காளான் நஞ்சாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஞ்சாகும் காளான்
அமனிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides) என்னும் காளானே உலகில் காளான் நச்சுத்தன்மையால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10T62.0
ஐ.சி.டி.-9988.1
ம.பா.தD009145

நச்சாகும் காளான் (இது மைசெட்டிசம் (mycetism) என்றும் அழைக்கப்படும்) என்பது சிலவகைக் காளான்களில் இருக்கும் நச்சுப்பொருள்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும். இதன் அறிகுறிகளும் விளைவுகளும் உணவுச்செரிமான (சமிப்பாடு) இடையூறுகள் ஏற்படுவதில் இருந்து இறந்து போவது வரை கடுமை நிறைந்ததாக இருக்கும். காளானில் இருக்கும் நச்சுப்பொருள்கள் காளானின் உயிரணுக்களின் வழி நடைபெறும் இரண்டாம்நிலை வளர்சிதைமாற்றங்களின் விளைவால் உருவாவன. மிகப்பெரும்பாலான காளான்கள் நஞ்சாகும் சூழல்கள், மக்கள் சரிவர அடையாளப்படுத்தி எடுத்துப் பயன்படுத்தாமையாலேயே நிகழ்வன. உண்ணக்கூடிய காளான் வகை போலவே சில உண்ணக்கூடாத நச்சுத்தன்மை கொண்ட காளான்கள் உள்ளன. உணவுக்காகக் காளான் பறிப்பவர்கள், அல்லது எடுப்பவர்கள்கூட பிழை செய்ய நேரிடும்.

நச்சுத்தன்மையான காளான்களால் துன்பப்படாமல் இருக்க, உண்ணக்கூடிய நல்ல காளான்களைப் பறிப்பாளர்கள், அதேபோல் தோற்றம் அளிக்கும் நச்சுக் காளான்களையும் நன்கு அடையாளம் காணப் பழகவேண்டும். மேலும் உண்ணக்கூடிய காளான்களுக்கும் அவற்றை உணவாகச் சமைக்கும் முறையைப் பொறுத்தும் நஞ்சாகும் தன்மை இருக்கும். மேலும் இந்த நஞ்சாகும் தன்மை, உண்ணக்கூடிய தன்மை, புவியிட அமைப்பைப் பொறுத்தும் அமையும்[1]

மக்கள் மரபு அறிவு[தொகு]

நஞ்சாகும் காளான் பற்றி நிறைய அவ்வவ் நாட்டார்கள் பல கருத்துகளை மரபாகக் கொண்டு இருக்கின்றனர்[2][3] பெரும்பாலும் நஞ்சாகும் காளான்களை அடையாளப்படுத்த பொதுவான சிறப்புக் குறிப்புகள் ஏதும் இல்லை. மரபுவழி அறிவும் உறுதியுடையதாகக் கொள்ள முடியாது, ஏனெனில் இதுவே பல முறை நஞ்சாகி சிக்கல் தந்துள்ளது.
மரபறிவில் தரப்படும் விதிகளின் போதாமைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்:

  • "நஞ்சாகும் காளான்கள் பளிச்சென்று தெரியும் நிறத்தில் இருக்கும்".-

பெரும்பாலும் நஞ்சாகும் அல்லது உள்ளத்துள் மாய உருக்காட்டுந்தன்மை ஊட்டுவன (hallucinogenic) பளிச்சென்ற சிவப்பு நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ இருப்பது உண்மையேயானாலும், மிகவும் நச்சுத்தன்மை கொண்ட அமானிட்டா (Amanita) இனத்தைச் சேர்ந்த பல காளான்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. அமெரிக்காவில், கிழக்கிலும் மேற்கிலும் காணப்படும் அமானிட்டா பைசிப்போரிகெரா (Amanita bisporigera), அமானிட்ட ஓக்ரியேட்டா(A. ocreata) போன்றவை பார்க்க வெள்ளையாய் இருந்தாலும் மிகவும் நச்சுத்தன்மை உடையவை. பளிச்சென்ற நிறமுடைய சில காளான்கள் உண்ணக்கூடியவையாகவும் உள்ளன (பொற்கிண்ண நாய்க்குடை(chanterelles), அமானிட்டா சீசரே (Amanita caesarea), போன்றவை), ஆனால் பெரும்பாலான நச்சுக்காளான்கள் வெள்ளை அல்லது மங்கிய பழுப்புநிறம் உடையதாக உள்ளன.

  • "பூச்சிகளும் விலங்குகளும் நச்சுக்காளான்களை ஒதுக்கும்"–

முதுகெலும்பில்லா விலங்குகளுக்கு நஞ்சாக இல்லாத காளான்கள் மாந்தர்களுக்கு மிகவும் நஞ்சுடையதாகவும் இருக்க முடியும்; எடுத்துக்காட்டாக இறப்புக்குப்பி (death cap) என்று பொருள்பட ஆங்கிலத்தில் சுட்டப்பெறும் அமானிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides] இறப்பு ஏற்படுத்தவல்லது, ஆனாலும் இவற்றில் பூச்சிகளும் புழுக்களும் இருக்கும்.

  • "நச்சுக்காளான்கள் வெள்ளியை கறுப்பாக்கும்." -

இன்று அறியப்பட்ட காளான் நச்சுப்பொருள்களில் எவையும் வெள்ளியோடு வேதிவினை கொள்வதை அறியவில்லை.

  • "நச்சுத்தன்மையுடைய காளான்கள் நற்சுவையாக இருக்காது." –

இறப்புதரும் நச்சுத்தன்மை கொண்ட அமானிட்டா இனக் காளான்களை உண்டவர்கள் நல்ல சுவையுடன் இருந்ததாகவே அறிவித்தனர்.

  • "சமைத்துவிட்டாலோ, அவித்துவிட்டாலோ, ஊறுகாய் ஆக்கிவிட்டாலோ எல்லா காளான்களும் தீங்களிக்காதவையே" –

உண்ணக்கூடாத சில காளான்களைத் தக்கவாறு சமைத்தபின் அவை தீங்கிழைப்பது குறையும் அல்லது இல்லாது போகும் எனினும், பல நச்சுப்பொருள்களை நச்சுத்தன்மை நீக்கியதாக ஆக்க முடியாது. பல மைக்கோடாக்ஃசின் எனப்படும் காளான் நச்சுப்பொருள்கள் வெப்பத்தால் சிதைவன அல்ல, ஆகவே சமைப்பதால் அந்த நச்சுப்பொருள்கள் வேதிவினைப்படி பகுக்கப்படுவதில்லை. இதற்கு உதாரணம், இறப்புக்குப்பி ("death cap") என்பதில் இருந்தும் மற்ற அமானிட்டா இனக் காளான்களில் இருந்தும் பெறும் ஆல்ஃபா-அமானிட்டின் (α-amanitin) என்னும் நச்சுப்பொருள் (இது வெப்பத்தால் வேதியியல் சிதைவு பெறுவதில்லை).

  • "நச்சுக் காளான்கள் அரிசியோடு கொதிக்க வைத்தால் அரிசியைச் சிவப்பாக்கும்"-[4]

பல இலாவோ மக்கள் இத்தகைய மரபு அறிவால் பெரும்பாலும் நச்சு இருசுலா (Russula) வகையாக இருக்ககூடும் என்று கருதப்படும் காளானை உண்டு துன்புற்றனர், ஒரு பெண் தன் உயிரை இழந்தார்[5][6]

நச்சுக்காளான்களை இனங்காணும் பொதுவான முறைகள்[தொகு]

சாதாரணமாகக் காளான் குழல் வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் உருவாகியிருக்கும்.மேலும்,

காளான் நஞ்சாகும் காரணங்கள்[தொகு]

பல ஆயிரம் காளான்கள் உலகில் இருந்தாலும், அவற்றுள் 32 மட்டுமே உயிரிழப்புக்குக் காரணமாயின; மேலும் 52 வகைகளில் குறிப்பிடத்தக்க பல்வேறு நச்சுப்பொருள்கள் இருப்பனவாகக் கருதுகின்றனர்.[7] மிகப்பெரும்பாலும், காளான் நஞ்சு, உயிரிழப்பை ஏற்படுத்துவன அல்ல,[8], ஆனால் காளான் நஞ்சால் ஏற்பட்ட பெரும்பான்மையான உயிரிழப்புகள் அமானிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides) என்னும் வகையால்தான்.[9]

அமானிட்டா எசு.பி.பி, முதிராத, (நஞ்சாக இருக்கும் வாய்ப்புடைய) அமானிட்டா காளான்
கோப்ரினசு கொமாட்டசு (Coprinus comatus)', முதிராத, (உண்ணக்கூடிய) பிடரிக் காளான்கள்.

பெருன்மையான நஞ்சாகித் துன்புற்ற நிகழ்ச்சிகள், காளான்களைத் தவறாக அடையாளம் கண்டதாலேயே நிகழ்ந்தன எனலாம். இந்த நஞ்சுத் தாக்குதலுக்கு உள்ளானவர், பெரும்பாலும் புவியின் ஓரிடத்தில் தான் பெற்ற மரபு அறிவைக் கொண்டு இன்னொரு பகுதியில் பயன்படுத்தும் போது ஏற்படும் பிறழ்வால் ஏற்படுகின்றது[4] அமானிட்டா ஃபால்லாய்டு பார்ப்பதற்கு ஓர் ஆசிய வகையான காளானாகிய வோல்வாரியெல்லா வோல்வோசியா (Volvariella volvacea) போல் இருப்பதால் இப்படி அடிக்கடி நேர்வதுண்டு. குறிப்பாக முதிராத நிலையில் இரண்டுமே வெளிறிய நிறத்தில் இருப்பவை, மூடுறையுடனும் (univeral veil) இருக்கும்.

அமானிட்டாக்களை மற்ற இன காளான்களோடு குழப்பிக் கொள்ள இயலும், குறிப்பாக அவை முற்றிலும் முதிராத நிலையில். ஒரு முறை[10] இவற்றை கோப்ரினசு கோமாட்டசு (Coprinus comatus) என்பதோடு தவறாக அடையாளப்படுத்தப்பட்டது.

அமானிட்டாசுகள், இரண்டு முதிராத இளம் அமானிட்டாசுகள், ஒன்று இறப்புண்டாக்குவது, மற்றது உண்ணக்கூடியது.
பஃவுபால் (Puffball) ஓர் உண்ணக்கூடிய பஃவுபால் காளான் (puffball mushroom), அதனோடு மிக ஒத்த தோற்றம் அளிக்கும் முதிராத இளம் அமானிட்டாசு.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "The Mushroom Chronicles - Toxicity". Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 08 சூன் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "California Poison Action Line: Mushrooms". Archived from the original on 2008-02-10. பார்க்கப்பட்ட நாள் 2008-02-18.
  3. Ian Robert Hall (2003). Edible and Poisonous Mushrooms of the World. Timber Press. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88192-586-1. https://archive.org/details/ediblepoisonousm0000unse. 
  4. 4.0 4.1 Centers for Disease Control (CDC) (June 4, 1982). "Mushroom Poisoning among Laotian Refugees – 1981". MMWR (USA: CDC) 31 (21): 287–8. பப்மெட்:6808348. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00001107.htm. பார்த்த நாள்: 2008-08-04. 
  5. "Woman died of mushroom poisoning". BBC News. 2010-03-18. http://news.bbc.co.uk/1/hi/england/hampshire/8574915.stm. 
  6. Pitel, Laura (2010-03-19). "Amphon Tuckey died after eating death cap mushrooms picked at botanic gardens". The Times (London). http://www.timesonline.co.uk/tol/news/uk/article7067321.ece. 
  7. Marsha Ford; Kathleen A. Delaney, Louis Ling, Timothy Erickson (2001). Clinical Toxicology. USA: WB Saunders. பக். ch115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7216-5485-0. http://www.mdconsult.com/das/book/body/101243344-2/0/1013/0.html. 
  8. Gussow L (November 2000). "The optimal management of mushroom poisoning remains undetermined". West. J. Med. 173 (5): 317–8. doi:10.1136/ewjm.173.5.317. பப்மெட்:11069865. 
  9. Centres for Disease Control and Prevention (CDC) (June 1997). "Amanita phalloides mushroom poisoning – Northern California, January 1997". MMWR Morb. Mortal. Wkly. Rep. 46 (22): 489–92. பப்மெட்:9194398. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00047808.htm. 
  10. Eschelman, Richard (2006). "I survived the "Destroying Angel"" (blog). Cornell. பார்க்கப்பட்ட நாள் 2008-08-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்_நஞ்சாதல்&oldid=3893937" இலிருந்து மீள்விக்கப்பட்டது