கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கதிர்வீச்சு நோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10T66.
ஐ.சி.டி.-9990
மெரிசின்பிளசு000026
ஈமெடிசின்article/834015
ம.பா.தD011832

கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி (Acute radiation syndrome (ARS)) அல்லது கதிர்வீச்சு நச்சுமை அல்லது கதிர்வீச்சு நோய் என அழைக்கப்படும் நோயானது மிகையான அளவு அயனாக்கக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டினால் ஏற்படும் பல நோய் அறிகுறிகளைச் சேர்ந்த உடல்நல பாதிப்பு ஆகும்.[1][2] இந்நோயால் நீண்ட காலத்திற்குப் பாதிப்பு ஏற்படுமாயினும் கதிர்வீச்சால் உடனடியாக உண்டாகும் அறிகுறிகளையே "கடிய" எனும் சொல் சுட்டுகின்றது.[3][4][5]

கதிர்வீச்சின் அளவில் நோயின் வேகமும் அறிகுறிகளின் வகையும் தங்கியுள்ளது. பொதுப்படையாக சிறிய அளவிலான கதிர்வீச்சால் இரையகக் குடலியத் தொகுதியுடன் சம்பந்தமான வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளும் குருதி உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதனால் தொற்று, குருதிப்போக்கு போன்ற விளைவுகளும் ஏற்படும். அதிக அளவிலான கதிர்வீச்சு நரம்புத்தொகுதியைப் பாதிக்கும், உடன் மரணத்தையும் உண்டாக்கும். பொதுவாக கடியகதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியின் சிகிச்சை குருதிப் பரிமாற்றம் செய்வதாலும் நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்படுத்துவதாலும் மேற்கொள்ளப்படுகின்றது.[1]

நீண்டகால கதிர்வீச்சு நோய் என்பது கதிர்வீச்சு நோயில் இருந்து வேறுபடுகின்றது, நீண்டகால கதிர்வீச்சு நோயால் புற்றுநோய் போன்ற நோய்கள் உண்டாகும்.

நோய் அறிகுறிகள்[தொகு]

மூன்று வகையான நிகழ்வுகளைப் பொதுவாகக் கருத்தில் கொண்டு கடியகதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி வகைப்படுத்தப்படுகின்றது: குருதி உருவாக்கம், இரையகக்குடலியம், நரம்புமண்டலம்/குருதிக்குழாய்.[1]

  1. குருதி உருவாக்கம் (Hematopoietic). குருதி உயிரணுக்களின் எண்ணிக்கை குறைதல். வெண்குருதியணுக்களின் தொகை குறைவதால் தொற்றுநோய்கள் , குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவதால் குருதிப்போக்கு, செங்குருதியணுக்கள் குறைவதால் இரத்தச்சோகை என்பன உண்டாகும்.[1]
  2. இரையகக்குடலியம். இவற்றிற்கான அறிகுறி கதிர்வீச்சின் அளவு பொதுவாக 600–1000 rad (6–10 Gy) ஆக உள்ளபோது ஏற்படும்.[1] வாந்தி, குமட்டல், பசியின்மை, வயிற்று வலி ஆகியன கதிர்வீச்சு ஏற்பட்டு ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலங்களுக்குள் உண்டாகும்.[1]
  3. நரம்புமண்டலம்/குருதிக்குழாய். கதிர்வீச்சின் அளவு 1000 rad (10 Gy) அலகுகளிலும் கூடுதலாக இருப்பின் இத்தொகுதிகளுக்குரிய அறிகுறிகள் ஏற்படும். தலைச்சுற்று, தலைவலி, மயக்கநிலை போன்றன அறிகுறிகளாகும்.[1]

நோயில் முதற் தோன்றும் அறிகுறிகள் வாந்தி, குமட்டல், தலைவலி, களைப்பு, காய்ச்சல், தோல் சிறிதுநேரம் சிவப்பு நிறம் அடைதல் என்பனவாகும். இவ்வறிகுறிகள் 35 rad (0.35 Gy) அளவிலான கதிர்வீச்சிலேயே தென்படக்கூடும், அதனால் சிலவேளைகளில் இவ்வறிகுறிகள் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியாகத் தொடராது.[1]

கட்டம் அறிகுறிகள் கதிர்வீச்சு அளவு (Sv)
1–2Sv 2–6Sv 6–8Sv 8–30Sv >30Sv
உடனடி குமட்டல், வாந்தி 5–50% 50–100% 75–100% 90–100% 100%
நோயின் ஆரம்பகாலம் 2–6மணி 1–2மணி 10–60நிமி <10நிமி உடனடி
கால அளவு >24மணி 24–48மணி <48மணி <48மணி 48மணி–இறப்பு
வயிற்றுப்போக்கு இல்லை சிறிதளவு(10%) அளவு கூடிய(10%) அளவு கூடிய(90%) அளவு கூடிய(100%)
நோயின் ஆரம்பகாலம் 3–8மணி 1–2மணி >1மணி <30நிமி
தலைவலி சிறிதளவு மிதமான(50%) இடைப்பட்ட அளவு(80%) தீவிரமான(80–90%) தீவிரமான(100%)
நோயின் ஆரம்பகாலம் 4–24மணி 3–4மணி 1–2மணி <1மணி
காய்ச்சல் சிறிதளவு - இல்லை இடைப்பட்ட அளவு(50%) உயர்ந்த (100%) தீவிரமான(100%) தீவிரமான(100%)
நோயின் ஆரம்பகாலம் 1–3மணி >1மணி >1மணி >30நிமி
மைய நரம்புத்தொகுதிச் செயற்பாடு பாதிப்பு இல்லை புலன் உணர்வு பாதிப்பு 6–20 மணி புலன் உணர்வு பாதிப்பு <20 மணி துரித செயற்திறன் இழப்பு வலிப்பு, நடுக்கம், தள்ளாட்டம்
உள்ளுறைக் காலம் 28–31 நாட்கள் 7–28 நாட்கள் >7 நாட்கள் இல்லை இல்லை
நோய்க்காலம் மிதமான வெள்ளணுக்குறை;
களைப்பு;
பலவீனம்
வெள்ளணுக்குறை;
ஊதாப்புள்ளியம்;
குருதிப்போக்கு;
தொற்று;
மயிர்நீக்கம்
தீவிரமான வெள்ளணுக்குறை;
உயர் காய்ச்சல்;
வயிற்றுப்போக்கு;
வாந்தி;
தலைச்சுற்றும் நிலைபுலம் தடுமாற்றமும்
(தாழ் குருதியமுக்கம்);
தாதுப்பொருள் சமநிலையின்மை
இறப்பு
இறப்பு வீதம் பராமரிப்பின்றி 0–5% 5–100% 95–100% 100% 100%
பராமரிப்புடன் 0–5% 5–50% 50–100% 100% 100%
இறப்பு நேரம் 6–8 வாரங்கள் 4–6 வாரங்கள் 2–4 வாரங்கள் 2 நாட்கள்

–2 வாரங்கள் ||1–2 நாட்கள்

தோல் மாற்றங்கள்[தொகு]

தோல் கதிர்வீச்சு கூட்டறிகுறி (Cutaneous radiation syndrome) கதிர்வீச்சால் தோலில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கும்[5] கதிர்வீச்சின் ஒருசில மணித்தியாலங்களின் பின்னர் நமைச்சலுடன் கூடிய தோல் செந்நிறம் அடைதல் அவதானிக்கலாம், எனினும் இது நிலையானது அல்ல. சிலநாட்களின் பின்னர், சிலவாரங்களில் சிவப்பு நிறம் மிகையாகி அவ்விடத்தில் கொப்புளங்கள் உருவாகலாம், மேற்கொண்டு அப்பகுதியில் புண் ஏற்படலாம். பெரும்பாலானவர்களில் இவை குணப்பட்டுவிடும், எனினும் மிகையான கதிர்வீச்சு அளவுகளில் நிரந்தர தோல்மயிர் இழப்பு, நெய்ச்சுரப்பிகள் பாதிப்பு, வியர்வைச்சுரப்பிகள் பாதிப்பு, தோலின் நிறம் அதிகரித்தல் அல்லது குறைதல், இழைய இறப்பு போன்றன ஏற்படலாம்.[5]

காரணம்[தொகு]

கதிர்வீச்சு நோய் திடீரென்று ஏற்படும் பெருமளவிலான கதிர்வீச்சால் ஏற்படுகின்றது.[6][7]

புறக்காரணிகள்[தொகு]

வரைபில் ஒரு சதுரம் புறக்காரணி (சிவப்பு) ஒன்றிலிருந்து கதிர்வீச்சைப் (மஞ்சள்) பெற்றுக்கொள்கின்றது.
வரைபில் ஒரு சதுரம் அதன் மேற்பரப்பில் உள்ள கதிர்வீச்சுப் பொருள் (சிவப்பு) ஒன்றால் கதிர்வீச்சைப் (மஞ்சள்) பெறுகின்றது.

புறக் கதிர்வீச்சு என்பது உயிரியின் புறத்தே உள்ள கதிர்வீச்சை வெளியிடக்கூடிய மூலப்பொருட்களில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சாகும். பின்வரும் எடுத்துக்காட்டுகள் இதனை விளக்குகின்றன:

  • ஒரு நபரின் சட்டைப்பையில் இடப்பட்ட மூடப்பட்ட கதிர்வீச்சு மூலப்பொருள்
  • விண்வெளிப் பயணி ஒருவர் அண்டக்கதிர் (cosmic ray) மூலம் கதிர்வீச்சுப் பெறுதல்
  • தொலை ஊடுகதிர் சிகிச்சை (teletherapy) அல்லது குறுந்தூர ஊடுகதிர் சிகிச்சை (brachytherapy) மூலம் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்ற நபர், குறுந்தூர ஊடுகதிர் சிகிச்சையில் கதிர்வீச்சுப் பொருள் உடலினுள் இருந்தாலும் உடல் இழையங்களுடன் நேரடித் தொடுகையின்றி அமையப்பெற்றுள்ளது, இதனால் இம்முறையால் பெறப்படும் கதிர்வீச்சு புறக்காரணியாகக் கருதப்படுகின்றது.

புறக்காரணியால் ஏற்படும் கதிர்வீச்சின் அளவை இலகுவில் அளவிடமுடியும், மேலும் கதிர்வீச்சிற்கு உட்பட்ட பொருட்கள் கதிர்வீச்சுவெளிவிடுவனவாக மாறுவதில்லை, ஆனால் கதிர்வீச்சு ஒரு தீவிரமான நொதுமிக் கதிராக இருப்பின் இதற்கு விதிவிலக்காகும். ஒரு பொருள் தனது வெளிப்பரப்பில் மட்டும் கதிர்வீச்சு மாசுபாட்டைப் பெறமுடியும், இதன்போது கதிர்வீச்சு பொருளினுள் ஊடுருவது இல்லை எனக் கருதினால் இத்தகைய புறக்கதிர்வீச்சு மாசுபாட்டை இலகுவில் அகற்றலாம்.

இரண்டாம் உலகயுத்தத்தின் போது யப்பானில் இரோசிமா, நாகசாகி மீது பிரயோகப் படுத்தபட்ட அணு குண்டால் ஏற்பட்ட வெப்பக் கதிர்வீச்சால் பாதிப்புற்ற நபர்

அணு ஆயுதங்கள்[தொகு]

அணு ஆயுதப் போர்முறைகள் மிகவும் சிக்கல் நிறைந்த விளைவைத் தருகின்றன, ஏனெனில் ஒரு நபர் குறைந்தபட்சம் மூன்று வழிகளிலாவது கதிர்வீச்சைப் பெறமுடிகின்றது. இதன்போது உண்டாகும் எரிகாயங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களால் ஏற்படுகின்றன:

  • வெப்ப எரிகாயம் கீழ்ச்சிவப்பு (அகச்சிவப்பு) வெப்பக் கதிர்வீச்சு மூலம் ஏற்படுகின்றது.
  • பீட்டா எரிகாயம் (Beta burns) எனப்படும் ஒருவகை கதிர்வீச்சு எரிகாயங்கள் ஊடுருவிய பீட்டா அயனாக்கக் கதிர்வீச்சு மூலம் ஏற்படுகின்றது, எனினும் இத்துகள்கள் குறைவான ஆழத்திலேயே உடலினுள் ஊடுருவுகின்றன.
  • காமா எரிகாயம் (Gamma burns) ஆழமாக ஊடுருவும் காமாக் கதிர்களின் கதிர்வீச்சு மூலம் ஏற்படுகின்றது, இதுவே மிகவும் ஆபத்தானது ஆகும், இதன்போது உடலின் எல்லாப்பகுதிகளும் பாதிப்பு அடைகின்றன. சில மருத்துவக் கதிர்வீச்சுக் கருவிகளால் ஏற்படும் விபத்துக்களில் காமாக்கதிர்கள் வெளியிடப்படுவதால் (ஏறத்தாழ 10 Sv அளவு) உடலின் எல்லாப்பகுதிகளும் பாதிப்பு அடைகின்றன, இக்கதிர்வீச்சிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட நேரத்தில் சில மாந்தருக்குத் தோலில் காயங்கள் தோன்றுகின்றன.

விண்வெளிப்பயணம்[தொகு]

விண்வெளிப்பயணத்தின்போது, விண்வெளிவீரர்கள் விண்வெளிக் கதிர்வீச்சுக்குள்ளாகின்றனர், விண்வெளி பால்வெளிக் கதிர் (galactic cosmic ray) மற்றும் சூரிய புரோத்தன் நிகழ்வு (Solar proton event) மூலம் இருவகையான கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதிக்கின்றன.[8] விண்வெளி பால்வெளிக் கதிர்வீச்சின் கதிர்வீச்சு நச்சுமை உண்டாக்கக்கூடிய அளவு இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை.[9]

உட்காரணிகள்[தொகு]

ஒரு விலங்குக்குள் புகுந்த கதிர்வீச்சுப்பொருளால் (சிவப்பு) விலங்கின் நுரையீரல் கதிர்வீச்சுக்கு ஆளாவதை (மஞ்சள்) இம்மாதிரி வரைபில் நோக்கலாம்.

கதிர்வீச்சுப் பொருள் உயிரினத்துள் உட்புகுந்த நிலையில் அல்லது கதிர்வீச்சு அணுக்கள் உயிரினத்துடன் ஒன்றிய நிலையில் உள்ளபோது உள்ளுடல்கதிர்வீச்சு உடலுக்குள் ஏற்படும். சில உள்ளுடல்கதிர்வீச்சு உதாரணங்கள்:

  • ஒரு சாதாரணமான மனிதரில் பொட்டாசியம்40 (40K) சமதானியால் ஏற்படும் கதிர்வீச்சு. இயற்கையான கதிர்வீச்சு மனிதரிலும் ஏனைய விலங்குகளிலும் ஏற்படுவதற்கு பொட்டாசியம்40 முக்கிய காரணியாகும்.
  • புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் உள்ளெடுகப்படும் சில தனிமங்களின் சமதானிகள்

உட்கொள்ளலும் உள்ளிழுத்தலும்[தொகு]

ஒரு கதிர்வீச்சுப் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதன் கதிர்வீச்சு விளைவு வெளிப்புறக் கதிர்வீச்சில் இருந்து மாறுபட்டுள்ளது.குறிப்பாக தோல் மூலம் ஊடுருவாத அல்பாக் கதிர்வீச்சில் உட்கொள்ளலின் அல்லது உள்ளிழுத்தலின் பின்னர் ஏற்படும் விளைவு மிகவும் பாரதூரமானதாகும்.

நோய் உடற்செயலியல்[தொகு]

கிரே (gray (Gy)) என்பது ஒரு பொருளால் அகத்துறிஞ்சப்படும் கதிர்வீச்சை அளக்கும் அலகு ஆகும். உயிரியல் சம்பந்தமான விளைவுகளை மதிப்பிடுவதற்கு கதிர்வீச்சு அளவு, அயனாக்கக் கதிர்வீச்சின் வகையில் தங்கியுள்ள ஒரு 'பண்புக் காரணியால்' பெருக்கப்படும். இத்தகைய, உயிரியல் விளைவுகளை அளக்கும் விதம் "ஏற்பு அளவுச் சமானம்" எனப்படும், இது சீவேர்ட் (Sievert (Sv)) எனும் அலகு மூலம் அளக்கப்படுகின்றது. இலத்திரன்கள், போட்டோன்கள் (உ-ம்: காமாக்கதிர்) போன்றவற்றிற்கு, 1 Gy = 1 Sv ஆகும்.

அனைத்துலக முறை அலகுகள் அல்லாத அலகுகள், ராட் எனப்படும் கதிர்வீச்சு அகத்துறிஞ்சப்பட்ட அளவு ( rad - radiation absorbed dose) மற்றும் ரெம் எனப்படும் மனிதர்/முலையூட்டிகளுக்குரிய ரொன்ட்சன் சமானம் (rem - roentgen equivalent mammal/man) ஆகியவை ஆகும். ஒரு ராட் 0.01 கிரேக்குச் சமனாகும் (1 rad = 0.01 Gy), ஒரு ரெம் 0.01 சீவேர்ட்டுக்குச் சமனாகும் (1 rem=0.01 Sv).

ஆண்டு ஒன்றிற்கு ஒரு தொழிலாளரின் உடலால் தாங்கக்கூடிய உட்கொள்ளப்பட்ட அல்லது உள்ளிழுத்த கதிர்வீச்சு அளவின் எல்லை 'அலி' (Annual limit on intake (ALI)) எனப்படும். இதன் பெறுமானம் மனித உடல் ஒன்றை மொத்தமாகக் கருதும்போது 0.05 Sv (5 rems) ஆகும், இதைத்தவிர தனித்தனியாக ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பெறுமானம் உண்டு.[10]

அறுதியிடல்[தொகு]

கதிர்வீச்சு வெளிப்பாட்டு வரலாற்றில் இருந்தும் பொருத்தமான நோய் அறிகுறிகளில் இருந்தும் அறுதியிடல் செய்யப்படுகின்றது. அறுதியான நிணநீர்க்குழிய எண்ணிக்கை மூலம் மேலோட்டமாக கதிர்வீச்சுப் பாதிப்பின் அளவைக் கணிக்கமுடியும்.[1] கதிர்வீச்சுக்கு உள்ளாகிய நேரத்தில் இருந்து வாந்தி உண்டாகும் வரையான நேரத்தில் இருந்தும் கதிர்வீச்சுப் பாதிப்பின் அளவு 1000 ராட்டுக்கும் குறைவாக இருந்தால் கணிக்கமுடியும்.[1]

தடுத்தல்[தொகு]

கதிர்வீச்சு நோயைத் தடுப்பதற்கான மிகச்சிறந்த முறை கதிர்வீச்சு வெளிப்பாட்டின் அளவைக் குறைத்தல் ஆகும், இதன் மூலம் பெறப்படும் கதிர்வீச்சு அளவு குறையும்.

தூரம்[தொகு]

கதிர்வீச்சு வெளிப்படுத்தும் கருவியில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குத் தள்ளி இருத்தல் தலைகீழ் இருபடிவிதியின்படி கதிர்வீச்சு அளவைக் குறைக்கும். ஒரு கதிர்வீச்சுப்பொருளைக் கைவிரல்களால் கையாள்வதை விட இடுக்கி கொண்டு கையாள்வதும் தூரத்தை அதிகரிக்கின்றது எனலாம்.

நேரம்[தொகு]

கதிர்வீச்சின் வெளிப்பாட்டில் அதிக நேரம் இருக்க இருக்க கதிர்வீச்சின் அளவு கூடிக்கொண்டு செல்லும். கதிர்வீச்சுச் சூழல் ஒன்றில் இருந்து எவ்வளவு விரைவில் வெளியேற முடியுமோ அவ்வளவுக்கு பாதிப்புக் குறையும்.

மனித உடலுள் கலக்கும் அளவைக் குறைத்தல்[தொகு]

எதிர்பாராத விபத்தில் அணு உலையில் ஏற்படும் கசிவினால் உண்டாகும் கதிர்வீச்சு மூலம் அல்லது அணு ஆயுத வெடிப்பு மூலம் கதிர்வீச்சுத்தன்மை உள்ள அயோடினை உடல் உள்ளெடுக்கும் நிலை உண்டாகின்றது, இக் கதிர்வீச்சுப்பாதிப்பின் உடனே பொட்டாசியம் அயடைட்டு (KI) வாய்வழியாகக் கொடுத்தல் தைரோய்ட்டுச் சுரப்பியைப் பாதுகாக்கும். அழுக்கு வெடிகுண்டுக்கு (dirty bomb) எதிராக பொட்டாசியம் அயடைட்டு சிலவேளைகளில் செயற்படாது, ஏனெனில் அங்கு பொதுவாக கதிர்வீச்சுத்தன்மையுள்ள அயோடின் இருப்பதில்லை.

அளவின் பகுதிப்பிரிப்பு[தொகு]

ஒரு உயிரணுக்குழுமம் கதிர்வீச்சுக்குட்படும் போது கதிர்வீச்சின் அளவு மேலும்மேலும் உயர்வடையும் நிலையில் உயிரணுக்களின் வாழும்வீதம் குறைகின்றது என்று கதிர்வீச்சு உயிரியல் ஆய்வுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது, மாறாக, கதிர்வீச்சுக்குட்படுத்திய உயிரணுக்குழுமத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் கதிர்வீச்சு கிடைக்காதிருந்து மீண்டும் கதிர்வீச்சுக்குட்படுத்தப்பட்டால் குறைவான உயிரணு இறப்பே உண்டாகின்றது. பற்பலவிதமான உயிரணுக்கள் மனித உடலில் காணப்படுகின்றன, ஒரு முக்கிய மனித உறுப்பில் காணப்படும் உயிரணுக்களின் இறப்பு அம்மனிதரையே இறக்கச் செய்கின்றது. குறுகிய கால ( 3 தொடக்கம் 30 நாட்கள் வரை) கதிர்வீச்சு இறப்புக்கு இரண்டு பிரதான உயிரணு வகைகள் காரணமாகின்றன: குருதி உயிரணுக்களை உண்டாக்கும் குருத்தணுக்கள், சிறுகுடலில் காணப்படும் சடைமுளை கொண்டுள்ள உயிரணுக்கள்.

பரிகாரம்[தொகு]

நுண்ணுயிர் எதிர்ப்பிகள், குருதி மாற்றீடுகள், குருதி உயிரணு உற்பத்தியைத் தூண்டும் காரணிகள், குருத்தணு மாற்று என்பன இந்த நோய்க்குரிய மருத்துவப் பரிகாரத்துள் அடங்குகின்றன.[1] நோயின் அறிகுறிச்சிகிச்சையும் கருத்தில் கொள்ளப்படுகின்றது.[1]

நுண்ணுயிர் எதிர்ப்பிகள்[தொகு]

கதிர்வீச்சின் பின்னர் ஏற்படும் நடுவமைநாடிக்குறைவுக்கும் (neutropenia) தொற்று உண்டாவதற்குரிய சூழ் இடர் நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நடுவமைக்குறைவு, காய்ச்சல் போன்ற நோய்க் குறிகளைக் கொண்டு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது அறியப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கல் தீர்மானிக்கப்படுகின்றன. நடுவமைக்குறைவு உடையோரது ஏனைய உடல் இழையங்களான இரையகக் குடலியத் தொகுதி, நுரையீரல், மைய நரம்புத் தொகுதி என்பன இலகுவில் கதிர்வீச்சுப் பாதிப்புக்கு உட்படவல்லது. விலங்குகளில் மேற்கொள்ளப்படும் கதிர்வீச்சு ஆய்வில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விளைவு எதிர்கூற முடியாததொன்றாகும், ஆய்வுகளில் மெட்ரோனிடசோல் [11] மற்றும் பெப்ளோக்சாசின் (pefloxacin)[12] சிகிச்சைகள் கெடுதல் விளைவிப்பனவாகக் காணப்பட்டன.

நுண்ணுயிர் நச்சேற்றம் விளைவிக்கக்கூடிய, கிராம்-மறை காற்றுவாழ் கோலுயிரிகளை (Gram-negative aerobic bacilli) அழிக்கவல்ல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்படல் அவசியமானது.[13] உதாரணமாக, குயினோலோன் (quinolones), சிப்ரோப்ளோக்சாசின் (ciprofloxacin), மூன்றாம் அல்லது நான்காம் படி கேபளோசுப்போரின் (cephalosporin), ஜென்டாமைசின் போன்ற அமினோகிளைக்கோசைட்டு போன்ற பரந்த செயற்பாடுள்ளவை சிகிச்சையில் தேவைப்படுகின்றன.[14]

வரலாறு[தொகு]

பிந்திய 19ம் நூற்றாண்டில் கதிர்வீச்சு இயக்கம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றால் ஏற்படும் கேடான விளைவுகள் உடனடியாக அறியவில்லை. முதன்முதல் கதிர்வீச்சின் உடனடிப் பாதிப்பு நிக்கோலா தெசுலா என்பவரால் எக்ஸ்-கதிரில் அவர் வேண்டுமென்றே தனது விரல்களை உள்நுழைத்துக் கொண்ட போது 1896இல் அவதானிக்கப்பட்டது. எரிகாயம் தனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை வெளியிட்டார், எனினும் இது ஒசோனால் ஏற்பட்டது அல்லது வேறு காரணத்தினால் ஏற்பட்டது என்று அறிவித்தார். அக்காலத்தில் எக்சுக்கதிர் என்று பெயரிடப்படவில்லை, பின்னர் உரொஞ்சன் என்பவரால் எக்சுக்கதிர் அறியப்பட்டது. 1927இல் கேர்மான் யோசப் முல்லர் என்பவரால் கதிர்வீச்சின் மரபு தொடர்பான மாற்றங்கள் அறியப்பட்டது, இதற்காக இவருக்கு 1946இல் நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

கதிர்வீச்சின் உயிரியல் தொடர்பான கேடுதரும் விளைவுகள் அறியமுன்னர் பெரும்பாலன வைத்தியர்கள் பல்வேறு சிகிச்சைகளுக்கு கதிர்வீச்சுப் பொருட்களைப் பயன்படுத்தினர், உதாரணமாக ரேடியம் தனிமம் அடங்கிய தண்ணீர் ஒரு வலுவேற்றும் நீர்மமாக அருந்தப்பட்டது. மேரி கியூரி இச்சிகிச்சைகளுக்கு எதிராக வாதிட்டார், இவற்றின் உடல் தொடர்பான விளைவுகள் இன்னமும் அறியப்படவில்லை என்று எச்சரிக்கையும் செய்தார். கதிர்வீச்சு நச்சுமையால் ஏற்படும் குருதி உயிரணுக்கள் உருவாகுதல் குன்றிப்போகும் வளர்ச்சியில்லாக் குருதிச்சோகையால் (aplastic anemia) மேரி கியூரி பின்னர் இறந்தார்.

அணுவாயுதத் தாக்குதல் நடைபெற்ற கிரோசிமா மற்றும் நாகசாக்கியில் பெருந்தொகையான கதிர்வீச்சு நச்சுமை ஏற்பட்டது. கிரோசிமா அணுவாயுத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மிடோரி நகா எனும் நடிகரில் முதன்முதலாக கதிர்வீச்சு நச்சுமையைப் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இவரது இறப்பு ஆகத்து 24, 1945 இல் நிகழ்ந்தது, இதுவே கதிர்வீச்சு நச்சுமையால் (அல்லது அணுவாயுத நோய்) ஏற்பட்ட முதல் இறப்பு எனப் பதியப்பட்டுள்ளது.

சமூகப் பயன்பாடும் விபத்துகளும்[தொகு]

அணு உலை விபத்துகள்[தொகு]

செர்னோபில் கதிர்வீச்சு வரைபடம்

முதன்முதல் அறியப்பட்ட அணு உலைக் கசிவு விபத்து கனடாவில் நிகழ்ந்தது. கதிர்வீச்சு நச்சுமை மிகவும் கவனத்துக்கு எடுக்கப்படும் ஒரு பெரிய சம்பவமாக செர்னோபில் அணு உலை விபத்தின் (1986) பின்னர் விளங்கியது. 31 பேர் உடனடியாக இறந்தனர்.[15] குறுகிய அரைவாழ்வுக்காலம் கொண்ட கதிர்வீச்சுச் சமதானிகளான 131அயோடின் (131I) போன்றவை உடனடியான கேடுதரவல்லனவாக இருந்தன, இவற்றின் ஐந்து தொடக்கம் எட்டு வரையிலான அரைவாழ்வுக்காலத்தால் தற்போது தேய்மானம் அடைந்துவிட்டன, ஆனால் நீண்டகால அரைவாழ்வுக்காலம் உடைய 137சீசியம் (137Cs) (அரைவாழ்வுக்காலம் 30.07 ஆண்டுகள்) மற்றும் 90இசுத்ரோஞ்சியம் (90Sr) (அரைவாழ்வுக்காலம் 28.78 ஆண்டுகள்) நெடுங்கால கேடுவிளைவிப்பன ஆகும். 2011இல் நிகழ்ந்த செண்டாய் ஆழிப்பேரலை காரணமாக பாரிய அணு உலை விபத்துகள் ஏற்பட்டன. மூன்று அணுஉலைகள் பகுதியாக உருகின.[16]

நஞ்சு வைப்பு[தொகு]

நவம்பர் 23, 2006 இல் அலெக்சாந்தர் லித்வினேன்கோ என்பவர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொலோனியம்-210 கதிர்வீச்சு நஞ்சூட்டம் மூலம் இறந்ததாக ஐயப்பாடு உள்ளது.[17][18][19][20][21]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 Donnelly EH, Nemhauser JB, Smith JM, et al. (June 2010). "Acute radiation syndrome: assessment and management". South. Med. J. 103 (6): 541–6. doi:10.1097/SMJ.0b013e3181ddd571. பப்மெட்:20710137. https://archive.org/details/sim_southern-medical-journal_2010-06_103_6/page/541. 
  2. Xiao M, Whitnall MH (January 2009). "Pharmacological countermeasures for the acute radiation syndrome". Curr Mol Pharmacol 2 (1): 122–33. பப்மெட்:20021452. 
  3. "Acute Radiation Syndrome". Centers for Disease Control and Prevention. 2005-05-20. Archived from the original on 2015-12-04. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
  4. (PDF) Acute Radiation Syndrome. National Center for Environmental Health/Radiation Studies Branch. 2002-04-09. http://www.umt.edu/research/Eh/pdf/AcuteRadiationSyndrome.pdf. பார்த்த நாள்: 2009-06-22 
  5. 5.0 5.1 5.2 "Acute Radiation Syndrome: A Fact Sheet for Physicians". Centers for Disease Control and Prevention. 2005-03-18. Archived from the original on 2006-07-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
  6. "Radiation sickness-overview". Archived from the original on ஏப்ரல் 14, 2009. பார்க்கப்பட்ட நாள் April 16, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Mayo Clinic Staff (May 9, 2008). "Radiation sickness: symptoms". பார்க்கப்பட்ட நாள் April 16, 2009.
  8. "Superflares could kill unprotected astronauts". New Scientist. 21 March 2005.
  9. National Research Council (U.S.). Ad Hoc Committee on the Solar System Radiation Environment and NASA's Vision for Space Exploration (2006). Space Radiation Hazards and the Vision for Space Exploration. National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780309102643. http://www.nap.edu/catalog.php?record_id=11760. 
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-05-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-26.
  11. Brook I, Ledney GD (1994). "Effect of antimicrobial therapy on the gastrointestinal bacterial flora, infection and mortality in mice exposed to different doses of irradiation". Journal of Antimicrobial Chemotherapy 33: 63–74. doi:10.1093/jac/33.1.63. பன்னாட்டுத் தர தொடர் எண்:1460-2091. 
  12. Patchen ML, Brook I, Elliott TB, Jackson WE (1993). "Adverse effects of pefloxacin in irradiated C3H/HeN mice: correction with glucan therapy". Antimicrobial Agents and Chemotherapy 37 (9): 1882–9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-4804. பப்மெட்:8239601. 
  13. Brook I, Ledney D (1992). "Quinolone therapy in the management of infection after irradiation". Crit Rev Microbiol: 18235–46. 
  14. Brook I, Elliot TB, Ledney GD, Shomaker MO, Knudson GB (2004). "Management of postirradiation infection: lessons learned from animal models". Military Medicine 169: 194–7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-4075. https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B97F0spKl2OwZTkzYTAyZjgtODRhYy00NzAwLWEzNjgtNTkyOTNmMjNlOGU4&hl=en. 
  15. "The Chernobyl Accident and Its Consequences". The International Nuclear Safety Center. 1995. Archived from the original on 2008-02-10. பார்க்கப்பட்ட நாள் 2008-09-18.
  16. [[2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|செண்டாய் ஆழிப்பேரலை]]
  17. Patterson AJ (2007). "Ushering in the era of nuclear terrorism". Critical Care Medicine 35: 953–4. doi:10.1097/01.CCM.0000257229.97208.76. 
  18. Acton JM, Rogers MB, Zimmerman PD (September 2007). "Beyond the Dirty Bomb: Re-thinking Radiological Terror". Survival 49 (3): 151–168. பப்மெட்:17421087. 
  19. Sixsmith, Martin (2007). The Litvinenko File: The Life and Death of a Russian Spy. True Crime. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-37668-5. https://archive.org/details/litvinenkofileli00sixs. 
  20. Radiological Terrorism: "Soft Killers" பரணிடப்பட்டது 2007-12-17 at the வந்தவழி இயந்திரம் by Morten Bremer Mærli, Bellona Foundation
  21. Alex Goldfarb; Marina Litvinenko (2007). Death of a Dissident: The Poisoning of Alexander Litvinenko and the Return of the KGB.. New York: Free Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4165-5165-2.