கரந்தடிப் போர்
கரந்தடிப் போர்முறை அல்லது கொரில்லாப் போர்முறை (Guerrilla warfare) என்பது ஒருவகை ஒழுங்கில்லாப் போர்முறை ஆகும். இந்தப் போர்முறை ஆயுதம் தாங்கிய குடிமக்கள் அடங்கிய ஓர் சிறிய போராளிக் குழு பெரிய விரைவாக இயங்க இயலாத வழமையானப் படைகளை எதிர்கொள்வதாகும். இதற்கு பதுங்கித் தாக்குதல், நாசமாக்கல், திடீர்த் தாக்குதல், எதிர்பாராத தன்மை, மிக விரைவான இயக்கம் போன்ற படைத்துறை செய்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி கொள்வதும் தாக்கப்படக்கூடிய இலக்குகளை தாக்கி விரைவாகத் திரும்பிவிடுதலும் ஆகும்.
இது உலகின் பல மொழிகளிலும் கொரில்லாப் போர் என்று வழங்கப்படுகிறது. எசுப்பானிய மொழியில் இந்தச் சொல்லிற்கு சிறிய போர் என்ற பொருளாகும். 18ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பிருந்தே இந்தச் சொல் இத்தகைய போர்வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரில்லா என்ற சொல் ஆங்கிலத்தில் 1809 முதல் புழக்கத்தில் உள்ளது.
உத்திகள், செய்முறைகள் மற்றும் அமைப்பு [தொகு]
கரந்தடிப் போர்முறையில் உத்திகளும் செய்முறைகளும் சிறிய விரைந்தியங்கும் போராளிக்குழு பெரிய படையை எதிர்ப்பதைக் குவியப்படுத்துகின்றன.[1] உள்ளூர் மக்களின் ஆதரவுடன் சிறியக் குழுக்களை ஒழுங்குபடுத்துவதும் அவர்கள் இயங்கக்கூடிய நிலப்பரப்பு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் கொரில்லாக்களின் நோக்கமாகும்.
எதிரிப் படைகளை பெரும் எண்ணிக்கையில் கரந்தடிப் படை எதிர்கொள்வதில்லை; சிறிய குழாமாக இருக்கும் எதிரி வீரர்களை தேடி ஒழிப்பதன் மூலம் தங்கள் இழப்புகளைக் குறைப்பதுடன் எதிரிக்கு எரிச்சல் மூட்டவும் முடிகிறது. எதிரி ஆட்களை மட்டுமல்லாது ஆயுதக் கிடங்கு போன்ற எதிரியின் வளங்களையும் தங்களது இலக்காக கொள்கிறார்கள். இதனால் எதிரியின் பலம் குறைகிறது; இந்தப் போர்முறையில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க இயலாது எதிரிப்படை பின்வாங்குகிறது.
பொதுவாக கொரில்லாப் போர்முறையில் குடிமக்கள் போல நடித்து எதிரிப்படையால் இனம் காண முடியாத போர்முறை இது என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது இந்தப் போர்முறையின் முதன்மை சிறப்புக் கூறு இல்லை. எங்கெல்லாம் போராளிகள் மறைந்திருந்து தாக்க முடியுமோ தவிர அந்த வாய்ப்பு பெரிய வழமையான எதிரிப்படைக்கு இல்லாதிருக்கிறதோ அங்கு இந்தப் போர்முறையை கையாள முடியும்.
Communist leaders like மா சே துங் மற்றும் வடக்கு வியத்நாமிய ஹோ சி மின் போன்ற பொதுவுடமைத் தலைவர்கள் கரந்தடிப் போர்முறைக்கு அறிமுறை அடிப்படை வழங்கி செயலாக்கினர். இந்த உத்திமுறைகளே கூபாவின் ஃபோகோ கோட்பாட்டுக்கும் ஆப்கானித்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான முஜாஹிதீன் படைகளுக்கும் முன்மாதிரியாக விளங்கின.[2]
சங் கை செக்குடனான சீன உள்நாட்டுப் போரின்போது மா சே துங் கரந்தடிப் போரின் அடிப்படை உத்திகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: "எதிரி முன்னேறுகிறான், நாம் பின்வாங்குகிறோம்; எதிரி தங்குகிறான், நாம் துன்புறுத்துகிறோம்; எதிரி களைப்படைகிறான், நாம் தாக்குகிறோம்; எதிரி பின்வாங்குகிறான், நாம் துரத்துகிறோம்."[3]
இந்தப் போர்முறை உத்திகள் இருபதாம் நூற்றாண்டில் தான் துவங்கின என்றபோதும் தற்கால கரந்தடிப் போரை ஒத்த சண்டைகள் பழங்காலங்களிலும் சிறிய அளவுகளில் நடைபெற்றுள்ளன. தற்கால வளர்ச்சிக்குத் தூண்டலாக 19ஆம் நூற்றாண்டில் மத்தியாசு ரமன் மெல்லாவின் மானுவல் டெ கொர்ரா டெ கொரில்லாசு என்ற நூல் வகுத்த அறிமுறை வடிவமும் தங்களின் புரட்சிகள் வெற்றி பெற்ற பின்னர் எழுதப்பட்ட மா சே துங்கின் புத்தகமும், செ குவாரவின் நூலும் லெனினின் நூலும் அமைந்தன. செ குவாராவின் வார்த்தைகளில் கரந்தடிப் போர் "பெரும்பான்மையினரால் ஆதரவளிக்கப்படும் ஆனால் சிறிதளவே ஆயுதபலம் கொண்ட தரப்பினர் தங்கள் பாதுகாப்பிற்காக அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் போராகும்".
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Creveld, Martin Van (2000). "Technology and War II:Postmodern War?". in Charles Townshend. The Oxford History of Modern War. New York, USA: Oxford University Press. pp. 356–358. ISBN 0-19-285373-2.
- ↑ McNeilly, Mark. Sun Tzu and the Art of Modern Warfare, 2003, p. 204. "American arming and support of the anti-Soviet Mujahadeen in Afghanistan is another example."
- ↑ Mao Tse-tung, “A Single Spark Can Start a Prairie Fire”, Selected Works, Eng. ed., FLP, Peking, 1965, Vol. I, p. 124.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கொரில்லாப் போர்முறை தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| விக்சனரியில் guerrilla என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- மரபுசார் கொரில்லாக் குழுவினரின் எசுப்பானிய கீதம்
- மெக்சிகோவின் பெண் கொரில்லாக்களுக்கு அஞ்சலி. On the Freedom Country
- abcNEWS: இரகசியப் போர் - ஈரான் மீதான பாக்கிதான் போராளிகளின் திடீர்த் தாக்குதல்
- என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா, கொரில்லா போர்முறை
- கொரில்லா போர்முறை குறித்து மா சே துங்
- கொரில்லாப் போர்முறை குறித்து செ குவாராPDF (254 KiB)
- கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள காட்டுச் சண்டை பள்ளி (CIJWS) இந்தியா