ஒருபொருட் பன்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருபொருட் பன்மொழி என்பது நன்னூல் வழங்கும் ஒரு தமிழ் இலக்கணக் குறியீடு. [1] இதனை மீமிசை எனவும் குறிப்பிடுவர். ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒரு பொருட் பன்மொழியாகும். 

மீமிசை ஞாயிறு [2], புனிற்றிளங் கன்று, [3] உயர்ந்தோங்கு பெருவரை, [4] குழிந்து ஆழ்ந்த கண் [5] என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள். [6]
பூமலர், பூம்போது, களிற்றொருத்தல், கேழற்பன்றி என்பன பண்புத்தொகை. ஒருபொருட் பன்மொழி அன்று. [7]

ஒருபொருள் இருசொல் என்று தொல்காப்பியமும் [8] ஒருபொருள் பல்பெயர் என்று நன்னூலும் [9] குறிப்பிடும் இலக்கணம் தொடர்பொழி மேலது.

வையைக்கு இறைவன் ... கூடலார் கோமான் - எனப் பாடும்போது ஒருவனையே குறிக்கும் இரண்டு தொடர்கள் வந்துள்ளன. இப்படி வருவது ஒருபொருள் இருசொல். [10]
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. இவ்விரு தொடர்களிலும் ஒருபொருள் குறித்துத் தொடர்ந்து வரும் இருசொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கி, குழிந்தாழ்ந்து என்பவை.  அவை உயர்ந்து, ஓங்கி ஆகிய இரு சொற்களும் உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன.
நடு மையம், மீமிசை ஞாயிறு என்னும் தொடர்களில் நடுப்பகுதி என்னும் ஒரே பொருளை உணர்த்தும் நடு, மையம் என்னும் இரு சொற்களும் மேற்பகுதி என்னும் பொருளைத் தரும்.  மீ, மிசை என்னும் இரு சொற்களும் இணைந்து வந்து ஒரே பொருளை உணர்த்தியுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா (நன்னூல் 398)
  2. மீ, மிசை ஆகிய இரண்டு சொற்களும் மேலிருத்தலை மிகுதிப்படுத்திக் காட்டின
  3. புனிறு என்பது ஈன்றணிமை, இளமை என்பது இளமைப் பருவம். இந்த இரண்டு சொற்களும் இளமையை மிகுதிப்படுத்திக் காட்டின
  4. உயர்தல், ஓங்குதல், பெருந்தல் ஆகிய மூன்றும் பெருமையின் பாங்கைப் பல்வேறு கோணங்களில் மிகுதிப்படுத்திக் காட்டின.
  5. குழிதல், ஆழ்தல் இரண்டும் குழியின் ஆழத்தை மிகுதிப்படுத்திக் காட்டின.
  6. நன்னூல் காண்டிகை உரை மேற்கோள்
  7. உ. வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் (இரண்டாம் பதிப்பு 1946). பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் குமாரர் கலியாணசுந்தரையர். 
  8. ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார் (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 460)
  9. ஒருபொருள் பல்பெயர் பிரிவு இல வரையார் (நன்னூல் 397)
  10. இளம்பூரணர் உரை (2010). தொல்காப்பியம் (எழுத்து, சொல், பொருள்) மூலமும் உரையும். சென்னை 14: சாரதா பதிப்பகம். பக். 391. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருபொருட்_பன்மொழி&oldid=3294782" இலிருந்து மீள்விக்கப்பட்டது