கால்நடை வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Chickens
செறிவான இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், பிராயிலர் இல்லம், ஐக்கிய அமெரிக்கா
Cattle feedlot
கால்நடைப் பண்னை, கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
மறி ஆடு

கால்நடை வளர்ப்பு (ஆங்கிலம்: Animal husbandry) என்பது வேளாண்மைத் துறையில், உணவு, கம்பளம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ்வாதார மட்டத்திலோ அல்லது பெருமளவு இலாபம் தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை - உணவு திரட்டலை வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.

கால்நடை வளர்ப்பு, முதல் பயிர்கள் விளைவிக்க தொடங்கும் முன்பில் இருந்தே, முதற் கற்காலப் புரட்சி தொடங்கியதில் இருந்தே, விலங்குகள் கிமு 13,000 அளவில் வீட்டினமாக்கப்பட்ட நெடுங்கால வரலாற்றைக் கொண்டதாகும். பண்டைய எகுபதியைப் போன்ற மிக முந்திய நாகரிகங்கள் காலத்தில், மாடு, செம்மறியாடு, வெள்ளாடுகள், பன்றி கள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டன.

பழைய உலகக் கால்நடைகள் புதிய உலகத்துக்குக் கொணர்ந்த கொலம்பியப் பரிமாற்றத்தின்போது பல பெருநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. பிறகு, பிரித்தானிய வேளாண் புரட்சி பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தபோது, நெடுந்திமில் காளைகளும் இலிங்கன்வகைச் செம்மறியாடுகளும் இராபர்ட் பேக்கர் எனும் உழவரால் கூடுதலாக இறைச்சியும் பாலும் கம்பளி முடிகளும் தரும்படி வேகமாக மேம்படுத்தப்பட்டன.

உலகின் பல பகுதிகளில் குதிரை, நீர் எருமை, இலாமா ஒட்டகம், முயல், கினி பன்றி போன்ற பலவகைக் கால்நடைகள் நடைமுறைக்கு வந்தன. இன்னும் சில பகுதிகளில் பூச்சி வளர்ப்பும் மீன்கள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகளும் வளர்க்கும் நீரியல் பண்ணைகளும் பரவலாகின.

கிடைக்கும் நிலங்களுக்கு ஏற்பத் தகவமைந்து, தற்கால வேளாண்விளைச்சல் அமைப்புகளும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிக வளர்ந்த நாடுகளில் செறிநிலை விலங்குப் பண்ணைகளை விட வாழ்தகு வேளாண்மை வடிவமே வெற்றி கண்டு வருகிறது. இங்கு உயரடர்த்திப் பண்ணைகளில் பன்றி இறைச்சிக் கால்நடைகளும் பிராயிலர் இல்லங்களில் அல்லதுஅடுக்குப் பண்ணைகளில் ஆயிரக் கணக்கான கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. வளங்குறைந்த மேட்டு நிலங்களில், தாமே பரவலான இடங்களில் மேய்ந்து வளரும்படி விலங்குகள் செறிவாக மேயவிடப்படுகின்றன.

பன்றிகள், கோழிகளைத் தவிர,பெரும்பாலான கால்நடைகள் தாவரவுண்ணிகளாக அமைகின்றன. முன்னவை அனைத்துண்ணிகளாகும். மாடு, ஆடு போன்ற அசைபோடும் விலங்குகள் புல்லுண்ணத் தகவமைந்துள்ளன; அவை வெளியே விட்டு மேயவிடப்படுகின்றன அல்லது கூலங்களைப் போன்ற வளமான புரத உணவு முழுமையாகவோ, பகுதியாகவோ ஊட்டப்படுகின்றன. பன்றிகளும் கோழியினப் பறவைகளும் தாம் மேயும் கூலங்களைச் செரிக்கவல்லனவாக இல்லை. எனவே, அவற்றுக்கும் பதப்படுத்திய கூலங்களும் பிற உயர்வள உணவுகளும் தேவைப்படுகின்றன.

வரலாறு[தொகு]

கால்நடை வளர்ப்பின் முன்னோடி தோற்றம்[தொகு]

விலங்குகளின், இனப்பெருக்கத்தையும் வாழ்க்கைச் சூழலையும் மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின.

கால்நடை வளர்ப்பின் தோற்றம்[தொகு]

கால்நடை வளர்ப்பில் முதன்மை இடம்பெறும் செம்மறியாடுகள்.

வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்கத்தையும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் அரிய மாற்றங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே ஆசியாவில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

வீட்டினமாக்கம் ஓர் எளிய நிகழ்வன்று. இது பல இடங்களில் பல காலங்களில் திரும்பத் திரும்ப ஏற்பட்ட தொடர்நிகழ்வாகும். செஅறியாடுகளும் வெள்ளாடுகளும் நடுவண் கிழக்குப் பகுதியில் இருந்து மேய்ச்சல் நாடோடிகளைப் பின்தொடர்ந்தவையாகும். ஆனால், மாடுகளும் பன்றிகளும் மிகவும் நிலையாக இடம்பெயராமல் வாழத் தொடங்கிய சமூகங்களுடன் உடனிருந்தவையாகும்.[1]

முதலில் வீட்டினமாக்கப்பட்ட விலங்கு நாய்தான். இளைய அரைக்காட்டு நாய் முதலில் துப்புரவு விலங்குகளாக ஏற்ருக்கொள்ளப்பட்டு, அதன் வேட்டையாடும் இயல்பை உணர்ந்ததும் மாந்த வேட்டையில் பங்கு பெற்றிருக்கவேண்டும். பிறகு, வேட்டையாடப்பட்ட விலங்குகளாகிய, செஅறியாடு, வெள்ளாடு, பன்றி, மாடு போன்றவை வேளாண்மை வரலாற்றின் மிக முந்திய காலத்தில் வீட்டினமாக்கப் பட்டிருக்கவேண்டும்.[1]

மெசபட்டோமியாவில் பன்றிகள் கிமு 13,000 ஆண்டளவில் வீட்டினமாக்கப்பட்டன.[2] செம்மறியாடுகள் பிறகு கிமு 11,000 முதல் கிம் 9,000 கால இடைவெளியில் வீட்டினமாக்கப்பட்டன.[3] மாடுகள் அவுரோக் எனும் காட்டுவகையில் இருந்து தற்காலத் துருக்கியும் பாக்கித்தானும் அமையும் புவிப்பகுதியில் கிமு 8,500 ஆண்டளவில் வீட்டினமாக்கப்பட்டன.[4]

பண்டைய நாகரிகங்கள்[தொகு]

பண்டைய எகுபதியில் பால்கறக்கும் பசு

இடைக்காலக் கால்நடை வளர்ப்பு[தொகு]

Painting of shepherd with sheep
செம்மறியாட்டுடன் இடையன். இடைக்காலப் பிரான்சு. 15 ஆம் நூற்றாண்டு எம் எசு தவுசு 195

கொலம்பியப் பரிமாற்றம்[தொகு]

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா தேட்டமும் குடியேற்றமும் ஐரோப்பாவில் மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மானியோக் ஆகிய பயிர்களை அறிமுகப்படுத்தின. இதேபோல, பழைய உலகின் கால்நடைகளாகிய மாடுகள், குதிரைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் கோதுமை, காடைக்கண்னி, நெல், நூக்கல் ஆகிய பயிர்வகைகளுடன் புதீய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வு கொல்ம்பியப் பரிமாற்றம் எனப்படுகிறது.[5]

வேளாண்மைப் புரட்சி[தொகு]

Lincoln Longwool Sheep
18 ஆம் நூற்றாண்டளவில் வேளாணியலாளர் இராபர்ட் பேக்கரால் மேம்படுத்தப்பட்ட இலிங்கன் நெடுமுடி வளர்ப்பினம்.

பதினெட்டாம் நூற்றாண்டளவில் நிகழ்ந்தேறிய பிரித்தானியப் புரட்சியின்போது வேளாணியலாளர் இராபர்ட் பேக்க ர் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் வழியாக அறிவியல் முறையில் வேண்டிய பண்புநலங்களை உருவாக்குதலை நிறுவினார் .

கால்நடை வளர்ப்பின் நோக்கங்கள்[தொகு]

  • இறைச்சி
  • பால் பொருட்கள்
  • இழைகள் - கால்நடைகளின் முடி
  • உரம் - கால்நடைக் கழிவுகள்
  • வேலைக்கு - வண்டி இழுக்கவும் சுமை தூக்கவும்

உணவு தரும் விலங்குகள்[தொகு]

இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள்

பால், முட்டை , இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முதன்மையாக அதன் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. சில ஆட்டினங்கள் அதன் பால் , இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. தேனீக்கள் தேனுக்காகவும் மீன் புரதம் சார்ந்த உணவிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.

முடி(கம்பளம்) தரும் விலங்குகள்[தொகு]

செம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா எனப்படும் ஒரு வகைக் ஒட்டகக் குடும்ப விலங்கு போன்றவை நமக்கு முடியைத் தருகின்றன. இவை சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு கம்பளி உருவாக்கப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பால் பட்டிழை ருவாகிறது.

இழுவை விலங்குகள்[தொகு]

ஏர் உழுதலுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படும் விலங்குகள் இழுவை விலங்குகள் ஆகும். எருது, காளை , குதிரை, யானை, கழுதை போன்ற விலங்குகள் விளை நிலங்களை உழுவதற்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

கால்நடை உற்பத்தி அமைப்பை உணவளித்தல் அடிப்படையிலும் அதாவது புல்வெளி சார்ந்தது, கலந்தது, நிலமற்றது. என வரையறுக்கலாம்.[6] புல்வெளி சார்ந்த கால்நடை வளர்ப்பு புதர்நிலம், மேய்ச்சல் நிலம் போன்ற தாவர இனங்களையும், விலங்குகளுக்கான உணவிற்கு மேய்ச்சல் நிலத்தையும் நம்பியிருக்கின்றன. இக்கால்நடை வளர்ப்பில் பெறப்படும் எருவும் வெளிப்புற ஊட்டச்சத்து அளிப்புகளும் நிலவளம் பெருகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் எரு ஒரு முதன்மையான ஊட்டச்சத்து வளமாக புல்வெளிக்கே நேரடியாக திருப்பியளிக்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு குறித்த சிக்கல்கள்[தொகு]

நவீனப் பால் கறக்கும் எந்திரம்- பசு மாட்டின் மடியிலிருந்து பால் உறிஞ்சப்படுகிறது

இந்த அமைப்பு குறிப்பாக 30–40 மில்லியன் மேய்ப்பர்கள் உள்ள வெப்பநிலை அல்லது மண்ணின் காரணமாக பயிர் விளைச்சல் ந்டக்காத பகுதிகளில் முதன்மை வாய்ந்ததாகிறது.[7] கலப்புவிளைச்சல் முறைகள் புல்வெளி, தீவன பயிர்கள், அசைபோடும் விலங்குகள் குறிப்பாக கோழிகளும் பன்றிகளும் கால்நடைகளுக்குத் தீனியிடும் பயி்ர்களை பயன்படுத்துகின்றன. பயிர்களுக்கான கலப்பு அமைப்புகளில் எரு மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஏறத்தாழ 68% வேளாண் நிலம் காலநடை வளர்ப்புக்கான நிலையான மேய்ச்சல் நிலமாக உள்ளன.[8] நிலமற்ற அமைப்புகள், பண்ணைக்கு வெளியிலிருந்து வரும் உணவு முறையை நம்பியிருக்கின்றன. இது வளர்ப்பின் பொருளாதாரக் கூட்டுறவு, வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) அதன் உறுப்பு நாடுகளில்[9] மிக இயல்பாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 70% கூல விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.[7]

நில ஊடுருவல்[தொகு]

திபெத்தில் உள்ள ஒரு மேய்ச்சல் நிலம்

பன்னாட்டவையின் இந்த்ச் சிக்கல் குறித்த ஆய்வாளரும் ஐ.நா.அறிக்கையின் இணை ஆசிரியருமான கென்னிங் சுட்டெயின்பீல்டு, "இன்றைய மிகவும் முனைப்பான சுற்றுச்சூழல் சிக்கல்களுக்கு மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக காலநடைகள் உள்ளன" என்று கூறியுள்ளார்.[10] கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் 70% நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது, அல்லது புவியின் நிலப்பரப்பில் 30 % நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டு ள்ளது.[11]

கால்நடை விரிவாக்கம் காடு அழித்தலை தூண்டக்கூடிய முதன்மைக் காரணியாகவும் பார்க்கப்படுகிறது, அமேசான் வடிநிலத்தில் முன்னர் 70% காடாக இருந்த பகுதி தற்போது மேய்ச்சல் நிலமாகவும், மீதமுள்ள பகுதி தீவனப்பயிர்களுக்கென்று பயன்படுத்துவதற்கும் கைப்பற்றிக் கொண்டு ள்ளது.[11] காடு அழிப்பு மற்றும் நில தரமிழப்பு மூலமாக கால்நடைகளும் சுற்றுச்சூழல் மாறுபாட்டுக் குறைப்பையும் தூண்டுகிறது.கலப்பு உரங்கள் பயிர் விளைச்சலையும் மிக அதிகமாக நம்பியிருக்கின்றன, எரு பயன்பாடு ஓர் அறைகூவலாகவும் மாசுபாட்டிற்கான வாயிலாகவும் ஆகிவிட்டன.

புவி வெப்பமயமாக்கல்[தொகு]

இது பசுமையில்ல வாயுக்களின் மிகப்பெரிய மூலாதாரமாகவும், கார்பன் டையாக்ஸைடிற்கு இணையாக அளவிடப்பட்டுள்ள உலகின் 18 சதவிகித பசுமையில்ல வாயுக்களின் வெளிப்பாட்டிற்கு பொறுப்பேற்றுள்ளது. ஒப்பீட்டுரீதியில் பார்த்தால், போக்குவரத்துக்கள் அனைத்தும் 13.5 சதவிகித கார்பன் டையாக்ஸைடையே வெளியிடுகின்றன. இது மனித இனம் சார்ந்த 65 சதவிகித நைட்ரஸ் ஆக்ஸைடையும் (புவி வெப்பமாதலுக்கு 296 முறை வாய்ப்புள்ள கார்பன் டையாக்ஸைடையும் கொண்டுள்ளது) மனித இனம் தூண்டும் மீத்தேனையும் (கார்பன் டை ஆக்ஸைடு புவியை வெப்பமாக்குவதைப் போல 23 மடங்கு) கொண்டுள்ளது. இது, அமிலமழையையும், சுற்றுச்சூழல் அமிலமாதலையும் வழங்கக்கூடிய அம்மோனியாவையும் 64 சதவிகிதம் உருவாக்குகிறது.

வேதிமயமாதல்[தொகு]

வேதிமயமாதல் அதாவது, நீர்சார்ந்த சூழலமைப்புகளில் மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது, அல்கல் பெருகுவதற்கும் உயிரகம் ( ஆக்சிஜன்) குறைவதற்கும் காரணமாகின்றதுது. மீன்கள் வீட்டினமாக்கம், உயிர்மாறுபாட்டு இழப்பிற்கு வழிவகுப்பதோடு, நீர் நிலைகளைக் குடிப்பதற்கும் பிற தொழிலகப் பயன்பாட்டிற்கும் பயனற்றதாகச் செய்கிறது. பயிர்நிலத்தில் மிதமிஞ்சி உரமிடலும் எருவைப் பயன்படுத்தலும் பேரளவில் கால்நடைகளைப் பெருக்குதல் ஆகியவை வேளாண் நிலத்திலிருந்து ஊட்டச்சத்து (முதன்மையாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்) அழிவதற்கும் நீர்க் கசிவிற்கும் காரணமாகிறது. இந்த ஊட்டச் சத்துக்கள், நீர்சார்ந்த சூழலமைப்பை வேதிமயமாக்கலுக்கு உள்ளாக்கி மாசுறச் செய்கின்றன.[12]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "History of the domestication of animals". Historyworld. பார்க்கப்பட்ட நாள் 3 June 2017.
  2. Nelson, Sarah M. (1998). Ancestors for the Pigs. Pigs in prehistory. University of Pennsylvania Museum of Archaeology and Anthropology. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781931707091. https://books.google.com/books?id=N5dN_A29v58C. 
  3. Ensminger, M.E.; Parker, R.O. (1986). Sheep and Goat Science (Fifth ). Interstate Printers and Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8134-2464-4. 
  4. McTavish, E.J.; Decker, J.E.; Schnabel, R.D.; Taylor, J.F.; Hillis, D.M. (2013). "New World cattle show ancestry from multiple independent domestication events". Proc. Natl. Acad. Sci. U.S.A. (National Academy of Sciences) 110 (15): 1398–1406. doi:10.1073/pnas.1303367110. பப்மெட்:23530234. Bibcode: 2013PNAS..110E1398M. 
  5. Crosby, Alfred. "The Columbian Exchange". History Now. The Gilder Lehrman Institute of American History. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  6. செரி, சி., எச். ஸ்டெயின்பீல்ட் மற்றும் ஜே. குரோயன்வெல்ட். 1995, ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு. ரோம், இத்தாலி"உலக கால்நடை வளர்ப்பு முறைகளின் விவரி்ப்பு - தற்போதைய நிலையும் போக்குகளும்" பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் டிசம்பர் 7, 2008இல் அணுகப்பட்டது.
  7. 7.0 7.1 எம்.ஜே. கிறிஸ்ட்பீல்ஸ், டி.இ. சதவா. 1994 வேளாண் முறைகள்: வளர்ச்சி, விளைச்சல் திறன், நீடிப்புத் திறன்சார்ந்த "Plants, Genes, and Agriculture" எனும் நூல் பக்கம் 25-57. ஜோன்ஸ் அண்ட் பார்ட்லெட் பப்ளிஷர்ஸ், பாஸ்டன், எம்ஏ.
  8. FAO டேட்டாபேஸ், 2003
  9. http://www.oecd.org/document/58/0,3746,en_2649_201185_1889402_1_1_1_1,00.html
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
  11. 11.0 11.1 ஸ்டெயின்ஃபீல்ட், எச்., பி. கெர்பர், டி. வாஸெனெர், வீ. கேஸ்டல், எம். ரொஸெல்ஸ், சி. டெ ஹான். 2006 இல் பன்னாட்டவையின் உணவு, வேளாண்மை அமைப்பு. உரோம், இத்தாலி "கால்நடைகளின் நீண்ட நிழல் - சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் விருப்பத்தேர்வுகளும்." பரணிடப்பட்டது 2008-06-25 at the வந்தவழி இயந்திரம் டிசம்பர் 5, 2008 இல் மீள்பதிவு
  12. கார்பென்டர், எஸ்.ஆர்., என்.எஃப் காரெகோ, டி.எல். கோரல், ஆர்.டபிள்யூ. ஹோவார்த், ஏ.என் ஷார்ப்லே, மற்றும் வி.எச். ஸ்மித். 1998Nonpoint Pollution of Surface Waters with Phosphorus and Nitrogen. எகோலாஜிக்கல் அப்ளிகேஷன் 8:559-568.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடை_வளர்ப்பு&oldid=3696313" இலிருந்து மீள்விக்கப்பட்டது