கம்பளைதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பளைதாசன் (இயற்பெயர்: சாகுல் ஹமீது, இறப்பு: அக்டோபர் 14, 2011, அகவை 72) இலங்கை கலை, இலக்கிய வட்டத்தில் பெயர் பெற்றவர். மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என்ற வட்டத்தில் ஐம்பதாண்டு காலமாக வலம் வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சாகுல் ஹமீது தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் பிறந்தவர். தந்தை அப்துல் காதர். குடும்பத்தில் இவருடன் மூன்று பெண்கள். இவர் மட்டும்தான் ஆண். சிறு வயதிலேயே தந்தையுடன் இலங்கைக்குப் புலம் பெயர்ந்தார். தந்தை கொழும்பில் தொழில் பார்த்தார். ஹமீது கம்பளையில் உறவினரின் வீட்டில் தங்கிப் படித்தார். மரியாவத்தை கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, நாடகம் போன்றவற்றில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு கொழும்பு வந்து விட்டார்.[1].

கலையுலகில்[தொகு]

பதினேழு வயதில் ‘முத்தமிழ் கலா மன்றம்’ என்ற பெயரில் தமிழ் மன்றம் ஒன்றை ஆரம்பித்து அதனூடாக முதல் நாடகம் கொட்டாஞ்சேனை பிரின்ஸ் கல்லூரி என்ற பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. திமுக ஆர்வலர் ஏ. ரகுமான் திரைக்கதை எழுதிய ‘கடமை வீரன்’ நாடகத்தில் இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு ‘விளக்கேற்றி வைத்தவள்’ நாடகத்தில் சமுதாயம் படக் கதாநாயகி ஜெயகெளரியோடு நடித்தார். இவர் திரைக்கதை எழுதி இயக்கிய நாடகம் ‘கந்தசாமி பிள்ளை’. இந்த நாடகத்தில் எஸ். எஸ். சந்திரனும் இவருடன் நடித்தார். அதனைத் தொடர்ந்து லடிஸ் வீரமணி, கலைச்செல்வன், பத்திரிகையாளர் ஜோ. ஜெயசீலன் உள்ளிட்ட பலரின் நாடகத்தில் நடித்திருக்கிறார்[1].

தி. மு. க.வின் எழுச்சி இலங்கையில் பரவிய போது கழக உறுப்பினர்கள் பலர் அழகான தமிழ் பெயர்களைத் தமக்குத் தாமே சூட்டிக் கொண்டார்கள். அதைப் பின்பற்றி இவரும் தன் பெயரைக் கம்பளைதாசனாக மாற்றிக் கொண்டார். முத்தமிழ் மன்றமாக இருந்த இவரது மன்றம் இடையில் எம். ஜி. ஆர் மன்றமாக மாற்றப்பட்டது.[1]

மறைவு[தொகு]

ஒரு மாதமாக மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பளைதாசன், சிகிச்சை பலனளிக்காமல் 2001, அக்டோபர் 14 அன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 72. அவரது உடல் தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளைதாசன்&oldid=3365437" இலிருந்து மீள்விக்கப்பட்டது