கயமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயமனார் , சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை வரிசையில் எங்கு உள்ளார் என்பதை நாமே அளவிட்டுகொள்ள முடியும். சங்கப் புலவர்களில் 50-இக்கும் குறைவான எண்ணிக்கையில் பாடல்கள் பாடிய ஏழு புலவர்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் எனல் ஒரு கணிப்பு.[1] இவரது 23 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அன்னி, திதியன் ஆகிய குறுநிலத் தலைவர்களை இவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

பெயர்க்காரணம்[தொகு]

இவரது பெயர் இயற்பெயரா, காரணப் பெயரா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை. சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்கள் புலவர்கள் பற்றி குறிப்புகளையும் எழுதிச் சென்றுள்ளனர். இந்த வகையில் கயமனார் என்ற பெயருக்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுள்ளன.

  1. ‘கய’ என்ற சொல் பெருமையை உணர்த்தும்; ஆதலால் இவர் பெரியவர் பெருமைக்குரியவர் என்ற பொருள்படக் கயமனார் எனப்பட்டார் என்பது.
  2. பசுமையான இலைக்கு மேல் எழுந்த நெய்தல்பூ உப்பங்கழியில் தண்ணீர்மிகும் போதெல்லாம் நீரில் மூழ்கும் மகளிரின் கண்போன்றிருக்கும் என்பதுபட இவர் குறுந் தொகைப் பாடல் ஒன்றில் உவமை கூறியிருக்கிறார்.“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்இனமீன் இடுங்கழி ஓதல்மல் குதொறும்கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்”(குறுந்தொகை - 9)என்பது அந்தப் பாடல்.இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கயம் என்ற சொல்லின் சிறப்பு கருதி ‘கயமனார்’ எனப் பெயர் பெற்றார் என்பது.[1]
  3. கயம் என்னும் சொல் நிலத்தில் வாழும் விலங்குளில் பெரிய விலங்காகிய யானையை உணர்த்தும்.யானை போன்றவர் என்னும் பொருள் படுவதாகவும் இச்சொல் அமைந்திருக்கலாம்.

பாடல்கள்[தொகு]

இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய உடன்போக்குச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன.

அகப்பொருள்[தொகு]

நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது. அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397
குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396
நற்றிணை 12, 198, 279, 293, 305, 324

புறப்பொருள்[தொகு]

புறநானூறு 254
ஆகியவை.

அரிய செய்திகள்[தொகு]

  • குயவன் சொச்சிப் பூவைத் தலையில் சூடிக்கொண்டு (உணவுப்)பலி தரும் ஊர்த்திருவிழாவை அறிவிப்பான். - நற்றிணை 293
  • கோவலர் நிலத்தை உடைத்து நீர் கசியும் கூவலில் தம் ஆனிரைகளுக்கு நீரூட்டுவர். - அகம் 321
  • 'வளையில் வறுங்கை ஓச்சி' அவனது கிளைஞர் அழ, எழுப்ப எழா மார்பனாய் மள்ளன் இறந்துகிடந்து கிடந்தான். - புறம் 254
  • புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305
  • யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397

தெருவிளக்கு[தொகு]

பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17

வண்டல் விளையாட்டு[தொகு]

விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275

புலிப்பல் தாலி[தொகு]

தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7

சிலம்பு கழி நோன்பு[தொகு]

தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321
போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17

வரலாறு[தொகு]

குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் போர். திதியனின் காவல் மரம் புன்னை. அந்தப் புன்னையை அன்னி துண்டு துண்டாக வெட்டிச் சாய்த்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 மயிலை பாலு (13 மே 2013). "சங்கப் புலவர்கள் - கயமனார்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயமனார்&oldid=3426016" இலிருந்து மீள்விக்கப்பட்டது