ஐக்கிய அரபு அமீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
الإمارات العربيّة المتّحدة
அல்-இமாராத் அல்-அரபியா
அல்-முத்தஹிதா
ஐக்கிய அரபு அமீரகம்
United Arab Emirates
ஐக்கிய அரபு அமீரகம் கொடி ஐக்கிய அரபு அமீரகம் தேசிய சின்னம்
குறிக்கோள்
எதுவும் இல்லை
நாட்டுப்பண்
அமீரக அரபு
தாகியத் அலாலம்
Location of ஐக்கிய அரபு அமீரகம்
தலைநகரம் அபுதாபி
பெரிய நகரம் துபாய்
ஆட்சி மொழி(கள்) அரபு மொழி (Arabic)
அரசு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
 -  தலைவர் சேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான்
 -  முதலமைச்சர் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம்
?
 -  சுதந்திரப் பிரகடனம் 2 டிசம்பர், 1971 
பரப்பளவு
 -  மொத்தம் 82880 கிமீ² (? ஆவது)
32000 சது. மை 
 -  நீர் (%) ?
மக்கள்தொகை
 -  2000 மதிப்பீடு 2,407,460 (114ஆவது)
 -  ? குடிமதிப்பு
மொ.தே.உ 
(கொஆச (ppp))
? கணிப்பீடு
 -  மொத்தம் $? பில்லியன் (? ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $? (? ஆவது)
ம.வ.சு (?) ? (high) (? ஆவது)
நாணயம் ஐஅஅ திர்ஹம் (?)
நேர வலயம் (ஒ.ச.நே.+4)
இணைய குறி .ae
தொலைபேசி +971

ஐக்கிய அரபு அமீரகம் (முன்னர்ஒப்பந்த நாடுகள்) அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபூதாபி, அஜ்மான், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல்-கைமா, ஷார்ஜாஹ் மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஒமான், சவூதி அரேபியா மற்றும் கத்தார் இதன் அயல் நாடுகளாகும்.

ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. 1970களில், நிகழ்ந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளினால் இந்நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் உயர்ந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவிலும் 39 ஆவது இடத்தில் உள்ளது. அத்துடன், அமெரிக்காவின் மையப் புலனாய்வுத் துறையின் தகவலின்படி இதன் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி உலக அளவில் 5 ஆவது இடத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாறு

ஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர்.

16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் போத்துக்கேயரின் விரிவாக்கம் ஏற்பட்டபோது பாரசீகக் குடாப்பகுதிகளிலும் அவர்கள் உதுமானியருடன் போர்களில் ஈடுபட்டனர். பாரசீகக் குடாப்பகுதி சுமார் 150 ஆண்டுகள் போத்துக்கேயரின் செல்வாக்குக்குள் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகள் உதுமானியப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தன.

பிற்காலத்தில் இப்பகுதிகளில் கடற் கொள்ளையர்களும் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி இந்தியா சென்றுவரும் பிரித்தானியக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், பிரித்தானியா இதிற் தலையிட்டது. 1820 இல் பிரித்தானியா இக் கரையோரத்தில் அமைந்திருந்த சேக்ககங்களுடன் ஒரு அரைகுறை அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 1853 ல் இது ஒரு முழுமையான ஒப்பந்தமாகியது. இதன்படி அந் நாடுகள் அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. இதன் பின் இவை அமைதி ஒப்பந்த நாடுகள் எனவும், இக் கரைப்பகுதி அமைதி ஒப்பந்தக் கரை எனவும் அழைக்கப்பட்டன. பிரித்தானியா இதில் தொடர்புள்ள 9 நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததேயன்றி அவற்றைக் குடியேற்ற நாடுகளாக நிர்வாகம் செய்யவில்லை.

பிற ஐரோப்பிய நாடுகளும் இப்பகுதிகள் மீது கண் வைத்திருந்ததால் பிரித்தானியாவும், அமைதி ஒப்பந்த நாடுகளும் மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக 1892 ஆம் ஆண்டில் இன்னொரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இதன்படி சேக்குகள், தங்கள் ஆட்சிப்பகுதிகளைப் பயன்படுத்த வேறு நாடுகளை அனுமதிப்பதில்லை என்றும், பிரித்தானியாவின் அனுமதியின்றி வேறு நாடுகளுடன் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்றும் இணங்கினர். இதற்குப் பதிலாக கடல்வழியான எல்லாத் தாக்குதல்களிலுமிருந்து அமைதி ஒப்பந்த நாடுகளைப் பாதுகாப்பது எனவும், தரை வழித்தாக்குதல்கள் எதையும் முறியடிக்க அவர்களுக்கு உதவுவதெனவும் பிரித்தானியா ஒத்துக்கொண்டது.

1960களின் தொடக்கத்தில் அபூ ழபீயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அபூ ழபீயின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல் கடந்த ஆட்சிப் பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற சிக்கல்களினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை.

பிரித்தானியர் வளர்ச்சி அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தனர். இதன் மூலம் அமீரகங்களில் சில சிறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவினர். அமீரகங்களின் சேக்குகள் அப்போது தமக்கிடையிலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக அவை ஒன்றை அமைக்க முடிவு செய்ததுடன் வளர்ச்சி அலுவலகத்தையும் பொறுப்பேற்றனர். அவர்கள் சமாதான ஒப்பந்த அவை ஒன்றை உருவாக்கி அக்காலத்தில் துபாயின் ஆட்சியாளரான சேக் ராசித் பின் சயீத் அல் மக்தூமின் சட்ட ஆலோசகராக இருந்த அதி பித்தார் என்பவரை செயலாளராகத் தெரிவு செய்தனர். இந்த அவை 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் அமையும் வரை இயங்கியது.

1968 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் தனது முடிவை அறிவித்ததுடன், 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அம்முடிவை உறுதிப்படுத்தியது. அவ்வொப்பந்தத்தோடு தொடர்புடைய ஒன்பது சேக்ககங்களும் கூட்டமைப்பை உருவாக்க முயன்றனவாயினும், 1971 நடுப்பகுதி வரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆகத்தில் பகுரைன் விடுதலை பெற்றது. செப்டெம்பர் மாதத்தில் கத்தாரும் விடுதலை பெற்றது.

அபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆட்சியாளர்கள் தமது இரு அமீரகங்களிடையே கூட்டமைப்பை உருவாக்க இணங்கி, அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், பின்னர் ஏனைய அமீரகத்தினரையும் அழைத்து அவர்களும் கூட்டமைப்பில் சேருவதற்கான வாய்ப்பை வழங்குவது எனவும் முடிவு செய்தனர். அதி பித்தார் 1971 டிசம்பர் 2 ஆம் திகதியளவில் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

1971 ஆம் ஆண்டில் பிரித்தானியா பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, சார்ஜா, துபாய், மற்றும் உம் அல் குவெய்ன் என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்ன்னும் கூட்டமைப்பை உருவாக்கின. 1972ல் ராஸ் அல்-கைமாவும் இவற்றுடன் இணைந்தது. எஞ்சிய இரண்டு நாடுகளான பஹ்ரைன், கத்தார் ஆகியவை இக் கூட்டமைப்பில் இணையாது விலகிக் கொண்டன.

அரசியல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்

உயர் கவுன்சில், ஏழு அமீரகங்களினதும் ஆட்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. ஜனாதிபதியும், உப ஜனாதிபதியும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை, உயர் கவுன்சிலினால் தெரிவுசெய்யப்படுவார்கள். அமைச்சரவை, உயர் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், எல்லா அமீரகங்களிலிருந்தும் தெரியப்படும் 40 உறுப்பினர் கூட்டாட்சி தேசிய அவை முன்வைக்கப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும். ஒரு கூட்டாட்சி நீதி மரைமையும் உண்டு; துபாயையும், ராஸ் அல் கைமாவையும் தவிர்ந்த ஏனைய அமீரகங்கள் இதில் இணைந்துள்ளன. எல்லா அமீரகங்களும், குடிசார், குற்றவியல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான இஸ்லாமியச் சட்டங்களையும், மதச் சார்பற்ற சட்டங்களையும் கொண்டுள்ளன.

பொருளாதாரம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.

அமீரகங்கள்[தொகு]

ஐக்கிய அரபு அமீரகம் - அமீரகப் பிரிவுகள்

முதன்மைக் கட்டுரை:ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்கள்

ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது:

புவியியல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் புவியியல்

ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.

மக்கள்தொகைப் பரம்பல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகைப் பரம்பல் ஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகை இயற்கைக்கு மாறான ஆண்-பெண் பரம்பலைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகையில் ஆண்களின் தொகை பெண்களின் தொகையிலும் இரண்டு மடங்கு ஆகும். 15-65 வயது எல்லைக்குட்பட்டோரின் ஆண்/பெண் பால் விகிதம் 2.743 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தப் பால் சமநிலையின்மை உலகிலேயே மிகவும் அதிகமானது ஆகும். இதனைத் தொடர்ந்து கட்டார், குவைத், பஹ்ரேன், ஓமான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வருகின்றன. இவையனைத்தும், வளைகுடாக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் மிக அதிகமான பல்வகைமைத் தன்மை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இந்நாட்டின் மக்கள்தொகையில் அமீரகத்தினர் 19% மட்டுமே. பிற அராபியரும், ஈரானியரும் 23% உள்ளனர். இங்கு வாழ்பவர்களில் சுமார் 73.9% மக்கள் பிற நாட்டவர்கள். உலகில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று. 1980களுக்குப் பின்னர் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளனர். வாழ்க்கைத் தரமும், பொருளாதார வாய்ப்புக்களும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும், தெற்காசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்காளதேசத்தவர், இலங்கையர் போன்றோருக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் மொத்தத் தொகை 2.15 மில்லியனாக இருந்தது. அரசியல் அகதிகளாகவும், புலம் பெயர்ந்தோராகவும் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அரபு நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வாழ்கின்றனர்.

2.4 மில்லியனைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகையில் சுமார் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாகும், அதிலும் 50% வீதமானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாகும். அயல் நாடுகளோடு ஒப்பிடும்போது இதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவானதாகும். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை இந்நாட்டினர் அனைவருமே இஸ்லாமியர்களேயாகும். சனத்தொகையில் சுமார் 80% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள்.

பண்பாடு[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பண்பாடு

இஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய ஐக்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்களைப் பேணுவதில் உறுதிபோண்டுள்ளது. அபுதாபி கலாச்சார நிறுவகத்தினூடான செயல்பாடுகளும் இதில் அடங்கும். சமூக வாழ்வில் மாற்றங்கள் தெரிகின்றன; பெண்கள் தொடர்பான மனப்போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. பாரம்பரியமான ஒட்டகச் சவாரியுடன், நவீன விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.

விடுமுறைகள்
நாள் தமிழ்ப் பெயர் உள்ளூர்ப் பெயர்
1 ஜனவரி புத்தாண்டு رأس السنة الميلادية
மாறும் அர்ப்பணிப்பு நாள் عيد الأضحى
மாறும் இஸ்லாமியப் புத்தாண்டு எல் அம் ஹெஜிர்
மாறும் இரவுப் பயணம் லைலத் அல் மிராஜ்
டிசம்பர் 2 தேசிய தினம் اليوم الوطني
மாறும் ரமழான் நிறைவு ஈத் அல் பித்ர்

நானாவித தலையங்கங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_அரபு_அமீரகம்&oldid=1769660" இருந்து மீள்விக்கப்பட்டது