எஸ். ஆர். கனகநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஆர். கனகநாயகம்
S. R. Kanaganayagam
இலங்கை செனட் சபை உறுப்பினர்
பதவியில்
1949–1957
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1904-05-16)16 மே 1904
இறப்பு15 மே 1989(1989-05-15) (அகவை 84)
சிட்னி, ஆஸ்திரேலியா
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
முன்னாள் கல்லூரிஇந்து ஆங்கிலப் பாடசாலை
விக்டோரியா கல்லூரி, சுழிபுரம்
யாழ்ப்பாணக் கல்லூரி
இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

சுப்பையா இரத்தினசிங்கம் கனகநாயகம் (Suppiah Ratnasingham Kanaganayagam, 16 மே 1904 – 15 மே 1989) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், இலங்கை செனட் சபையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கனகநாயகம் 1904 மே 16 இல் பிறந்தவர்.[1][2] இவர் இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சங்கரத்தை என்ற ஊரில் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை இந்து ஆங்கிலப் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.[1] பாடசாலைக் காற்பந்தாட்ட அணியில் இடம்பெற்றவர்.[1] பள்ளிப் படிப்பை முடித்து இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] சிறிது காலம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் ஆனார். இவர் 1933 ஏப்ரல் 10 இல் வழக்குரைஞர் சபையில் (Bar) இல் சேர்த்துக் கொள்ளப்பட்டு[2] யாழ்ப்பாணத்தில் பணியாற்றினார்.[1] கனகநாயகம் இந்துக் கல்விச் சபைக்கு பணிப்பாளராகவும், பிரதித் தலைவராகவும் இருந்தவர். 1953 ஆம் ஆண்டில் இவர் சிமித் முண்ட் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா சென்று படித்தார்.[2]

கனகநாயகம் சத்தியம்மா செல்வதுரை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சாவித்திரி தேவி, கனக ஈசுவரன், மகேஸ்வரன் என மூன்று பிள்ளைகள்.[1]

அரசியலில்[தொகு]

கனகநாயகம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உட்படப் பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.[1] 1947 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். 1949 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தனிச் சிங்களச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்ததை எதிர்த்து அக்கட்சியில் இருந்து விலகினார்.[1] பின்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் யாழ்ப்ப்பாணக் கிளையின் தலைவராக இறக்கும் வரை பணியாற்றினார்.[1]

பிற்கால வாழ்க்கை[தொகு]

கனகநாயகம் திருநெல்வேலியில் இந்து அனாதை விடுதி ஒன்றுக்குப் பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1]

ஈழப்போரில் பாதிப்படைந்து யாழ் நகரில் இருந்து 1984 இல் தனது பிறந்த ஊரான சங்கரத்தைக்குச் சென்று வாழ்ந்து வந்தார்.[1] பின்னர் இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் தனது மகளுடன் வாழ்ந்து வந்தார்.[1][2] இவர் 1989 மே 15 இல் சிட்னியில் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._கனகநாயகம்&oldid=3327651" இலிருந்து மீள்விக்கப்பட்டது