கடம்பினி கங்கூலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கதம்பினி கங்கூலி
பிறப்பு 1861
பகல்பூர்
இறப்பு அக்டோபர் 3, 1923
கொல்கத்தா
பணி மருத்துவர், பெண்விடுதலை செயற்பாட்டாளர்
வாழ்க்கைத் துணை துவாரகநாத் கங்கூலி

கடம்பினி கங்கூலி (பி. 1861 – இ. அக்டோபர் 3, 1923) பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். மற்றொருவர் சந்திரமுகி பாசு. தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்தசியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும்.

கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற முதல் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும்வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரித்தானியப் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.[1]

மருத்துவத்துறை[தொகு]

கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை. கங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக ஐக்கிய ராச்சியத்துக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) - கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) - டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.

சமுதாயப் பணிகள்[தொகு]

1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். இருவரும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்காத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

எட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார்.

அமெரிக்க வரலாற்றாளரான டேவிட் கோப்ஃப்[2] கடம்பினி கங்கூலியைப் பற்றிக் கூறுவது:

துவாரகநாத் கங்கூலியின் மனைவியான கடம்பினி திறமையானவரும் முற்போக்கு சிந்தனை கொண்டவருமாவார், அவர்கள் இருவரும் பரஸ்பர அன்பும் பாசமும் அறிவுமுடைய தம்பதிகள்.வங்காள சமுதாயத்தில் பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பிரம மற்றும் கிருத்துவப் பெண்களுக்கிடையே கங்கூலி வித்தியாசமானவர். சூழ்நிலைகளைத் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய தனது தனித்திறமையால் வங்காளப் பெண்களின் விடுதலைக்காக செயற்பட்ட சதாரன் பிரமோக்களுக்கு அவர் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Female students were admitted into Oxford University in 1879, one year after the admission of female students for undergraduate studies at the University of Calcutta [1]. The tripos was opened to women at Cambridge only in 1881 [2].
  2. "David Kopf". History at Minnesota. Regents of the University of Minnesota. மூல முகவரியிலிருந்து 2006-05-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-11-05.
  3. (Kopf 1979, pp. 125)

மேற்கோள்கள்[தொகு]

  • Kopf, David (1979), The Brahmo Samaj and the Shaping of the Modern Indian Mind, Princeton University Press, ISBN 0691031258 
  • Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976/1998), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) in Bengali, pp 79–80, ISBN 81-85626-65-0
  • Mukherjee S. Kadambini Ganguly. Banglapedia. Asiatic Society of Bangladesh.
  • Nandy, Ashis (1995), The Savage Freud and Other Essays on Possible and Retrievable Selves, Princeton University Press, ISBN 0691044112 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பினி_கங்கூலி&oldid=1358042" இருந்து மீள்விக்கப்பட்டது