கலக்கொள்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலக்கொள்கை சகல உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு கலம் எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு நடு 1600 களில் நுண் நோக்கியலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை உயிரியலின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
பொருளடக்கம் |
[தொகு] மரபார்ந்த பொருள்விளக்கம்
- சகல உயிரினங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலங்களால் ஆனவை.
- சகல உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு கலம் ஆகும்.
- சகல கலங்களும் முதலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும்.
- உயிரினங்களின் கட்டமைப்பு, உடற்றொழியியல் அமைப்பு கலம் ஆகும்.
[தொகு] வரலாறு
கலமானது முதன்முதலாக 1665 இல் ரொபர்ட் ஹுக் (Robert Hooke) இனால் கண்டறியப்பட்டது. அவர் தக்கையின் மிக மெல்லிய துண்டுகளை ஆராய்கையில் தேன்கூட்டின் அறைகளைப் போன்ற பெருந்திரளான நுண்ணிய துளைகளை அவதானித்தார். இதனால் ஹுக் அவற்றை கலங்கள் எனப் பெயரிட்டார். எனினும் அவருக்கு அதன் உண்மையான அமைப்பும், தொழிற்பாடும் தெரியவில்லை. [1]. இக்கலங்கள் (உண்மையிலேயே அவை உயிரற்ற கலச்சுவர்) பற்றி ஹுக் தனது "Micrographia" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். [2]. அவரின் குறிப்பில் கரு பற்றியோ மற்றைய கலப்புன்னங்கள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
முதன் முதலாக நுணுக்குக்காட்டியினூடாக உயிருள்ள கலத்தை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஹுக் (Antonie van Leeuwenhoek). [3]
[தொகு] கலங்களின் வகைகள்
கலங்களை இரு வகைகளாக பிரிக்கலாம்.
- நிலைகருவற்ற உயிர்கள்: நிலைகருவற்ற உயிர்கள் கரு இல்லாது காணப்படும். (எனினும் அவை வளைய டி.என்.ஏ ஐ கொண்டிருக்கின்றன) அவற்றில் மென்சவ்வினால் சூழப்பட்ட கலப்புன்னங்கள் காணப்படுவதில்லை. பக்ரீரியா மற்றும் ஆர்க்கீயா இவற்றின் பிரிவுகள் அகும்.
- நிலைகருவுள்ள உயிர்கள்: நிலைகருவுள்ள உயிர்கள் தெளிவாகத் தெரியும் கருவும், மென்சவ்வால் சூழப்பட்ட கலப்புன்னங்கள் (இழைமணி, பச்சையவுருமணி, இலைசொசோம், அழுத்தமற்ற மற்றும் அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை, புன்வெற்றிடம்).
நிலைகருவற்ற உயிர்களிடத்தில் ((prokaryotes) உள்ள நகர்திலிகள் (Flagella), பிளசுமிட் போன்ற அமைப்புகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் ((Eukaryote)) இல்லை (ஒரு செல் நிலைகரு உயிரான ஈசுட் (yeast) தவிர, இவைகள் 2 micron என்ற பிளசுமிட் கொண்டுள்ளது).
நிலைகருவுள்ள உயிர்களிடம் (Eukaryote) உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்ற கலப்புன்னங்கள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) இல்லை. இவை இரு உயிர்களில் காணப்படும் றைபோசோம் அளவுகளில் மாற்றங்கள் உள்ளன. நிலைகருவற்ற உயிர்களிடத்தில் 70S றைபோசோமும் நிலைகருவுள்ள உயிர்களிடம் 80S றைபோசோமும் உள்ளன. றைபோசோமில் புரத உற்பத்தி நடைபெறுகிறது. பெரும்பாலும் நோய்களை அழிக்கும் அனைத்து மருத்துகளும் (antibiotics), இப்புரதஉற்பத்தியை தடுத்து, நுண்ணுயிர்களை பல்கி பெருக விடாமல் தடுக்கக்கூடியன.
நுண்ணுயிர்களின் புரத உற்பத்தி தடுக்கும் மருந்துகள், ஏன் நமது உடலில் நடைபெறும் புரத உற்பத்தி தடுக்க முடியவில்லை என வினா எழுகின்றது அல்லவா? இங்குதான் றைபோசோம் அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமக்கு கொடுக்கப்படும் மருந்து, 70S றைபோசோமில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க வல்லன.
மேலும் நிலைகருவுள்ள உயிர்களிடம் உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்றவைகளில் டி.ஏன்.ஏ கள் உள்ளன. இவை பச்சையவுருமணி டி.ஏன்.எ என்றும், இழைமணி டி.ஏன்.எ என்றும் அழைக்கப்படும். படிவளர்ச்சி கொள்கையில் இவைகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் இருந்து தோன்றி இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பச்சையவுருமணி நீல பாசிகளிடம் இருந்தும், இழைமணி பக்றீரியாவிடம் இருந்தும் வந்து இருக்க கூடும். இது அக ஒன்றிய வாழ்வுக்(Endosymbiotic) கொள்கை என அழைக்கப்படும். இக்கொள்கையை உறுதிபடுத்த மேலும் சில சான்றுகள்:
- பச்சையவுருமணி, இழைமணி உள்ள றைபோசோம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்ற 70S அளவுகளிலே உள்ளன.
- பச்சையவுருமணி மற்றும் இழைமணிகளில் உள் மற்றும் வெளிச் சவ்வுகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்று ஒத்து உள்ளது.
- டி.என்.ஏ ஆய்வுகள் முடிவும் பக்றீரியா டி.என்.ஏ களோடு ஒற்றுமையாக செல்கின்றன.
- பச்சையவுருமணி, இழைமணி புரத உற்பத்தியின் போது, தொடங்கப்படும் அமினோ அமிலம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்றது ஆகும். (N-formylmethionine ).
- இழைமணி, நிலைகருவற்ற உயிர்களை போன்ற மாற்றி அமைப்புகள் (transport system) கொண்டுள்ளன.
- நிலைகருவற்ற அளவுகள் நிலைகருவற்ற உயிர்களை போன்ற அளவுகாகும்.
- மேலும் நிலைகருவற்ற உயிர்களின் புரத உற்பத்தியை தடுக்கும் அனைத்து மருந்துகளும் பச்சையவுருமணி, இழைமணி புரத உற்பத்தியை தடுக்கின்றன.
[தொகு] இவற்றையும் பாக்க
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Inwood, Stephen (2003). The man who knew too much: the strange and inventive life of Robert Hooke, 1635-1703. London: Pan. பக். 72. ISBN 0-330-48829-5.
- ↑ Karling JS (1939). Schleiden's Contribution to the Cell Theory. The American Naturalist 73: 517–37.
- ↑ Moll WAW (2006). "Antonie van Leeuwenhoek". பார்க்கப்பட்ட நாள் 2008-11-25.
[தொகு] வெளி இணைப்புகள்
- Mallery C (2008-02-11). "Cell Theory". Retrieved 2008-11-25.
- "Studying Cells Tutorial". 2004. Retrieved 2008-11-25.