எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று புறநானூறு 397-ம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இவரால் பாடப்பட்டவன். பாடாண் திணை எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலின் துறை பரிசில் விடை என்றும், கடைநிலை விடையும் ஆம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி எழுந்தது, புள் குடம்பையிலிருந்து குரல் எழுப்புகின்றன, பொய்கை மலர்கள் கண் விழித்தன, பைப்பயச் சுடரும்(விண்மீன்களும்) சுருங்கின, முரசும் வலம்புரியும் ஆர்க்கின்றன - இப்படி இரவுப் புறங்கண்ட காலை தோன்றிற்று என்று கூறி அரசனை புலவர் துயில் எழுப்புகிறார்.

எழுந்த அரசன் புலவரின் பசியைப் போக்கி, பாம்புத்தோல் போன்ற அழகிய ஆடை உடுத்தி, செல்வவளம் தந்து அனுப்பிவைக்கிறான்

இவன் ஊரில் வயலில் தாமரை பூக்கும்போது அதைப் போல முற்றத்தில் அந்தணர் தீ வளர்ப்பார்களாம்.

இவன் நிழலில் வாழும்போது கடல் வற்றிப் போனாலும், ஞாயிறு தெற்கில் எழுந்தாலும் தனக்குக் கவலை இல்லை என்று புலவர் பாடுகிறார்.