ஒளிப்படவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கையில் வைத்து இயக்கும் எண்முறை ஒளிப்படக் கருவி.
நிக்கோன் D1, முதல் எண்முறை ஒற்றை-வில்லைத் தெறிப்பு ஒளிப்படக் கருவி. இவ்வகைக் கருவிகள் பல்வேறு துறைகளிலும், ஒளிப்படத் தகட்டு ஒளிப்படக் கருவிகளை பதிலிடத் தொடங்கியுள்ளன.
ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைட்டை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருட் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. ஒளிப்படவியல், வணிகம், பொழுதுபோக்கு போன்றவை உட்பட்ட பல துறைகளில் பயன்படுகின்றது. விளம்பரம், பதிப்புத்துறை, பத்திரிகைத் துறை போன்றவற்றில் இதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.
