போலி எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எழுத்துப் போலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை எழுத்துப் போலி எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் இந்தப் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.

எழுதும்போது தோன்றும் போலி[தொகு]

  • ஐவனம் [1] என்பதை அஇவனம் என்றும், அய்வனம் என்றும் எழுதுவது.
  • ஔவை என்பதை அஉவை என்றும், அவ்வை என்றும் எழுதுவது.[2][3]

இந்த முறைமையை வடநூலார் சந்தியக்கரம் என்பர்.

மொழியில் தோன்றும் போலி[தொகு]

சொல்லில் ஒரு எழுத்து இருக்குமிடத்தில் மற்றொரு எழுத்து மயங்குகிறது. இதனைப் போலி என்கிறோம்

[ம்] > [ன்] மயக்கம்[தொகு]

மொழியின் இறுதியில் வரும் இந்த எழுத்துக்கள் மயங்கும். [4] நன்னூல் இதனைப் பொதுப்படக் கூறினாலும் வருமொழி உயிர்முதல் ஆயின் மயங்கும் என இலக்கிய ஆட்சிகளால் அறியலாம்.

  • அறம் [5] > அறன் [6], [7]
  • நிலம் [8] > நிலன் [9]
  • குலம் [10] > குலன் [11]

[ம்] > [ன்] மயங்காதவை[தொகு]

'ன்' எழுத்தில் முடியும் ஒன்பது சொற்கள் 'ம்' என மயங்குவது இல்லை என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அந்த 9 சொற்கள் இவை என இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.[12]

  1. எகின் [13] [14]
  2. செகின் [15]
  3. விழன் [16]
  4. பயின் [17]
  5. அழன் [18]
  6. புழன் [19]
  7. குயின் [20]
  8. கடான் [21]
  9. வயான் [22]
  • இச் சொற்களின் பொருளைச் சான்றுகளுடன் அடிக்குறிப்பில் காணலாம்.

[அ] > [ஐ] மயக்கம்[தொகு]

இந்த எழுத்துக்கள் மொழிமுதல் எழுத்தாகவும், மொழியிடை எழுத்தாகவும் வரும்போது மயங்கும்.[23]

  • பசல் - பைசல், மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல்
  • அரசு - அரைசு, முரஞ்சு - முரைஞ்சு, அரயர் - அரைசர்

[ந] - [ஞ] மயக்கம்[தொகு]

ஐகாரத்தை முதலெழுத்தாக உடைய நகரமும், யகர ஒற்றை அடுத்து வரும் நகரமும் ஞகரமாக மயங்கும்.[24]

  • ஐந்நூறு - ஐஞ்ஞூறு, பைந்நிலம் - பைஞ்ஞிலம்
  • பொய்ந்நான்றது - பொய்ஞ்ஞான்றது [25]

வழக்கில் காணப்படும் போலி எழுத்துக்கள்[தொகு]

  • பசலை - பயலை - பைதல்
  • மாதம் - மாசம்
  • பந்தல் - பந்தர்
  • சேரல் - சேரன்

அடிக்குறிப்பு[தொகு]

  1. மலைப்பகுதியில் புன்செய்ப் பயிராக விளையும் நெல்
  2. அகர இகரம் ஐகாரம் ஆகும். - தொல்காப்பியம் நூன்மரபு 21
    அகர உகரம் ஔகாரம் ஆகும். - தொல்காப்பியம் நூன்மரபு 22
    அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
    ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். - தொல்காப்பியம் நூன்மரபு 23

  3. அம்மு னிகரம் யகர மென்றிவை
    யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
    டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன. நன்னூல் 125

  4. மகர விறுதி அஃறிணைப் பெயரின்
    னகரமோ டுறழா நடப்பன வுளவே. - நன்னூல் 122
  5. அறம் கூறான் - திருக்குறள் - 181
  6. அறன் அறிந்து - திருக்குறள் 141
  7. அறன் வலியுறுத்தல் - திருக்குறள் அதிகாரம் 4 (இதில் வ எழுத்து 'அரையுயிர்')
  8. நிலம் போல - திருக்குறள் 151
  9. நிலன் நோக்கும் - திருக்குறள் 1094
  10. குலம் பற்றி - திருக்குறள் 956
  11. குலன் உடையான் - திருக்குறள் 223
  12. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
    னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப
    புகர் அறக் கிளந்த அஃறிணை மேன. - தொல்காப்பியம் மொழிமரபு 49 இளம்பூரணர் எடுத்துக்காட்டு
  13. எகின் என்பது புளிய மரத்தையும் (தொல்காப்பியம் மெய்யீற்றுப் பணரியல் 41)
  14. கரடியையும் (தொல்காப்பியம் மெய்யீற்றுப் பணரியல் 42) குறிக்கும்
  15. செகின் என்பது செவ்வானம், மனிதனின் தோள்பட்டை, செந்நிறக் காளை ஆகிய பொருள்களை உணர்த்தும் இந்தச் தொல் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னர் 'செகில்' என்று வழங்கலாயிற்று.
  16. விழன் இக்காலத்தில் விழல் என வழங்கப்படுகிறது. இது வேழ்ம் என்னும் நாணல்தட்டையைக் குறிக்கும். (வேழப்பத்து - ஐங்குறுநூறு மருதம் இரண்டாம் பத்து)
  17. பயின் என்பது அரக்கு (அகநானூறு 1)
  18. அழன் என்பது அழல். குறிப்பாகப் பிணம் எரியும் தீ
  19. புழன் என்பது புழல் என வழங்கப்படும் அடுப்பு ஊதும் ஊதுகுழல்
  20. குயின் என்பது துளையிட்ட மணியைக் குறிக்கும். (திருமணி குயினர் - மதுரைக்காஞ்சி 511)
  21. கடான் என்பதை இக்காலத்தில் கடா என வழங்குகிறோம். கடான் என்பது ஆண் எருமை.
  22. வயான் என்பதை இலக்கியங்கள் வயா என வழங்குகின்றன. பிள்ளைத் தாய்ச்சிகள் மண்ணை உண்ணும் வேடுகையை இது குறிக்கும். வயா என்பது வயவு எனவும் கழங்கப்படும். நிலா என்பது நிலவு என வழங்கப்படுவது போன்றது இது.
  23. அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். - நன்னூல் 123
  24. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
    ஞஃகா னுறழு மென்மரு முளரே. - நன்னூல் 124
  25. பொய் நீண்டுகொண்டே போயிற்று
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_எழுத்து&oldid=3289868" இலிருந்து மீள்விக்கப்பட்டது