உலக பார்முலா 1 ஓட்டுனர் வாகையர் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பார்முலா 1 ஓட்டுனர் வாகையர் பரிசு (Formula One World Drivers' Championship , WDC) ஒரு பருவத்தில் நடத்தப்படும் பல்வேறு கிராண்ட் பிரீ பார்முலா 1 போட்டிகளில் போட்டியிடும் பந்தய ஓட்டுனர்களிடையே மதிப்பீடு புள்ளிகள் முறைமையில் கூடுதல் புள்ளிகள் பெற்றவருக்கு பன்னாட்டு தானுந்து கூட்டமைப்பால் (FIA) வழங்கப்படுவதாகும். இப்பரிசு முதன்முதலாக 1950ஆம் ஆண்டு பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நினோ ஃபாரினாவிற்கு வழங்கப்பட்டது. முதன்முதலாக பல்லாண்டு பரிசினைப் பெற்றவர் 1952 மற்றும் 1953ஆம் ஆண்டுகளில் வென்ற அல்பர்டோ அஸ்காரி ஆவார். தற்போது 2010 மற்றும் 2011 பருவங்களின் வாகையாளராக செபாஸ்டியன் வெட்டல் விளங்குகிறார்.

ஓரு பருவத்தின் அனைத்து கிராண்ட் பிரீ போட்டிகளும் முடிவடைவதற்கு முன்பே மதிப்பீடு புள்ளிகளில் மற்றொருவர் முந்த முடியாத அளவில் உள்ள ஓட்டுனர் வாகையாளராக அறிவிக்கப்படகூடுமானாலும் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்த பின்னரே பன்னாட்டு தானுந்து கூட்டமைப்பால்் வெற்றி பெற்ற வாகையாளர் அறிவிக்கப்படுகிறார். இதுவரை நடந்துள்ள 61 பருவங்களில் 25 முறை இப்பரிசு கடைசி போட்டியில் முடிவாகி உள்ளது. ஒரு பருவத்தில் வெகு துவக்கத்திலேயே முடிவானது 2002ஆம் ஆண்டிலாகும்; மைக்கேல் சூமாக்கர் அவ்வாண்டில் ஆறாவது போட்டியிலேயே இப்பரிசை "வென்றார்".

இப்பரிசினை இதுவரை 32 வெவ்வேறு ஓட்டுனர்கள் வென்றுள்ளனர். செருமனியின் மைக்கேல் சூமாக்கர் ஏழு முறை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 2000 முதல் 2004 வரை ஐந்து முறை வென்று தொடர்ந்த ஆண்டுகளில் கூடுதலாக வென்ற சாதனையும் படைத்துள்ளார். நாடுகளில் ஐக்கிய இராச்சியத்தின் ஓட்டுனர்கள் பத்து முறை வென்றுள்ளனர்.

உசாத்துணைகள்[தொகு]