கண்டிஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்டிஜாக் கோயில்

கண்டிஜா (Ggantia) என்பது மத்தியதரைக் கடற் பகுதியில் உள்ளதும் மால்டா நாட்டின் ஒரு பகுதியும் ஆகிய கோசோத் தீவில் அமைந்துள்ள ஒரு புதியகற்காலக் கோயில் ஆகும். புதியகற்காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அமைப்புக்கள் தொடர்பில் இத் தீவிலுள்ள இரண்டு கண்டிஜாக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இக் கோயில்கள் கி.மு 3600-2500 ஆண்டுகள் காலப்பகுதியில் அமைக்கப்பட்டவை. 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக் கோயில்கள், உலகின் மிகப்பழைய தனித்து நிற்கும் அமைப்பும், மிகப்பழைய சமயம் சார்ந்த அமைப்பும் ஆகும். இவை எகிப்தின் பிரமிட்டுக்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹெஞ்ச் ஆகியவற்றை விடப் பழமையானவை. இக் கோயில்கள் செழுமையியற் சடங்குகள் (Fertility Cult) சார்ந்த தாய்க் கடவுளுக்கு உரியவை எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல சிலைகளும், உருவங்களும் இத்தகைய சடங்குகளுடன் தொடர்பு உள்ளவை என நம்பப்படுகின்றது.


மால்ட்டா மொழியில், கண்டிஜா என்பது "பூதங்களுக்கு உரியது" என்னும் பொருள் கொண்டது. உள்ளூரில் நிலவும் கதைகளின்படி இக்கோயில்கள் பண்டைக்காலத்தில் இத்தீவில் வாழ்ந்த பூதங்களால் கட்டப்பட்டவை ஆகும். இக் கோயில்கள் அப்பூதங்களால் காவல் கோபுரங்களாகப் பயன்படுத்தப்பட்டன எனவும் அக்கதைகள் கூறுகின்றன.


அமைப்பு[தொகு]

இக் கோயில்கள் குளோவர் இலை வடிவம் கொண்டவை. சுவர்கள் சைக்கிளோப்பிய முறையில் அடுக்கப்பட்ட கல் முகப்புக்களுக்கு இடையே உடைகற்கள் நிரப்பி அமைக்கப்பட்டவை. இக் கோயில்கள் ஒவ்வொன்றும் நடுவில் அமைந்த கூடமொன்றுடன் இணைக்கப்பட்ட அரைவட்ட மாடங்களைக் கொண்டவை. இம் மாடங்கள் முற்காலத்தில் கற்களால் அமைந்த குவிமாடக் கூரைகளால் மூடப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. சில்லுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலும், இரும்புக் கருவிகள் மால்டாவில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அறிமுகம் இல்லாது இருந்ததுமான ஒரு காலத்தில் கட்டப்பட்டதனாலும் இக்கோயில்கள் வியக்கத் தக்கவையாக இருக்கின்றன. இங்கு சிறிய கோள வடிவக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கோயில்களைக் கட்டுவதற்கான பாரிய கற்களை நகர்த்துவதற்கு இக் கோள வடிவக் கற்கள் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.


வடிவமைப்பு[தொகு]

கண்டிஜா பெருங்கற் சின்னங்களில் விரிவுத் தோற்றம்

இங்குள்ள கோயில்களில் தென்பகுதியில் உள்ள கோயிலே மிகப் பழமையானதும், பெரியதும் ஆகும். இது ஏறத்தாழ கி.மு 3600 ஆண்டுகளைச் சேர்ந்தது. மால்ட்டாவில் உள்ள பிற பெருங்கற் களங்களைப் போலவே இக் கோயிலும் தென்கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக் கோயில் 6 மீட்டர்கள் உயரமானது. இதன் வாயிலில் குழிவுடன் கூடிய பெரிய பாறையொன்று காணப்படுகின்றது. கோயிலுக்குள் நுழைவதற்குமுன் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு இடமாக இது இருக்கலாமெனச் சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.


விலங்குகளின் எலும்புகள் பல இங்கிருந்து கண்டு எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே விலங்குகள் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற விலங்குகளின் சிற்பங்கள் இங்கே காணப்படுவதால், இவ் விலங்குகள் இங்கே பலி கொடுக்கப்பட்டன என்று கருதலாம்.


அகழ்வாய்வு[தொகு]

கண்டிஜாக் கோயில்கள் கோசோவின் ஆளுனராக இருந்த கர்னல் ஜோன் ஒட்டோ பேயர் (John Otto Bayer) என்பவரால் 1827 ஆம் ஆண்டில் அகழ்வாய்வு செய்யப்பட்டது.[1][2][3] எனினும் இவர் கோசோவில் இருந்து திரும்பிய பின்னர், இக் கோயில்கள் முறையாகப் பேணப்படாமல் குப்பைகளால் நிரம்பின. 1980 ஆம் ஆண்டிம் இக் கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் என அறிவிக்கப்பட்ட பின்னரே முறையாக மீளமைப்பு வேலைகள் தொடங்கின.

வெளியிணைப்புக்கள்[தொகு]

அமைவிடம்: 36°03′00″N, 14°16′08″E

"http://ta.wikipedia.org/w/index.php?title=கண்டிஜா&oldid=1348948" இருந்து மீள்விக்கப்பட்டது