கல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணை, மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது. 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பண்ணை ஒரு முன்மாதிரிப் வேளாண்பண்ணையாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

அமைவு[தொகு]

மேட்டுப்பாளையம்-ஊட்டி நெடுஞ்சாலையில் முதல் கொண்டைஊசி வளைவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த அரசுப்பண்ணை அமைந்துள்ளது. இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 360 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பண்ணையின் மொத்தப் பரப்பளவு 8.92 ஹெக்டேர்கள். வேளாண்மக்களுக்குத் தேவையான தரமான நாற்றுகள், விதைகள், மரக்கன்றுகள் ஆகியவற்றை சரியான மற்றும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதற்காகத் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வழங்கும் நோக்கத்துடன் 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பயிரிடப்படுவை[தொகு]

எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை போன்ற பழவகைகள்; மங்குஸ்த்தான், துரியன், லிச்சி, ரம்பூட்டான், லாங்சாட் போன்ற அரியவகைப் பழங்கள்; மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை போன்ற வாசனைப் பொருட்கள் ஆகியவை இங்கு பயிரிடப்படுகின்றன. அலங்காரச் செடிகளும் இங்கு கிடைக்கின்றன.

சுற்றுலா மையம்[தொகு]

தாவரவியல், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையின் முன்மாதிரிப் பண்ணையாக உருவான இப்பண்ணை இயற்கைச் சூழலில் அமைந்த நல்லதொரு சுற்றுலா மையமாகவும் இன்று விளங்குகிறது. இந்த இடத்தின் தட்பவெப்ப நிலை மிதமானதாக உள்ளதால் ஆண்டுமுழுவதும் இங்கு பொதுமக்களும் வேளாண் மாணவர்களும் இப்பண்ணையைப் பார்வையிட வருகின்றனர். இங்குள்ள அருவி சுற்றுலாப் பயணிகளுக்கு மனமகிழ்வைத் தரக்கூடியது.

இப்பண்ணைக்கு முக்கிய நபர்கள் பலர் பார்வையிட்டுள்ளனர்:

நபர்கள் நாள்
நேரு, இந்திராகாந்தி, காமராஜர் 29.05.1959
தமிழக ஆளுநர் உஜ்ஜல்சிங் 06.06.1968
எம். ஜி. ஆர் 21.02.1969
எம். எஸ். ஹில்- ஆர்சிஎஸ், பஞ்சாப் 01.05.1970
டாக்டர். பால், தலைமை இயக்குனர், இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம், புதுதில்லி 13.05.1970
டாக்டர். வால்டர்
முஹெம்ப்ஜனொர், ரஷ்ய தூதரகம், புது தில்லி 27.02.1973
டாக்டர். கே. எஸ். சதா, துணைத் தலைமை இயக்குனர், இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம், புதுதில்லி 27.02.1989
வீரபாண்டி ஆறுமுகம், வேளாண்துறை அமைச்சர், தமிழ்நாடு (அப்போதைய) 18.05.1990

ஆதாரங்கள்[தொகு]