கலம்பகம் (இலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.

பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174)[1] (பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து) என்று ஓர் அடி, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப் படையில் வருகின்றது. இதற்குப் பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார். பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை. ஆகையால் கலம்பக மாலை என்கிறார். தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும்.

சொற்பிறப்பு[தொகு]

கலம்பகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். கலம்பு + அகம் = கலம்பகம் என்றும், கலம் + பகம் = கலம்பகம் என்றும் இந்தச் சொல்லைப் பிரிக்கலாம். பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே - உள்ளே - கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது. கலம் என்றால் 12 என்று பொருள். பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கும் பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும். எனவே, 12 + 6 = 18. இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது எனலாம். பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.

கலம்பகத்தின் அமைப்பு[தொகு]

பன்னிரு பாட்டியல் என்னும் நூல் [2] இதன் இலக்கணத்தைக் கூறுகிறது.[3]

ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

கலம்பக இலக்கியங்கள் சில[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. பெரும்பாணாற்றுப் படை -174
  2. 14 ஆம் நூற்றாண்டு
  3. சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு
    முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
    அம்மனை ஊசல் யமகம் களி மறம்
    சித்துக் காலம் மதங்கி வண்டே
    கொண்டல் மருள் சம்பிரதம் வெண்டுறை
    தவசு வஞ்சித்துறையே இன்னிசை
    குறம் அகவல் விருத்தம் என வரும்
    செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம்
    ஆதி யாக வரும் என மொழிப

    (பன்னிரு பாட்டியல் 213 - தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 264)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலம்பகம்_(இலக்கியம்)&oldid=3678679" இலிருந்து மீள்விக்கப்பட்டது