எட்டி சாயலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்டி சாயலன் கதை சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. [1] காவுந்தி ஐயை இந்தக் கதையைச் சொல்கிறார். கண்ணகியை மாதரியிடம் அடைக்கலப் படுத்துமுன் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளின் பெருமையைக் கூறுவதற்காக இந்தக் கதையைச் சொல்கிறார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் சமணத் துறவி சாரணர்க்குக் கல்கோயில் (சிலாதலம்) ஒன்று இருந்தது. அதன் தலைவர் சாரணரிடம் சாவக நோன்பிகள் அறம் கேட்பது வழக்கம். ஒருநாள் அறம் கேட்டுக்கொண்டிருந்தபோது தேவகுமரன் ஒருவன் தோன்றினான். அவன் மேனியைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவனது கைகள் மட்டும் குரங்குக் கைகளாக இருந்தன. [2] இவன் யார் என்று சாவகர்கள் சாரணரிடம் கேட்டனர். அவர் சொன்னார்.

எட்டி சாயலன் என்பவர் ஒரு சமணத் துறவி. அவர் மனைவி பட்டினி நோன்பிகளுக்கு உணவளித்துவந்தாள். ஒருநாள் நோன்பிகள் உண்ணும்போது உதிர்ந்த உணவை அங்கு வந்த குரங்கு ஒன்று உண்டு மகிழ்ந்தது. கண்ட எட்டி சாயலன் அந்தக் குரங்கையும் மகவாகப் பேணுமாறு அறம் வளர்த்த தன் மனையோளிடம் கூறினார். அதுமுதல் அவளும் தன் அற உணவில் ஒரு பகுதியை அந்தக் குரங்குக்கு அளித்துப் பேணிவந்தாள். அந்தக் குரங்கு அவள் உணவை உண்டு உயிர் வாழ்ந்து இறந்தது.

மத்திம நாட்டு வாரணம் என்னும் ஊரில் வாழ்ந்த உத்தர கௌத்தன் என்பவனுக்கு அந்தக் குரங்கு மகனாகப் பிறந்தது. அந்தக் குரங்குமகன் 32 அண்டுகள் தானம் பல செய்து விண்ணுலகு எய்தினான். அவன்தான் இங்கு முற்பிறவிக் கைகளுடன் தோன்றுகிறான் என்று கற்கோயில் சாரணர் சாவக நோன்பிகளுக்கு விளக்கினார்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிலப்பதிகாரம் 15 அடைக்கலக் காதை.
  2. முசுகுந்தன் நினைவுகூர்க.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டி_சாயலன்&oldid=1839569" இலிருந்து மீள்விக்கப்பட்டது