கட்டமைப்புப் பொறியியல்
கட்டமைப்புப் பொறியியல் (Structural engineering) என்பது, பல்வேறு வகையான சுமைகளைத் தாங்கும் நோக்கிலான கட்டமைப்பு முறைமைகளின் வடிவமைப்பு தொடர்பான பொறியியல் துறை ஆகும். பிற துறைகள் சிலவும் இத்துறையின் நோக்கங்களோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. எனினும், ஒரு பொருள் அல்லது ஒரு தொகுதியின் அறிவியல் அல்லது தொழிற்துறைப் பயன்பாடு எதுவாக இருப்பினும், அது முக்கியமாக சுமைகளைத் தாங்குவதும் ஆற்றலைப் பரவலாக்குவதற்குமான வடிவமைப்புத் தேவைகளைக் கொண்டிருப்பின் அது அமைப்புப் பொறியியலைச் சேர்ந்ததாகக் கருதப்படும். அமைப்புப் பொறியியல் பொதுவாகக் குடிசார் பொறியியலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. எனினும் இது ஒரு தனித்துறையாகக் கற்கப்படுவதும் உண்டு.
ஒரு கட்டமைப்புப் பொறியியலாளர், மிகப் பொதுவாகக் கட்டிடங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் அல்லாத அமைப்புக்களை வடிவமைப்பார். எனினும் அமைப்பியல் உறுதிப்பாடு தேவைப்படும்போது பொறிகளின் வடிவமைப்பிலும் அவரின் பங்கு வேண்டியிருக்கும். மனிதனால் உருவாக்கப்படும் மிகப் பெரிய அமைப்புக்களில் மட்டுமன்றி, தளபாடங்கள், மருத்துவக் கருவிகள், பலவகையான வண்டிகள் போன்றவற்றிலும் கூட அமைப்புப் பொறியியல் சார்ந்த வடிவமைப்பு உள்ளீடுகள் தேவைப்படுகின்றன.
கட்டமைப்புப் பொறியியலாளர்கள் தமது வடிவமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு தொடர்பிலான அதன் நோக்கங்களை எய்துவதை உறுதிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக, அமைப்புக்கள் எவ்வித எச்சரிக்கையும் கொடாது உடைந்துவிடக் கூடாது என்பது பாதுகாப்புத் தொடர்பான வடிவமைப்பு நோக்கங்களில் ஒன்றாகும். அதுபோலத் தளங்களின் அதிர்வோ அல்லது உயரமான கட்டிடங்களின் ஊசலாட்டமோ உள்ளே இருப்பவர்களுக்கு வசதிக் குறைவாக இருக்கக்கூடாது என்பது பயன்பாடு தொடர்பான வடிவமைப்பு நோக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.