எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

நியூயார்க் நகரிலுள்ள 102 மாடிகளைக் கொண்ட ஆர்ட் டெக்கோ கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building), ஷ்ரெவ், லாம்ப் மற்றும் ஹேர்மன் அசோசியேட் நிறுவனத்தினால் 1930ல் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இது 102 ஆவது தளத்திலுள்ள அவதான நிலையம் வரை, 390 மீ உயரம் கொண்டது. 2001 இல் தாக்குதலுக்குள்ளாகி அழிந்துபோன உலக வர்த்தக மையக் கட்டிடம் கட்டப்படுவதற்குமுன், இந்த நகரத்தில் அதி உயர்ந்த கட்டிடமாக இருந்தது. உலகின் அதியுயர் கட்டிடமாகவும் பல ஆண்டுகள் இருந்தது. கிறிஸ்லர் கட்டிடத்திடமிருந்து, உலகின் அதியுயர் கட்டிடமென்ற பெயரைத் தட்டிச் செல்வதற்காக, இதன் கட்டுமானப் பணிகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இக்கட்டிடம், 1931, மே 1ல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 1940கள் வரை இதன் பெருமளவு அலுவலகத்தளங்கள் வாடகைக்கு எடுக்கப்படாமலேயிருந்தன.

இதன் உச்சியிலுள்ள, பொது அவதான நிலையத்திலிருந்து, நகரின் கவர்ச்சியான காட்சியைக் காணமுடியும். இது பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். கட்டிடத்தின் மேற்பகுதி, ஒளிபாச்சும் மின் விளக்குகளினால், இரவில், பல்வேறு நிற ஒளிகளில், ஒளியூட்டப்படுகின்றது. இந் நிறங்கள் காலங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருத்தமாகத் தெரிவு செய்யப்படுகின்றது. உலக வர்த்தக மையத்தின் அழிவைத்தொடர்ந்து பல மாதங்கள், இது சிவப்பு, வெள்ளை மற்றும் நீலத்தில் ஒளியேற்றப்பட்டது.

1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் குண்டுவீச்சு விமானம் 79 ஆம் மாடியின் வடக்குப் பக்கத்தில் , தேசிய கத்தோலிக்க நல்வாழ்வுக் கவுன்சில் அமைந்திருந்த பகுதியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் இறந்தனர். அதனால் ஏற்பட்ட தீ 40 நிமிடத்தில் அணைக்கப்பட்டது.

எம்பயர் ஸ்டேட் கட்டிடம், அமெரிக்கக் குடிசார் பொறியியல் சொசைட்டி (American Society of Civil Engineers) யினால் நவீன ஏழு அற்புதங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இது 350 5 ஆவது அவெனியூ, 33ஆவது மற்றும் 34ஆவது வீதிகளுக்கு இடையே, மான்ஹற்றன் மத்திய நகரில் அமைந்துள்ளது.

பெயர்[தொகு]

நியூயார்க் மாநிலத்தின், "எம்பயர் ஸ்டேட்" என்ற செல்லப் பெயர் தொடர்பிலேயே இக் கட்டிடத்துக்குப் பெயரிடப்பட்டது.

திரைப்படங்களில்[தொகு]

இக் கட்டிடம் சம்பந்தப்பட்ட, மிகவும் பிரபலமான, மக்கள் கலாச்சார வெளிப்பாடாகக் கருதப்படக்கூடிய ஒரு விடயம், 1933ல், வெளியிடப்பட்ட, கிங் கொங் ஆங்கிலத் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய பாத்திரமான கிங் கொங் என்னும் இராட்சத மனிதக் குரங்கு, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தப்புவதற்காக, இந்தக் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி இறுதியில், அங்கிருந்து விழுந்து இறந்து விடுகிறது. 1983ல் இப் படத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் போது, ஒரு காற்றூதப்பட்ட, கிங் கொங் உருவம் உண்மையான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் வைக்கப்பட்டது. எனினும் இது ஒருபோதும் முழுமையாகக் காற்றூதப்பட்டு இருக்கவில்லை. Love Affair மற்றும் Sleepless In Seattle போன்ற ஆங்கிலத் திரப்படங்களில் இக் கட்டிடத்தின் அவதானிப்பு நிலையம், படத்தில் வரும் காதலர்கள் சந்திக்கும் இடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரக வாசிகளின் படையெடுப்பு தொடர்பான, ஐ லவ் லூசி படத்திலும் இவ்விடம் இடம் பெறுகின்றது. பப்பற் என்னும் அறிவியற் கற்பனைத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அங்கமான தண்டர்பேர்ட்ஸ் இக் கட்டிடத்தைத் தண்டவாளங்களிலேற்றி வேறிடத்துக்கு நகர்த்தும் முயற்சியைக் காட்டுகிறது.

நிகழ்வுகள்[தொகு]

விமான தாக்குதல், 1945[தொகு]

1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் என்ற விமானத்தை வில்லியம் பிராங்க்ளின் ஸ்மித்[1] என்பவர் ஓட்டி வந்தார். கடும் பனிப் பொழிவின் காரணமாக, விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலையில் தவறுதலாக கட்டிடத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 79 மற்றும் 80ம் தளங்களின் மத்தியில் மோதியது. மோதிய அதிர்ச்சியின் காரணமாக விமானத்தின் எந்திரப்பகுதி, அதற்கு அடுத்த தளத்தின்மீது மோதியது. விமானத்தின் மற்றொரு பாகம், கட்டிடத்தின் உயர்த்தியை தாக்கியது.கட்டிடத்தின் தாக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட தீ, 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. இருப்பினும், 14 பேர் இறந்தனர்[2][3]. அதற்குப் பின்னர் வந்த திங்கட்கிழமை, கட்டிடம் மீண்டும் செயல்படத் துவங்கியது. சம்பவம் நடந்த ஒராண்டு கழித்து, மற்றொரு விமானம் இதேபோல மோத நேரிட்டது. ஆனால், விமான ஓட்டியின் சாதுர்யத்தால் விமானத்தை திசை திருப்பிவிட்டார்[4].

தற்கொலைகள்[தொகு]

2006ம் ஆண்டின் சராசரியாக 30க்கும் மேற்பட்டோர், கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்[5]. கட்டிடத்தின் முதல் தற்கொலையானது, கட்டிடம் முடிப்பதற்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. 1947ம் ஆண்டில் தொடர்ச்சியான மூன்று வாரங்களில், அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர்[6]. மே மாதம் 1ம் நாள் 1947ம் ஆண்டு, எவிலின் மெக்ஹல் (22) என்பவர், 86வது தளத்திலிருந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்[7]. திசம்பர் மாதம் 1943ம் ஆண்டு, வில்லியம் லாயடு ராம்போ என்பவரும் அதே தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்[8].

நவம்பர் மாதம் 3ம் நாள் 1932ம் ஆண்டு, பெட்ரிக் எக்கர்ட் என்பவர் மட்டுமே, கட்டிடத்தின் உயர் மேல்தளமான 102ம் தளத்திலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்[8].

தற்கொலை முயற்சிகள்[தொகு]

திசம்பர் மாதம் 2ம் நாள் 1979 ஆண்டு, எல்வித்தா ஆதம் என்பவர் 86வது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால், இடுப்பெழும்பு முறிவுகளுடன் காப்பாற்றப்பட்டார்[9][10][11]. ஏப்ரல் மாதம் 25ம் நாள் 2013ம் ஆண்டு, 85வது தளத்திலிருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்[8].

360°-Panorama


துப்பாக்கிச்சூடுகள்[தொகு]

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலும் அதன் முன்பக்கத்திலும் இரண்டு முக்கிய துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன.1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத் 23ம் தேதி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 86 வது தளத்தின் காட்சி மாடத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவனால் 7 பேர் சுடப்பட்டனர். 69 வயதுடைய பாரஸ்தீன ஆசிரியரான அபுல் கமால் எனும் பெயருடைய அந்நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ற அறுவர் காயமும் அடைந்தனர்.இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நிகழ்ந்த சச்சரவு சம்பவங்களுக்காக இது நடத்தப்பட்டதாக கூறப்பட்டது [12].

இக்கட்டிடத்தின் ஐந்தாவது வாயிலின் ஓர நடைபாதையில் ஆகஸ்ட் 24, 2012 அன்று 9.00 மணியளவில் ஜெஃப்ரி டி. ஜான்சன் (வயது 58) என்பவர் 2011 ல் தான் பணிநீக்கப்பட்டதால் எழுந்த ஆத்திரத்தால் தன் முன்னாள் சக பணியாளரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கி ஏந்திய அந்நபரை எதிர்கொண்டு 16 முறை அந்நபரை நோக்கிச் சுட்டனர். இருந்தபோதிலும் இச்சம்பவத்தால் அருகிலிருந்த ஒன்பது பேர் காயமடைந்தனர்.அதில் மூவர் நேரடியாக குண்டுகளால் தாக்கப்பட்டனர். [13]

கட்டிடக்கலை[தொகு]

உட்பக்க வடிவமைப்பு (Interior)[தொகு]

எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 102 வது தளம் வரை 1,250 அடி (381 மீட்டர்) உயரமும் 2013 அடி (61.9 மீட்டர்) உயரம் கொண்ட உச்சி கோபுரமும் சேர்த்து 1,453 அடி 8 9⁄16 அங்குலம் (443.092 மீட்டர்) உயரம் கொண்டது.இக்கட்டிடத்தின் 2,158,000 சதுர அடிகள் பரக்களவு (200,500 மீ2) கொண்ட 85 அடுக்குகள் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பயன்பாடுகளுக்கு வாடைகைக்கு விடப்பட்டள்ளது. 86 வது தளத்திர் ஒரு உள் மற்றும் வெளிப்புற பார்வையாளர் மேடை உள்ளது. மீதமுள்ள 16 தளங்கள் கலை அலங்கார வடிவமைப்பு கோபுரமாக உள்ளது. 102 வது தளம் கண்காணிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 203 அடிகள் கொண்ட உச்சி கோபுரம் ஒளிபரப்பு வானலை வாங்கி அலைக்கம்பங்களும் (Broadcasting Antenna) முகட்டு உச்சியில் இடி தாங்கியும் நிறுவப்பட்டுள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 100 தளங்கள் கொண்ட உலகின் முதல் கட்டிடமாகும்.இது 6,500 சன்னல்களையும், 73 மின் தூக்கிகளையும் தரையிலிருந்து 102 வது மாடி வரை 1,860 படிகளையும் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 2,768,591 சதுர அடி (257,211 மீ2). இக்கட்டிடத்தின் அடித்தளம் இரண்டு ஏக்கர் (8,094 மீ2).10118 என்ற சொந்த சிப் (ZIP) குறியீடு (அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 5 அல்லது 9 எண்கள் கொண்ட அஞ்சல் இலக்கம்) கொண்ட இந்த கட்டிடத்தில் 1,000 தொழில் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கான தலைமை அலுவலகங்கள் உள்ளன.2007 ஆண்டு நிலவரப்படி இக்கட்டிடத்தில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 21,000 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலக வளாகமாக இக்கட்டிடம் திகழ்கிறது

இக்கட்டிடம் 40,948,900 அமெரிக்க டாலர் (2016 நிலவரப்படி இதன் மதிப்பு $644,878,000 ) செலவில் கட்டப்பட்டள்ளது.கட்டிடத்தின் வாழ்நாளை கருத்திற்கொண்டு முன்கணிப்பு வடிவமைப்பு முறையில் பல கட்டங்களாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் இதுவாகும், கட்டிடத்தின் எதிர்கால நோக்கம் மற்றும் பயன்கள் முந்தைய தலைமுறைகளின் தேவைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. மின்சார அமைப்பின் மேலதிக வடிவமைப்பு கட்டிடத்தின் நயத்திற்குச் சான்று பகிர்வதாக உள்ளது.

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திற்குள் உள்ள மின் தூக்கிகள்


கலையம்சம் கொண்ட 16 தளங்கள் நியூயார்க்கில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டிடக்கலை வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.33 வது மற்றும் 34 வது தெருக்களில் இக்கட்டிடத்திற்கு வருவதற்காக உள்ள நுழைவாயிலில் நவீனத்திறன் வாய்ந்த எஃகு விதானங்கள் உள்ளன. இரண்டு அடுக்கு உயர் தாழ்வாரங்கள் மின்தூக்கி மையகத்திற்கு எஃகு மற்றும் கண்ணாடி பாலங்கள் வழியாகக் கடந்துசெல்கின்றன.இத்தளத்தில் மின் உயர்த்தி மையம் 67 மின் உயர்த்திகளைக் கொண்டுள்ளது.

முகவாயில் அறையானது (lobby) மூன்று தளங்கள் உயரமுடையது.அலுமினியத்தாலான உச்சி கோபுரமானது 1952 வரை ஒளிபாப்பு கோபுரம் நிறுவப்படாமல் இருந்தது.1964 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கண்காட்சிக்காக ராய் ஸ்பார்க்கியா மற்றும் ரெனீ நெமாரோவ் ஆகியோரால் 1963 ல் இக்கட்டிடத்தின் வடக்குத் தாழ்வாரத்தில் எட்டு ஒளியேற்றப்பட்ட சட்டங்கள் நிறுவப்பட்டது.பாரம்பரியமான ஏழு அதியங்களுக்கு அடுத்ததாக இது உலகின் எட்டாவது அதிசயமாக சித்தரிக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "750th Squadron 457th Bombardment Group: Officers – 1943 to 1945". பார்க்கப்பட்ட நாள் April 6, 2009.
  2. "Empire State Building Withstood Airplane Impact". Tms.org. பார்க்கப்பட்ட நாள் October 11, 2010.
  3. "Plane Hits Building – Woman Survives 75-Story Fall". Elevator-world.com. Archived from the original on ஜூலை 10, 2011. பார்க்கப்பட்ட நாள் October 11, 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. Glanz, James; Lipton, Eric (September 8, 2002). "The Height of Ambition". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F02E2DD1F3FF93BA3575AC0A9649C8B63&sec=&spon=&pagewanted=10. 
  5. "iht.com". Archived from the original on 2009-02-12. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  6. Reavill, Gil; Zimmerman, Jean (2003). Manhattan. Compass American Guides (4th ). New York: Compass American Guides. பக். 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-676-90495-6. 
  7. "Picture of the Week". Life: 42–43. May 12, 1947. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-3019. http://books.google.com/?id=ZEgEAAAAMBAJ&pg=PA42. பார்த்த நாள்: October 11, 2010. 
  8. 8.0 8.1 8.2 "Leaps to His Death Off Empire Tower". The New York Times. November 4, 1932. http://select.nytimes.com/gst/abstract.html?res=FB0610FF355516738DDDAD0894D9415B828FF1D3. பார்த்த நாள்: October 4, 2011. 
  9. Douglas, George H. (2004). Skyscrapers: A Social History of the Very Tall Building in America. London: McFarland. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7864-2030-8. http://books.google.com/?id=IxDUUqut-XkC&pg=PA173. பார்த்த நாள்: October 11, 2010. 
  10. Broughton, Geoffrey (1987). Expressions. London: Collins ELT. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-00-370641-9. 
  11. Goldman 1980, p.63.
  12. "Gunman shoots 7, kills self at Empire State Building". CNN. February 24, 1997 இம் மூலத்தில் இருந்து April 20, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100420005919/https://www.cnn.com/US/9702/24/empire.shooting/. பார்த்த நாள்: January 4, 2015. 
  13. "Police: All Empire State shooting victims were wounded by officers". CNN. August 24, 2012. http://edition.cnn.com/2012/08/25/justice/new-york-empire-state-shooting/index.html. பார்த்த நாள்: January 4, 2015. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பயர்_ஸ்டேட்_கட்டிடம்&oldid=3574979" இலிருந்து மீள்விக்கப்பட்டது