்குமோ நோபல் பரிசு வழங்கப்படவிலை 1967 ஆம் ஆண்டு பாஸ்டனில் காலமான போது அவரது மரணத்தை பொதுமக்களும் பெரும்பாலான விஞ்ஞானிகளும் கண்டுகொள்ளவில்லை.

உசாத்துணை[தொகு]

மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008