கமலாம்பாள் சரித்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் (புதினம்) கருதப்படுகிறது.[1] இதனை பி. ஆர். இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் 1893 பெப்ரவரியில் இருந்து எழுதத் தொடங்கினார்.

விவேக சிந்தாமணியின் முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்ற தலைப்பிலும் மூன்றாவது இதழில் இருந்து ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வந்து 1895 ஜனவரியில் நிறைவுற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது பி. ஆர். சிவசுப்பிரமணிய ஐயர் என்ற பெயரிலேயே எழுதினார்.

ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார்.

கதைச் சுருக்கம்[தொகு]

சிறுகுளம் என்ற கிராமத்தில் வாழும், முத்துசாமி அய்யர் - கமலாம்பாள் என்ற தம்பதியினரை கதைமாந்தர்களாகக் கொண்டது இந்த நாவல். சிறுகுளத்திலிருந்து பனராஸ் வரை இந்நாவலின் களம் விரிந்திருக்கிறது. நிறைவாக வாழ்ந்த இத்தம்பதியர்களின் வாழ்க்கை, சுற்றம் மற்றும் பந்துமித்திரர்களின் அபவாதங்களால் சீரழிவதைப் பற்றிய கதைக் களனைக் கொண்டது இந்த நாவல்.

விமரிசனங்கள்[தொகு]

19ஆம் நூற்றாண்டின் மக்களினைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு மற்றும் நாட்டுப்புற சூழல் பற்றி கூரியமான அவதானிப்பினை பதிவு செய்துள்ளது இந்த நாவல். இந்த அவதானிப்பினை பதிவு செய்ததாலும், தத்துவ மற்றும் இயல்பான நகைச்சுவை பரவியிருப்பதாலும், இந்நாவல் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்நாவல் தெற்காசிய இலக்கியத்தின் ஒரு மைல் கல்லாக திகழ்கிறது.

கமலாம்பாள் சரித்திரத்தின் முற்பகுதியானது ராஜமய்யரின் இலக்கியக் கலைத்திறனாலும், அனுபவ செழுமையாலும் நிறைந்துகிடக்கிறது. இயல்பான பேச்சும், பல வண்ணங்கள் கொண்ட நகைச்சுவையும், யதார்த்தமான நடையும், நடமாடும் கதைமாந்தரின் குணச்சித்திரமும் பிரமிக்க வைக்கும் நேர்த்தியோடு அமைந்திருக்கிறது.

ஆங்கில மொழிபெயர்ப்பு[தொகு]

பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம். உலகக் கலாசார வரிசையில் வெளியிடுவதற்காக ஐக்கிய நாட்டு ஸ்தாபனம், சுமார் ஐம்பதாண்டுகளுக்கு (1950இல்) முன்பே தேர்ந்தெடுத்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகியது. என்ன காரணமோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. மொழிபெயர்ப்பும் தொலைந்துவிட்டது.

பின்னர் இந்த நாவல், The Fatal Rumour என்று ஆங்கிலத்தில் ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் (Stuart Blackburn) என்பவர், பல ஆண்டுகள் அந்த நாவலை ஆராய்ந்து, 1999 இல் அடிக்குறிப்புகளும் சிறப்பு அகராதியும் இணைத்து அந்த நாவலை ஆங்கில மொழியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடச் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு, 2000ஆம் ஆண்டின் ஏ. கே. ராமானுஜன் மொழிமாற்றப் படைப்புக்கான விருதினைப் பெற்றது.

குறிப்புகள்[தொகு]

  1. அண்மையில் 1885 இல் மு. கா. சித்திலெப்பையால் எழுதப்பட்ட அசன்பே சரித்திரம் இரண்டாவது தமிழ்ப் புதினம் எனத் தெரிய வந்துள்ளது

உசாத்துணை[தொகு]

  • செகந்நாதன், ப., பி. ஆர். இராஜம் ஐயர், தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை, 1997
  • வெங்கட் சாமிநாதன், என் பார்வையில்.
  • அசோகமித்ரன், "B.R. Rajam Aiyar and His Kamalambal Charitrans", The Literary Criterion 21.1&2 (1986):86-92.
  • உமா பரமேஸ்வரன். "Rajam Aiyar's Vasudeva Sastry" , The Literary Endeavour 6.1 (1985):55-67.
  • S. விஸ்வநாதன். "Rajam Iyer's Vasudeva Sastry or True Greatness: Apologue or Religious Novel?" Journal of Indian Writing in English 2.1: 49-53.
  • க. நா. சுப்பிரமணியம் Rajam Iyer: a pioneer Tamil novelist. (Modern Indian authors), Indian and Foreign Review (New Delhi) 16, no.12 (1 Apr 1979, 20-22 )
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாம்பாள்_சரித்திரம்&oldid=2057241" இலிருந்து மீள்விக்கப்பட்டது