கரும்பனூர் கிழான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரும்பனூர் கிழான் சங்ககால மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த கொடைவள்ளல். திருவேங்கட மலைப்பகுதி நாட்டை ஆண்டுவந்தான். புலவர் நன்னாகனார் இவனைப் பெருமைப்படுத்திப் பாடியுள்ளார்.

பாடப்பட்டுள்ள பாடல்கள்[தொகு]

புறநானூறு 381[தொகு]

வேங்கட நாட்டு மன்னனாகக் கரும்பனூரில் இருந்துகொண்டு அரசாண்ட மன்னன் கரும்பனூர் கிழான். இவன் வேங்கட நாடன் எனவும் குறிப்பிடப்படுகிறான்.

இவனைப் புலவர் அறத்துறை அம்பி என்று போற்றுகிறார். மக்களின் வாழ்க்கை என்னும் பேராற்றில் கொடை வழங்கும் அறத்தின் படித்துறையாக விளங்கியவன் இந்த மன்னன். ஆற்றைக் கடக்க உதவும் அம்பி என்னும் தெப்பம் உறுவர்களையும் (பெரியவர்களையும்) சிறுவர்களையும் அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டுசெல்லும். அதுபோல இவன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவி வந்தான். ஊனும் ஊணும் (கறியும் சோறும்) தின்று சலிக்கும்போது பால்சோறு தருவானாம். பிரியும்போது பிறரிடம் சென்று கையேந்தாவண்ணம் கொடை நல்குவானாம்.

புறநானூறு 384[தொகு]

இந்தப் பாடலில் அடிகள் சிதைந்துள்ளன.

முயல் தாவும்போது இரும்பைப் பூ கொட்டுமாம். விழா இல்லாவிட்டாலும் உழவரின் மண்பானையில் சோறு மலர்ந்திருக்குமாம். புலவர் போதும் போதும் என்று தடுத்தாலும் கரும்பனூர் கிழான் கொடை வழங்குவதை நிறுத்தமாட்டானாம். இவனது கொடைப்புகழைக் கண்டு உணவை நல்கும் மண்ணே நாணிற்றாம். இவன் விருந்தினர்க்கு ஊற்றும் நெய்யைக் கண்டு நீரே நாணம் கொண்டதாம். மழை வழங்கும் வெள்ளி எங்கு போனால் என்ன? கரும்பனூர் கிழானின் கொடை தடையின்றி வழங்கப்படுமாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பனூர்_கிழான்&oldid=1266940" இலிருந்து மீள்விக்கப்பட்டது