எலுமிச்சை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியற் பெயர் கொண்டது. இது தேசிக்காய், தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சம் சாற்றில் 5% அளவுக்கு சித்திரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
[தொகு] வரலாறு
இது இந்தியா, வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. இது முதலில் பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் பின்னர் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இஸ்லாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும், நடுநிலக்கடல் பகுதிகளிலும் இது பரவியிருந்தது.