ஓய்மான் வில்லியாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓய்மான் வில்லியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.

புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் இவனது வள்ளண்மையைப் போற்றிப் பாடியுள்ள பாடல் ஒன்று புறநானூறு 379-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடலில் இவன் ‘இலங்கை கிழவோன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.

இந்த வில்லியாதனைப் பாடிய இந்தப் புலவர் ஓய்மான் நல்லியாதனின் கொடையையும் பாராட்டிப் பாடியுள்ளார். பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் அப்பாடலில் ‘நன்மா இலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.

இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லியக்கோடன், நல்லியாதன், வில்லியாதன் என்னும் பெயர் கொண்ட மூவர் ஓய்மானாட்டில் சற்றேறக் குறைய ஒரே காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் எனத் தெரியவருகிறது. இவர்கள் மூவரும் அண்ணன் தம்பியராய் அடுத்தடுத்தோ, ஆங்காங்கேயோ செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகிறது. இவனது இலங்கை நெல்வயல் சூழ்ந்த ஊராம். அங்கு நெல் அரியும் உழவர்கள் அங்குக் கிடக்கும் ஆமை ஓட்டில் தன் அரிவாளைத் தீட்டிக்கொள்வார்களாம். தான் எப்போதும் வில்லியாதன் தாள்நிழலிலேயே வாழவேண்டும் என்றும், அவன் தனது பாட்டைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் புலவர் விருப்புவதாக இப்பாடல் தெரிவிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓய்மான்_வில்லியாதன்&oldid=2566076" இலிருந்து மீள்விக்கப்பட்டது